Monday, August 06, 2007

பூரணி கவிதைகள் : புத்தக அறிமுகம்

Image hosted by Photobucket.com


பூரணி கவிதைகள் : புத்தக அறிமுகம்-1
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
ஆண்டு : டிசம்பர் 2003(முதல் பதிப்பு)
ISBN 81-87477-65-2



சமீபத்தில் டொராண்டோ சென்ற போது அங்கு நடந்த புத்தக கண்காட்சியில் இந்த புத்தகத்தை காண நேரிட்டது. இந்த புத்தகத்தை புரட்ட எனக்கு தூண்டுதலாய் அமைந்தது, அதன் முகப்பு அட்டையே. இதில் ஒரு வயதான மூதாட்டியின் படம் இருந்தது. அந்த முதுமையான முகத்தில் ஒரு சிறிய கம்பீரம்.

இவர்தான் இந்த புத்தகத்தின் ஆசிரியை என்று அறிந்த போது சற்றே திகைப்பும் ஒரு மகிழ்ச்சியும் உண்டானது.

முதலில் இந்த புத்தகத்தை பற்றி:

இந்த புத்தகம் 1929 ஆம் ஆண்டிலிருந்து 2003 ஆம் ஆண்டு வரை பூரணி என்ற சம்பூர்ணம்மாளின் படைப்புகளை தாங்கி நிற்கின்றது.

எழுத்துக்களினூடே படைப்பாளியும் வாசிக்கப்படுகின்றார் என்பதை என் வாசிப்பில் நான் உணருகின்றேன். அப்படி பார்க்கும் போது, முடுகு(1930-45) என்ற ஒரு கவிதையில் அந்த கால மாற்றங்களை அழகாக சொல்லி, மாற்றத்தை ஏற்றுக் கொள்கின்றார். இதில் உள்ள எளிமையும் நிறைவாய் உள்ளது. அக்கவிதையின் கடைசி வரிகள் சில:

"தண்ணீர் குடம் தூக்கும்
தருணியர்கள் இப்போ
டென்னிஸ் விளையாட
கிளப்புகள் உண்டாச்சு
ஏலேலோ இயற்கையதின் தன்மை எப்பொழுதும் மாறுதலே
இதையறியா பல பெரியோர் கண்டு இகழ்வதும் அறியாமையே".

இவருக்கு பாடு பொருள் பல உண்டு. இவர் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கவில்லை தம் படைப்புகளில். விடுதலை போராட்டத்தை ஆதரித்து, மக்களுக்கு பழக்கமான மெட்டுகளில் பாடலமைத்து அதை வெளிப்படுத்தியது மிகவும் போற்றத்தக்கது. அரிசிமாக் கோலமும், வெள்ளி மின்னலும், மேரு மலைகளும், கோடை மதியமும், குடியானவனின் கிராமமும் இவர் பார்வையிலே கவிதையாகின்றன. பெண்களின் எழுச்சியையும் இவரது கவிதைகள் பிரதிபலிக்கின்றன.
பெண் என்ற கவிதையில்

" பட்டமென்ன சட்டமென்ன
பாராளும் ஜோரென்ன
கட்டினவன் மோசமென்றால்
ரத்து செய்யும் உரிமையென்ன

இன்றைய பெண்குலமே
எழுச்சி கொண்டததிசியம்தான்"

என்று கூறிவிட்டி, அதே வேகத்தில்

"என்றாலும் தீமைகள்
எல்லாமும் முடியவில்லை" என்றும் எச்சரிக்கின்றார்.

இருக்கும், பார்க்கும், உணரும் நிகழ்வுகள் மட்டுமே இவரிடம் கவிதையாகவில்லை.

சாத்திரம் (1965-67) என்ற ஓர் கதை கவிதையை படைக்கின்றார்.
அது ஒரு அற்புதம். பெண்ணின் உளப்பாங்கையும், வெட்டி தர்பார் செய்யும் தந்தையும், காதல் மருகும் ஓர் ஆண்மகனையும் காட்டுகின்றார். இதில் வெற்று சனாதன தாங்கிகளையும் ஒரு பிடி பிடிக்கின்றார். இவர்களது தன்மையை மிக அழகாகவும் தெளிவாகவும் சொல்கின்றார். (அவரிடம் அனுமதி வாங்கிய பின் இதை நான் தனி பதிவாக இடுகின்றேன்).

சென்ற நூற்றாண்டில் 1970 களுக்கு பின் எழுதியதில் என்னைக் கவர்ந்த ஒரு கவிதை:

காலை ஒலிகள்

பத்துக் குடித்தனங்கள்
ரேடியோக்கள்
பக்திப்பா, துதிப் பாடல்
சுப்ரபாதம்
வீதியிலே கிஸ்னாயில்
கீரை சப்தம்...
...
....
போரிங்பம்பு அடிப்பதனால்
தடதடப்பு.

என்று போகின்றது. இது ஒரு காட்சியாக கண்முன் விரிகின்றது.

பெண் - என்ற தலைப்பில் மீண்டும் ஒரு கவிதை வருகின்றது. இந்த கவிதை நாட்டுல பெண்கள் முன்னேறிட்டாங்க என்று கூறும் நபர்களுக்கு சவுக்கடியாய் இருக்கின்றது. இதில் இவர் காலத்தை பதிவு செய்துள்ளார். 1940-களில் பெண்களுக்கு இருந்த நிலை 1970-களுக்கு பிறகும் தொடர்கின்றது என்பதை அக்கவிதை உரைக்கின்றது. அது அவலமன்றோ?

2003-ல் அவர் எழுதிய கவிதைகள், ஹிந்துத்துவாவை சாடுகின்றது. அகலிகை பற்றியும் சீதை பற்றியும் அவர் எழுதியுள்ளது ஆழமான மன மாற்றத்தை ஏற்படுத்தாது என்றாலும் நிச்சயம் பெண் கொடுமைக்கு எதிரான தொண்ணூறு வயது கிழவியின் மௌனமான மன வலி ரேகைகளை அதில் காணலாம்.

இப்புத்தகத்தின் முத்தாய்ப்பாக இருப்பது கபீர் கவிதைகள். இவரது மொழிபெயர்ப்பு மிகவும் கூர்மையானதாகவும், மனதில் தைக்கும் படியும் உள்ளது
காட்டாக,

"பரத்திலே மனம் கலந்தது அந்த
மனத்திலே பரம் கலந்தது
ஜலதிலுப்புக் (ஜலத்தில் உப்பு) கலந்த பின்னும்
ருசித்தபோது தெரிந்தது"

இவரது கவிதை புத்தகம் ஒரு விடுதலை விரும்பியின் கால ஆவணம்.

இவரைப் பற்றி:

இவரை பற்றி இந்த புத்தகத்தில் குறிப்பு உள்ளது.

இவரது சொந்த ஊர் பழனி. வாழ்க்கைப்பட்டது தராபுரம். பின்பு சென்னையில் வசிக்கின்றார் என்று அறிகின்றேன். (இவரது மகளும் கவிதைகள் படைக்கின்றார்.பெயர் கிருஷாங்கினி. இவர் நன்கு அறியப்பட்டவர். தட்ஸ் தமில் . காமில் இவரது சில படைப்புகள் உள்ளது)
மேலும் இப்புத்தகத்திற்கு அம்பை முன்னுரை எழுதியுள்ளார். அதுவே மிகவும் அருமையாக உள்ளது.

( வரும் திங்கள் அன்று புத்தகத்தின் முகப்பை தெளிவான முறையில் இட முயல்கின்றேன்)

No comments: