Saturday, February 19, 2005

பணி இடமும், பனி இடமும் !!

அன்பு நண்பர்களுக்கு,
பாலாஜி-பாரி யின் வணக்கங்கள்.நான் கடைசியாக வலைப் பதிந்தது அக்டோபர் மாதம் என நினைக்கின்றேன். இப்பொழுது மீண்டும் வலை பதிய வந்துள்ளேன்.
இந்த கால இடைவெளியில் பல நிகழ்வுகள். என் பணியிடம் இப்போது பனி இடம். நான் கனடாவில் புதிய பணியை ஒப்புக் கொண்டுள்ளேன். இந்த இடம் மிகவும் அழகாகவும், பணி நிறைவை தருவதாகவும் உள்ளது. இங்கு வந்து மூன்று மாதங்கள் கழிந்து விட்டன. இங்குதான் முதன் முதலில் நேரடியாக பனியை பார்க்கின்றேன். நான் இப்போது இருப்பது கிழக்கு கடற்கரையில். இங்கு பனி விழுவது அதிகம், என்றாலும் அவ்வப்போது வந்து போகும் பனிப்புயலினால் வீட்டிற்குள்ளேயே அடைபட்டிருக்க நேரிடும். ஒரு நாள் விவரம் தெரியாமல் காலையில் கடமையாக தொழிலுக்கு கிளம்பி, பாதி வழியிலேயே மேலும் செல்ல இயலாமல் வீட்டிற்கு வந்து ரேடியோவை திருகினால், “ஐயா, இன்னிக்கு லீவுங்கையா” என்ற சேதி .

இங்கு வந்து இந்த காலவெளி ஓட்டத்தில் கலந்து இளைப்பாறும் சமயத்தில் இனி வலை பதியவும் இயலும் எனத் தோன்றுகின்றது. எனது பதிவு இதுகாறும் கூட்டாஞ்சோறு போல் இருந்தது. மதி அவர்களின் உதவியுடன் தனி தனி பண்டமாக இனி உங்களுக்கு வழங்க அவா. ஆதலினால் இந்த புதிய வீட்டிற்கு குடி புகுதல்.
முதலில் செய்ய வேண்டியது எப்போதோ தொடங்கிய ஒரு தொடர்கதையை முடித்து வைத்தல். பின்பு பார்த்த படங்கள் பற்றிய ஒரு பதிவு. அறிவியல் பதிவுகள் சில. இதெல்லாம் தாள்களில் எழுதப்பட்டு சிதறிக் கிடக்கின்றது. ஒவ்வொன்றாக அந்தந்த categories -ல் பதிய எண்ணம். பின்பு “நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்” என்ற தொடரையும் தூசி தட்டுகின்றேன்.

இனி மேல் நான் paari.weblogs.us என்ற இடத்தில் மட்டுமே வலை பதிய உள்ளேன். தாங்கள் மேலுள்ள சுட்டியில் எனது புது இடத்திற்கு வர முடியும்.
அன்புடன்
பாலாஜி-பாரி

Tuesday, February 15, 2005

நான் உணர்ந்த நீ

மலர்கள் நிறைந்த சோலையை காட்டினேன்
வண்டுகளின் இருப்பே உன்னை உறுத்தியது
என்னுள் நந்தவனங்கள் அழிந்தன

மஞ்சள் மாலை மேகங்கள் காட்டினேன்
"ஓ!.. அதனால் என்ன?" என்றாய்
என் மனதில் தொடு வானம் இருண்டது

நட்சத்திரங்களின் ஒளிச் சமிஞ்ஞைகளை சுட்டினேன்
நீ மின்மினிகளில் உன்னை பார்த்தாய்
எனது கிரகத்தில் அடுப்பு அணைந்தது.

நான் இப்போது செயலற்று விலகுகிறேன்
இனியும் என்னுள் இருக்கும்
உன் இயற்கையை கொல்லலாகாது.

-பாலாஜி-பாரி