Monday, August 06, 2007

அறிவியல் ஆயிரம்

நமது செயல்பாடுகளை மேம்படுத்த இன்றைய உலகில் தினமும் எண்ணற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அவை பயன்பாட்டு அளவிலும், கோட்பாட்டு அளவிலும் மானுடத்திற்கு அரிய பல பயன்களை அளிக்கின்றன. அறிவியல் ஆயிரம் பகுதியில் இத்தகைய கண்டுபிடிப்புகளை சிறிது வெளிச்சமிட்டு காட்ட முயல்கின்றேன். மேலும் இதன் பயனாக பல தமிழ் அறிவியற் சொற்களும் கலந்துரையாடலுக்கு வரும் என நம்புகின்றேன்.



மின்பகிர் வண்ண மாற்றி-குளிர் கண்ணாடி:

வாசிங்டன் பல்கலைகழகத்தில் ஒரு குளிர்-கண்ணாடி வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. இதன் இயங்கும் தன்மை பின்வருமாறு: இதை அணிபவர் தனக்கு தேவையான வண்ணத்தையும் தனக்கு தேவையான அளவிற்கு ஒளி குறைப்பும் செய்து கொள்ள இயலும். ஆதலால் இக்கண்ணாடி வெளிபுற செயல்களுக்கு ஆக பயன் தரக்கூடியதாக இருக்கும். காட்டாக, மலையேறுதல், இருசக்கர இயந்திர வாகனங்களில் செல்லுதல், மேலும் பல.
இதில் நிறம் மாறுவதற்கு 1 அல்லது 2 நொடிகளே தேவை படுகின்றது. இதன் அமைப்பு ஆறு வகையான அடுக்குகள் கொண்டதாக உள்ளது. புற-ஊதா தடுப்பான் ஒரு அடுக்கிலும், மின்-ஒளி கடத்தும் இண்டியம் டின் ஆக்ஸைடு இரு அடுக்குகளிலும், அயனி கடத்தும் பாலிமர் ஒரு அடுக்கிலும், மின்பகிர் வண்ண மாற்றி பாலிமர் ஒரு அடுக்கிலும் இருக்கின்றது. இந்த ஆறு அடுக்குகளும் சாதரணமாக அணியும் மூக்கு கண்ணாடியின் மேல் ஆக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளில் இது சந்தைக்கு வரும் எனத் தெரிகின்றது. (Ref: Photonics spectra May 2007, page 22)

இதையே சற்று மாற்றி வடிவமைத்து, மகிழ்வூர்திகளின் பின்புற பிம்பக் கண்ணாடியில் பயன்படுத்தப்படுகின்றது. இது பின்னே வரும் மகிழ்வுந்து எவ்வளவு தொலைவில் வருகின்றது என்பதை பொறுத்து நிறத்தை மாற்றி காண்பிக்கும். ஆதலால் இது ஓட்டுனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.

அன்புடன்
பாலாஜி-பாரி

நிறமற்ற மொழி

Photobucket - Video and Image Hosting


செயலிழந்து நிறுத்தப்பட்டதை
தவிப்புடன் உணர்கின்றேன்.
மொழியின் கடைவாய்களில் சிக்கியது
ஒரு கவிதை.

அவ்வளவு எளிமையாக
மொழியின் சுழலை மீறி
மிதக்கின்றது உன் புன்னகை.

என் நாவின் புரளல்
ஆண்மொழியிலிருந்து
நழுவும் ஒரு புள்ளியில்
துலங்குகின்றது
மொழியில்லாத ஒரு கவிதை.

நன்றிகளடி என் தோழி.

*பாலாஜி-பாரி

ஒரு கவிதையும் அது உருவாக்கிய சுழலும்

சமீபத்தில் படித்த ஒரு கவிதையை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

பூவின் வலி
அழகு குலையாத வண்ணங்களால்
நெய்யப்பட்ட உடுப்பாய்த்
தொங்கியது பூ
இரவு பகலென்று காலம் நிறம் மாற
சூரியன் தனது கரம் நீட்டப்
பூவின் உடை
உலர்ந்து உதிர்ந்தது
மிருக வாய் சந்தித்த
பறவையின் உதிரும் இறகுகளைப்போல

பூமியெல்லாம் இரத்தத்துளிகள்.

-குட்டி ரேவதி (பக்:26-தனிமையின் ஆயிரம் இறக்கைகள்-டிசம். 2003 - பனிக்குடம் பதிப்பகம்- சென்னை)

இக்கவிதையை படித்தவுடன் குல்-மொஹர் மரத்திலிருந்து, மழைக் கால துவக்கத்தில் உதிர்ந்த அந்த சிவப்பு வண்ண இதழ்கள் பாதையெங்கும் வியாபித்து விரிந்து கிடக்கும் அந்த பேரழகு இன்று ஒரு நினைவாக வருகின்றது. பெங்களூரில் இத்தகைய காட்சிகள் எங்களது வளாகத்தில் நிறைய சிதறிக் கிடக்கும்.

அன்புடன்
பாலாஜி-பாரி

இப்படியாக மீண்டும்...

நண்பர்களுக்கு வணக்கம்!

பனிக்காலம் கடந்து வசந்த காலத்தின் நுழைவாயிலில் நிற்கும் எம்மை பறவைகளும், பளீர் கதிரவனும் வரவேற்கும் நேரத்தில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. வாழ்வெனும் நதியில் பல நிகழ்வுகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. அதில் எமக்கான நிகழ்வுகளும் அடங்கும். அதில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.

குறிப்பாக நாங்கள் இருக்கும் பகுதியில், மேப்பிள் "சிரப்" பிரபலமானது. இந்த "சிரப்" நம்ம ஊர்கள்ல இருக்கும் தேன்பாகு போன்று இருக்கும். இது மேப்பிள் மரத்திலிருந்து எடுக்கப்படுகின்றது. இதை எடுக்கும் முறையை நாங்கள் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது.

அதை பகிர்வதற்கு முன் மேப்பிள் மரத்தை பற்றி சில வரிகள். இம் மரம் கனடாவில் எல்லா இடங்களிலும் காணலாம். இம்மரங்கள் பனிக்காலத்தில் மொத்தமாக இலைகளை இழந்து நிற்கும். வசந்த காலத்தில் துளிர்த்து, கோடையில் பசுமையாக வளர்ந்து, இலையுதிர் காலத்தின் துவக்கத்தில் பற்பல நிறங்களை காட்டி வசியம் செய்து, கடைசியில் அனைத்து இலைகளையும் உதிர்த்து விடும். கனடா நாட்டின் கொடியிலும் இடம் பெற்றிருக்கின்றது இந்த மரத்தின் இலை வடிவம்.

Image hosting by Photobucket


எங்களது பல்கலைக்கழக்திலிருந்து ஏழு நபர்கள் மேப்பிள் சிரப் தயாரிக்கப்படும் இடத்திற்கு சென்றோம்.
இது "கேபினை சுக்ரு" என்றழைக்கப்படும் ஒரு உணவகத்திற்கு அருகில் இருந்தது. அங்கு போய் வழக்கம் போல முதற் கடமையாக வயிறு முட்ட தின்றுவிட்டு வெளியில் வந்து பார்த்தால் நீல நிறக் குழாய்கள் எல்லா மரங்களையும் இணைத்திருந்ததை கண்டோம். எங்களது ஆர்வக் கோளாறினால், சில கேள்விகளை எழுப்ப ஆரம்பித்ததும், திரு. மார்க் என்பவர் எங்களுக்கு விவரிக்க துவங்கினார்.


Image hosting by Photobucket

இம்மரங்களில் ஊறும் நீர்த்த திரவத்தை பனிக்காலத்தின் இறுதியில் அம்மரங்களில் இருந்து துழையிட்டு வடிப்பார்கள். இதை எங்களுக்கும் விளக்கும் முகமாக, அவர் ஒரு மின் துழைப்பானை எடுத்து மரத்தில் துழையிட்டு அதில் ஒரு சிறிய குழாயை இணைத்து படத்தில் காட்டியுள்ள ஒரு பாத்திரத்தை பொறுத்தினார். ஒரு சில நிமிடங்களில் மேப்பிள் திரவம் அதில் சேரத்துவங்கியது. இந்த பாத்திரத்திற்கு பதில் குழாய்களை ஒரு பின்னலாக இணைத்து, மேப்பிள் திரவத்தை "பம்ப்" செய்கின்றனர். அந்த திரவத்தை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் சேகரிக்கின்றனர். அது பெரிய மின் அடுப்புக்கு மேல் உள்ளது. அதன் பிறகு அதை பாகு போல் காய்ச்சி போத்தல்களில் அடைக்கின்றனர்.

Image hosting by Photobucket

மேப்பிள் மரத்தில் இருந்து வரும் திரவம், மிகவும் குறைந்த இனிப்புடன் உள்ளது. ஆனால் அதை காய்ச்சும் போது இறுகி பாகு பதத்திற்கு வருகின்றது. இதை தான் மேப்பிள் "சிரப்" என்கிறார்கள். இது கிட்டதட்ட நம் ஊரில் கிடைக்கும் தேன்பாகு போல் இனிக்கின்றது.

இந்த மேப்பிள் "சிரப்" பனிக்கட்டிகளின் மேல் ஊற்றி மிட்டாய்களாகவும் செய்வார்கள்.

சரி, நண்பர்களே!!

விரைவில் மீண்டும் சந்திப்போம்.

இரண்டு கவிதைகள்

இன்று புரட்டிக் கொண்டிருந்த கவிதை புத்தகத்தில் இக்கவிதை என்னைக் கவர்ந்தது.
இதை கல்யாண்ஜியின் கவிதைகள் என்ற தொகுப்பில் படித்தேன். பல கவிதைகள் நன்றாக உள்ளன.


கைப்பிள்ளையுடன் பேசிக்கொண்டே
கோலம் போடுகிறாள் அந்தப் பெண்.
நிபந்தனையற்ற அன்பில்
நேர்த்தியாகிக் கொண்டிருக்கிறது
வாசல்.
குற்றம் பார்க்கின்
சுற்றம் இல்லை.
கோலம் பார்க்கின்
துக்கம் இல்லை.

-கல்யாண்ஜி


நீண்ட நாட்களாக பதிய வேண்டும் என்று நினைத்த ஒரு கவிதை இந்த புத்தகத்தில் இருக்கின்றது.
உரையாடல் கவிதை அனுபவம்- இந்திரன் மற்றும் வ.ஐ.ச ஜெயபாலன்

இக்கவிதையை எழுதியது இந்திரன். இவரது சில மொழிபெயர்ப்புகளை படித்திருந்தாலும், இவரது கவிதையை ஒரு தொகுப்பாக படிப்பது இதுவே முதல் முறை. மியூசியம் என்ற தலைப்பில் இருந்த கவிதையில் இருந்து சில வரிகள்.

மியூசியம்

பசியிலிருந்து தப்பிக்க
தூக்கம்
மிக உசிதம்

மியூசியம்
படிகளில்
தூங்குவதென்றால்
இன்னும் உன்னதம்.

புராதனமானது
பசியைக் காட்டிலும் வேறென்ன?

மஞ்சள் பூத்துப்போன
எலும்புக்கூடுகளோடும்
துருப்பிடித்த பீரங்கிகளோடும்
தூங்குகையில்

இறந்த காலத்தின் உள்புதைந்த
மரண அமைதியுடன்
இன்றைய உலகின்
உயிர்த் துடிப்புள்ள ஒரு பகுதி
கலந்து விடுகிறது.

வெளியே

தளிர்க்கோதும் மைனாக்கள்
சதா ஒலியெழுப்புகின்றன.

உள்ளே

நூற்றாண்டுகளுக்கு முன்னரே
வெடிக்க மறந்துபோன துப்பாக்கிகளுக்கு
எண்ணெய் பூசிக் கொண்டிருக்கிறார்கள்.
முதுமக்கள் தாழிகள்
நொறுங்கிய
தங்கள் வயிறுகளுக்குள்
எதிர்காலத்தை
ஏப்பம் விடுமோ என்கிற
அச்சம் ஏதுமின்றி.

ஒளிக்கற்றைகளுடன்
ஓடிப்பிடித்து விளையாடும்
உதிர்ந்த சருகுகளை

ஊதிப்பறக்க விடுகிறது
காற்று.

-இந்திரன்

1947

பரிசாக வந்த புத்தகங்களில் இதுவும் ஒன்று. அந்த புத்தகத்தில் இருக்கும் ஒரு கட்டுரையை இங்கே இட்டுள்ளார் ஆசிரியர்.
படிக்கப்பட வேண்டிய புத்தகம்.

இதில் இருக்கும் இன்னும் இரு கட்டுரைகளும் உண்மைகளை உரைப்பவை. இந்த புத்தகம் கிடைக்கும் விவரத்தை நாளை இடுகின்றேன்.

-பாலாஜி-பாரி

பாஸ்தாவை எப்படியெல்லாம் சமைக்க கூடாது?

எப்படியெல்லாம் சமைக்க கூடாதுந்னு தெரிஞ்சுக்க, கிரகங்கள், நட்சத்திரங்கள், கிரகணங்கள், கரகங்கள் எல்லாம் கூடி வர்ற மாதிரி ஒரு பொழுது வேணும். மேலதிகமா, ஒரு பேச்சிலரா இருக்கணும் (அட பேச்சு இலர் இல்லீங்க). அதாவது, சாயங்காலம், ஓடியாடி பேட்மிண்டன் மாதிரியான விளையாட்டுகள ஒரு கை பாத்துட்டு, அப்படியே இன்னிக்கு பிட்ஸா வாங்கி சாப்பிடலாம்ந்னு முடிவு பண்ணணும். அப்புறம், மெதுவா இந்த கணிணி பக்கம் வந்து தமிழ் மணம் பிடிச்சுட்டு மறுபடியும் யோசிக்கணும். இந்த சமயத்துல மேலே சொன்ன கூடி வர்ற சாமாச்சாரங்கள் உங்களுக்கு உள்ளே ஒரு குரல உருவாக்கி, அந்த குரல் இன்னிக்கு வித்தியாசமா ஏதாவது பண்ணுவோம்நு அலறணும். அந்த கூச்சல் தாங்காம சரி இன்னிக்கு இந்த காட் பாதர் ஐட்டத்த (அல்லது அன்னை சோனியாவையும் நினைச்சுக்கலாம்) பண்ணுவோம்நு முடிவு பண்ணிக்கணும்.

இப்போ அப்படியே ஒரு கெத்தா, வூட்டுக்குள்ள போய் ஒரு தெளிவான குளியலப் போடணும். ஆனா அதுக்கு முன்னாடி ஒரு பாத்திரத்துல தண்ணிய எடுத்து அடுப்புல வைக்கணும். குளிச்சுட்டு வந்தப் பிறகு அது நல்லா கொதிச்சுகிட்டு இருக்கும். (இதனால் அறியப்படுவது இவ்வலைப்பதிவர் குளிக்கும் என்ற கர்மத்தை அறிந்தவர் என்பதாகுக!). அப்புறம் ஓசில கிடைச்ச ஒரு டப்பா பாஸ்தாவை எடுத்து அந்த ஒரு முறை நல்லா பார்க்கணும். அதுல என்ன விவரம் இருக்குண்ணு. அப்புறம் என்ன விவரம் இருந்தாலும், ..ha-னு சொல்லிட்டு பாஸ்தா-வ ஒரு குண்ஸா கைல அள்ளி அத கொதிக்கிற வெந்நீல போடணும். இது பார்ட்-1.

இந்த பாஸ்தா இருக்கு பாருங்க இத தனியா சாப்பிட முடியாது. (எப்படியுமே இத சாப்பிட முடியாதுங்கறது சில தங்கமானவர்களோட தனிப்பட்ட கருத்து..:P). இதுக்கு ஏதாவது சாஸ் (நம்மூர்-ல குழம்புந்னு சொல்லுவாங்க) செய்யணும். இந்த "சாஸ்" செய்யணும் அப்படிங்கற எண்ணமே, பாஸ்தா பாதி வெந்ததுக்கு அப்புறம்தான் வரணும். அந்த எண்ணம் வந்த உடனே, இதென்ன பிரமாதம்!! இருக்கவே இருக்கு டொமேட்டோ மிக்ஸ்ட் சாஸ். அதுல கொஞ்சம் பூண்டு, இஞ்சி எல்லாம் போட்டு கொதிக்க வைச்சா மேட்டர் முடிஞ்சுது-ங்க ஒரு எண்ணம் தோணணும். அப்புறம் ஃப்ரிட்ஜ்-அ திறந்து அந்த சாஸ் கேன் ந பார்க்கணும். அதுக்குள்ள நல்ல திரவ நிலையில் சிவப்புநிறத்தில ஏதேனும் இருந்தா, ஆகா! ந்னு ஒரு பொறி கிளம்பணும். அந்த சமயத்துல நீங்க அதுல, best before sep18. pest after your use அப்படிங்கறத பார்த்தா ஆகா, இந்த மாதம் தானே நம்ம தங்கச்சிக்கு பிறந்த நாள். நம்ம மருமவப் பையனும் இந்த மாசந்தானே பொறந்தாங்-கிற எண்ணம் எல்லாம் வந்த போன பிறகு, மெதுவா நிகழ் உலகத்துக்கு வந்து பார்த்தா "மகனே! இன்று அக்டோபர் ஐந்து" ந்னு ஒரு குரல் சொல்லும்.
சரியா இப்போ, ஆடின ஆட்டம் நினைவுக்கு வரும். நல்லா குளிச்சது நினைவுக்கு வரும். "தலைல தண்ணி ஊத்தினதும் உனக்கு பசிக்க ஆரம்பிச்சுடுமே"ன்னு அம்மா சொன்னது நினைவுக்கு வரும். இப்படி..வரும்................ வரும்..........வரும்..வரும்.வரும்வரும்...னு குணா ரேஞ்சுக்கு ஒரு மனநிலை வரும் பசி-ங்கற் பேய்நால.

இப்படி எல்லாமா வந்து சரி இப்போ நேரம் என்னனு பார்த்தா 9:30ந்னு கடிகாரம் சொல்லும். இப்போ ஒரு ஐடியா தோணும். சரி தக்காளி கொத்சு பண்ணி பாஸ்தால கலந்து ஒரு தாக்கு தாக்குவோம். அன்னை சோனியா இந்தியரான மாதிரி அவங்க ஊரு பாஸ்தாவையும் இந்தியனைஸ் பண்ணிடலாம்னு ஒரு உற்சாகம் தோணி மறுபடியும் ஃப்ரிட்ஜ திறக்கணும், சிவப்பா ஏதோ பார்த்தா நியாபகத்துல. அப்படி திறந்து பார்க்கும் போது தக்காளி ஆப்பிளா மாறி நம்மள பார்த்து கெக்கலிக்கும்.

இதுக்குள்ள நீங்க ஒரு புத்தனின் மனோநிலையை அடைஞ்சிருக்கனும். (இல்லைண்ணா, மறுநாளே....இல்ல...இல்ல...அப்பவே வீட்டை காலி பண்ண சொல்லி நோட்டீஸ் வந்துறும். வீட்டில இருக்குற ஜன்னல் கண்ணாடி, அவங்க கொடுத்த டின்னர் செட், மேசை நாற்காலிந்னு உடைச்சா அப்படித்தான ஆகும்?. ஆனா புத்தர் அருள் பாலிச்சா, இந்த நிலையையும் கடந்து விடலாம்.)

இப்போ முற்றிலும் மாறுப்பட்ட மனிதரா நீங்க மறுபடியும் ஃப்ரிட்ஜ திறக்கணும். என்னென்ன இருக்குன்னு பார்க்கணும். (இது சுயத்தை பார்ப்பதிலும் கடினம்நு நீங்க சொன்னா, ஆகா, என் நண்பாந்னு உங்களையும் என்னோட சேர்த்துக்குவேன்.) பாதி வெங்காயம் இருக்கணும். அப்புறம், ஃப்ரீட்ஸர்ல உறைய வைக்கப்பட்ட காய்கறி இருக்கணும். இந்த காய்கறிய எடுத்து கொதிச்சுட்டு இருக்குற பாஸ்தால போட்டு மொத்தமா வேக வைக்கணும். வெங்காயத்தை தனியா எடுத்து எண்ணெய்ல வதக்கிக்கணும்.
இதுக்கு நடுல பாஸ்தாவும் காய்கறியும் வெந்து, அதுல தண்ணிய வடிச்சு பிறகு அதை அப்படியே வெங்காயம் வதக்கி இருக்கிற பாத்திரத்துல கொட்டி ரெண்டு கிளறு கிளறி, பாஸ்தாவை புடலங்காயா நினைச்சு எல்லாத்தையும் சேர்த்து வயித்துல எரிஞ்சுக்கிட்டு இருக்குற நெருப்புக்குள்ள கொட்டணும். சிலர் இந்த செயலை சாப்பிடறதுந்னு சொல்லுவாங்க!!

பாலாஜி-பாரி

படகும் மனமும்

ஜாதி மல்லிகையின்
மணம் நிரப்பியது போல்
இசையால் நிறைந்திருந்தது
எனது அறை.

கரையில் இருந்த
ஆளற்ற தனி படகு
எண்ணங்களை மீட்டுகின்றது.

காற்று எழுதும் வரிகளாக
சிறு அலைகள்
வளைகுடா நீரின் மீது.

எழுதப்படாத கவிதையாக நீ
"கனவுகள் வேண்டாம்" என்கின்றாய்,
புன்முறுவல்களின் அதிர்வுள்ள குரலில்.

இருப்பின் மறுகரையை அடைய
என் படகை நான் அண்மித்த பொழுது
புத்தனும் ஆர்ப்பரிக்கின்றான்.

இப்பொழுதும் நிறைந்திருக்கின்றது
எனது அறை.


பாலாஜி-பாரி

செய்திகள்

இயற்கை சில சமயங்களில் பல அழகை காட்டி நிற்கின்றது. சில சமயம் எனும்போது அவதானிப்பாரின் கணங்கள் எனக் கொள்க. இயற்கை எக்கணமும் ஏதேனும் ஒரு சுவாரசியத்தை கொண்டுள்ளது என்பதுதான் உண்மையோ?

ஒரு பெரிய அளவிலான வண்ண வளைவாக, கடலில் ஒரு முனையை கொண்டு, வானை அளந்து, தேவாலயம், பச்சை மரங்கள், சில மனிதர்கள் ஆகியவற்றிற்கு ஆரமாய் வடிவெடுத்து, தன் மறுமுனையை மண்ணில் புதைத்துக் கொண்டு, சில கணங்களே இருந்த ஒரு வானவில்லை பற்றி சொல்ல முயல்வது கடினம்.

சில தண்மை துளிகள் காற்றில் நிறைந்த கணத்தில், வெம்மை கதிர்கள் ஊடாடி நிகழ்த்தும், ஒரு முரண்களின் கலப்பு தோற்றுவிக்கும், அழகே இந்த வண்ணப் பட்டைகள் என்பது அறிவியல் மொழி. இந்த முரண்கள் தண்மை, வெம்மை என்ற வார்த்தைகளின் பிரசங்கமாக கூட இருக்கலாம். அவை தன்னியல்பில் பூரணமானவை. நிகரானவை.

பாதையின் மருங்கில் இருக்கும் கிரைசாந்திமம் பூவிலும் நிறைந்துள்ளது. வானவில்லின் சில கண இருப்பிலும் ஒளிந்துள்ளது. அவைகள் மெதுவாகவும், பல முறை கூறிவிட்ட சலிப்புடனும் மீண்டும் தங்களது இருத்தல்களில் முரண்கள் வெறும் கற்பிதங்கள் என்பதை காட்டியவாறே உள்ளன.

இன்று ஒரு ஒளிதுகள் உள்ளே.

பெண் என்பவள் பொருளுடமையா?

http://in.rediff.com/news/2005/aug/09sold.htm

இந்த சுட்டியில் சமீபத்தில் நடந்த ஒரு பெண் விற்கும் படலத்தை பற்றிய தகவல்கள் உள்ளது.

மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையினை கொளுத்துவோம்...என்ற வரிகள் பாடி ஒரு நூற்றாண்டு ஆக போகின்றது. நாம் இன்னும் கற்காலத்தில்..

பூரணி கவிதைகள் : புத்தக அறிமுகம்

Image hosted by Photobucket.com


பூரணி கவிதைகள் : புத்தக அறிமுகம்-1
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
ஆண்டு : டிசம்பர் 2003(முதல் பதிப்பு)
ISBN 81-87477-65-2



சமீபத்தில் டொராண்டோ சென்ற போது அங்கு நடந்த புத்தக கண்காட்சியில் இந்த புத்தகத்தை காண நேரிட்டது. இந்த புத்தகத்தை புரட்ட எனக்கு தூண்டுதலாய் அமைந்தது, அதன் முகப்பு அட்டையே. இதில் ஒரு வயதான மூதாட்டியின் படம் இருந்தது. அந்த முதுமையான முகத்தில் ஒரு சிறிய கம்பீரம்.

இவர்தான் இந்த புத்தகத்தின் ஆசிரியை என்று அறிந்த போது சற்றே திகைப்பும் ஒரு மகிழ்ச்சியும் உண்டானது.

முதலில் இந்த புத்தகத்தை பற்றி:

இந்த புத்தகம் 1929 ஆம் ஆண்டிலிருந்து 2003 ஆம் ஆண்டு வரை பூரணி என்ற சம்பூர்ணம்மாளின் படைப்புகளை தாங்கி நிற்கின்றது.

எழுத்துக்களினூடே படைப்பாளியும் வாசிக்கப்படுகின்றார் என்பதை என் வாசிப்பில் நான் உணருகின்றேன். அப்படி பார்க்கும் போது, முடுகு(1930-45) என்ற ஒரு கவிதையில் அந்த கால மாற்றங்களை அழகாக சொல்லி, மாற்றத்தை ஏற்றுக் கொள்கின்றார். இதில் உள்ள எளிமையும் நிறைவாய் உள்ளது. அக்கவிதையின் கடைசி வரிகள் சில:

"தண்ணீர் குடம் தூக்கும்
தருணியர்கள் இப்போ
டென்னிஸ் விளையாட
கிளப்புகள் உண்டாச்சு
ஏலேலோ இயற்கையதின் தன்மை எப்பொழுதும் மாறுதலே
இதையறியா பல பெரியோர் கண்டு இகழ்வதும் அறியாமையே".

இவருக்கு பாடு பொருள் பல உண்டு. இவர் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கவில்லை தம் படைப்புகளில். விடுதலை போராட்டத்தை ஆதரித்து, மக்களுக்கு பழக்கமான மெட்டுகளில் பாடலமைத்து அதை வெளிப்படுத்தியது மிகவும் போற்றத்தக்கது. அரிசிமாக் கோலமும், வெள்ளி மின்னலும், மேரு மலைகளும், கோடை மதியமும், குடியானவனின் கிராமமும் இவர் பார்வையிலே கவிதையாகின்றன. பெண்களின் எழுச்சியையும் இவரது கவிதைகள் பிரதிபலிக்கின்றன.
பெண் என்ற கவிதையில்

" பட்டமென்ன சட்டமென்ன
பாராளும் ஜோரென்ன
கட்டினவன் மோசமென்றால்
ரத்து செய்யும் உரிமையென்ன

இன்றைய பெண்குலமே
எழுச்சி கொண்டததிசியம்தான்"

என்று கூறிவிட்டி, அதே வேகத்தில்

"என்றாலும் தீமைகள்
எல்லாமும் முடியவில்லை" என்றும் எச்சரிக்கின்றார்.

இருக்கும், பார்க்கும், உணரும் நிகழ்வுகள் மட்டுமே இவரிடம் கவிதையாகவில்லை.

சாத்திரம் (1965-67) என்ற ஓர் கதை கவிதையை படைக்கின்றார்.
அது ஒரு அற்புதம். பெண்ணின் உளப்பாங்கையும், வெட்டி தர்பார் செய்யும் தந்தையும், காதல் மருகும் ஓர் ஆண்மகனையும் காட்டுகின்றார். இதில் வெற்று சனாதன தாங்கிகளையும் ஒரு பிடி பிடிக்கின்றார். இவர்களது தன்மையை மிக அழகாகவும் தெளிவாகவும் சொல்கின்றார். (அவரிடம் அனுமதி வாங்கிய பின் இதை நான் தனி பதிவாக இடுகின்றேன்).

சென்ற நூற்றாண்டில் 1970 களுக்கு பின் எழுதியதில் என்னைக் கவர்ந்த ஒரு கவிதை:

காலை ஒலிகள்

பத்துக் குடித்தனங்கள்
ரேடியோக்கள்
பக்திப்பா, துதிப் பாடல்
சுப்ரபாதம்
வீதியிலே கிஸ்னாயில்
கீரை சப்தம்...
...
....
போரிங்பம்பு அடிப்பதனால்
தடதடப்பு.

என்று போகின்றது. இது ஒரு காட்சியாக கண்முன் விரிகின்றது.

பெண் - என்ற தலைப்பில் மீண்டும் ஒரு கவிதை வருகின்றது. இந்த கவிதை நாட்டுல பெண்கள் முன்னேறிட்டாங்க என்று கூறும் நபர்களுக்கு சவுக்கடியாய் இருக்கின்றது. இதில் இவர் காலத்தை பதிவு செய்துள்ளார். 1940-களில் பெண்களுக்கு இருந்த நிலை 1970-களுக்கு பிறகும் தொடர்கின்றது என்பதை அக்கவிதை உரைக்கின்றது. அது அவலமன்றோ?

2003-ல் அவர் எழுதிய கவிதைகள், ஹிந்துத்துவாவை சாடுகின்றது. அகலிகை பற்றியும் சீதை பற்றியும் அவர் எழுதியுள்ளது ஆழமான மன மாற்றத்தை ஏற்படுத்தாது என்றாலும் நிச்சயம் பெண் கொடுமைக்கு எதிரான தொண்ணூறு வயது கிழவியின் மௌனமான மன வலி ரேகைகளை அதில் காணலாம்.

இப்புத்தகத்தின் முத்தாய்ப்பாக இருப்பது கபீர் கவிதைகள். இவரது மொழிபெயர்ப்பு மிகவும் கூர்மையானதாகவும், மனதில் தைக்கும் படியும் உள்ளது
காட்டாக,

"பரத்திலே மனம் கலந்தது அந்த
மனத்திலே பரம் கலந்தது
ஜலதிலுப்புக் (ஜலத்தில் உப்பு) கலந்த பின்னும்
ருசித்தபோது தெரிந்தது"

இவரது கவிதை புத்தகம் ஒரு விடுதலை விரும்பியின் கால ஆவணம்.

இவரைப் பற்றி:

இவரை பற்றி இந்த புத்தகத்தில் குறிப்பு உள்ளது.

இவரது சொந்த ஊர் பழனி. வாழ்க்கைப்பட்டது தராபுரம். பின்பு சென்னையில் வசிக்கின்றார் என்று அறிகின்றேன். (இவரது மகளும் கவிதைகள் படைக்கின்றார்.பெயர் கிருஷாங்கினி. இவர் நன்கு அறியப்பட்டவர். தட்ஸ் தமில் . காமில் இவரது சில படைப்புகள் உள்ளது)
மேலும் இப்புத்தகத்திற்கு அம்பை முன்னுரை எழுதியுள்ளார். அதுவே மிகவும் அருமையாக உள்ளது.

( வரும் திங்கள் அன்று புத்தகத்தின் முகப்பை தெளிவான முறையில் இட முயல்கின்றேன்)

வண்ண மலரும், வண்ணத்துப் பூச்சியும்

Image hosted by Photobucket.com

நதிக்கரையில் பூத்திருந்த அந்த மலர் கூறியது, "நான் மிகவும் பொதிவாகவும், பாதுகாப்பாகவும், என்னில் என் ஆடைகள் இறுக்கமாகவும், தேவைக்கு சற்றும் மிகாமல் உள் வெப்பமும், குறுகுறுத்த உணர்வுகள் ஆழமான உள்ளில் புடம் போட்டுக் கொண்டும், உறைகளின் உள்ளே ஓர் அதிசய அனுபவத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தேன்".

"வெளிப்புற சலனம் அறியா அவ்வேளையில் நான் இனமறியா ஏங்குதலின் பிரதிநிதியாக இருந்தேன்."

"சட்டென்று என் மீது, ஒரு கணத்தில் தண்மை நிறைந்த காற்று உறவாடியது. எனது ஆடைகள் மிக சௌகரியமாக பறந்து விரிந்தது. அக்கணம் என் ஆழ் மனதில் சிறிய பயம் கவ்வினாலும், ஆகா! இதுவே சுகானுபவ நிகழ்வு!! என்ற அடையாளம் அறிந்து பரந்து விரிந்த விளைவால் பாந்தமான அணிகலனுடன் நான் மலர்ந்ததும், அக்காற்றில் கலந்து கிடந்த தண்மையினால் நான் சிலிர்ப்புடன் திக்குமுக்காடினேன். ஆனந்தக் கூத்தாடிக் களித்தேன்".

"சுற்றி இருந்த சூழ்நிலை, இருளின் கருமையை உணர்த்தியது. அந்த சூழ்நிலை மாறும் போது, பல மாறுதல்கள். மஞ்சள் வெய்யிலின் மூலம் கண்டபோது, ஆ! இஃதா அந்த சூழ்நிலை மாற்றும் வித்தையைப் புரிவது! என்று புரிந்து தெளிந்தேன். நான் அமைந்த ஒரு கரம் போல, அருகிலே பல கரங்கள். அவற்றின் மீது இதன்முன் பார்த்தறியா வண்ணச் செறிவு கொண்ட நேர்த்தியான வடிவங்கள். உள்ளத்தின் உணர்வுகளைக் கரைக்கின்றன. நெகிழ்கின்றேன்".

"சற்று தொலைவில் நான் பார்த்த போது, ஓங்கி உயர்ந்திருந்து அந்தப் பச்சை நிற வண்ணத்தை தன்னில் திப்பிதிப்பியாய் கொண்டு மிக நீண்ட பருமனான கரங்களை அங்குமிங்கும் அசைத்துக் கொண்டிருந்தது ஒரு பிரம்மாண்டம். என்னை எழுப்பிய அக்காற்று அதை அசைக்கின்றதா அல்லது அந்த உயிர் தழுவிய காற்றை எனக்கு அந்தப் பச்சைகள் அளிக்கின்றதா? முயங்குகின்றேன் !!."

"வெளிர் நிற வெய்யிலின் நிறம் கொண்ட சிறிய நுனியையும் தோன்றிய வேளையில் நான் கண்ட அந்த சூழலின் நிறத்தை மற்ற இடங்களிலும் கொண்டு அடி வயிற்றில் இருந்து, அதன் நீண்ட பின் பகுதிகள் சற்றே தாழ அது எழுப்பும் அந்த ஒலி என்னை ஏனோ மிகவும் கவருவதுடன் என்னைச் சலனமடையச் செய்கின்றது. ஆனந்த சலனம். ஆனால் அதற்கோர் விந்தை இயல்பு. ஒரிடத்தில் இல்லாமல் இங்கும் அங்கும் அலை பாய்கின்றது. துள்ளித்திரிகின்றது. சந்தோஷிக்கின்றது."

மலரின் மழலையை கேட்ட வான் தோட்டத்தில் உலவும் அந்த வண்ணத்துப் பூச்சி "ஓ! அன்பு நிறைந்த மலரே!! அந்த ஓசைக்கு உரியவள் பெயர் குயில்!. அவ்வாறு அதை மாந்தர் அழைப்பர். எங்களைக் கூட வண்ணத்துப் பூச்சி என்றும், பட்டாம்பூச்சி என்றும் கூறுவர். "தென்றலில் மிதந்து வரும் வண்ண மலரே!!" என்று கூட எங்களை வருணிப்பர்!" எனக் கூறி அந்த அழகிய, பூரணமான, திண்ணமான வடிவம் கொண்ட அந்த மலரிலிருந்து சற்று மேலெழும்பி பின்பு வசதியாக அதன் மேல் மீண்டும் அமர்ந்தது.

"ஆகா! சரியாக சொன்னார்கள்!! இதை கேட்டவுடன் உன் மேல் அன்பு அதிகரிக்கின்றது....ஆனால் நீயோ மிகவும் அழகாக இருக்கின்றாய். பின் ஏன் உன்னை மலர் என்று கூற வேண்டும்?" என்றது தன்னறிதல் தேவையற்ற அம்மலர்.

"ஓ...! அன்பு மலரே!! உன் குழந்தை இயல்பு என்னை குதூகலிக்கச் செய்கின்றது. இவ்வாறே நீ இருப்பாயாக....என்றும்!!" என வாழ்த்தி, "நீ உன்னை அறிய முயலும் போது உன் போல் இருக்கும், அருகில் நின்று அசைந்தாடும் அந்த மலரைப் பார்க்க நேரிடும்," எனக் கூறிவிட்டு படபட-வென்று அந்த மற்றொரு மலரை நோக்கிச் சென்றது, எண்ணங்கவர் வண்ணத்துப் பூச்சி.

"இப்பொழுது அந்த மலரிடம் உன்னை அறிமுகம் செய்து வைத்தேன். தூரம் இருந்தாலும், அறிமுகம் ஆகிவிட்டால் மலர்ந்த பயன் எய்துவீர். இது போல பல மலர்களைச் சந்திக்கச் செய்வதுதான் என் உயிரின் விளைவு" என்று கூறியது, திரும்பி வந்து உல்லாசமாய் அம்மலரின் மீது அமர்ந்த அந்த வண்ணத்துப் பூச்சி.

"எவ்வளவு ஆச்சர்யமான, மிகவும் உவக்கத்தக்க, அற்புதமான பணி!! ஓ... என் மித்ர!! நீ என்னிடம் இருந்து சிறிது மது பருகுவாயாக" என்று நயந்து நட்பு பாராட்டியது அந்த மலர்.

"உனக்கு மிகவும் நன்றி!. என் அன்பு மஞ்சள் மலரே, கேள்!! நீ மற்றவைகளிடமிருந்து மாறுபட்டவள். இன்று நீ கழித்த இத்தருணம் குறித்து பின்னாட்களில் ஒரு சமயம் உனக்கு யோசிக்க நேரும். என்னை நன்றியுடன் நினைக்கும் அக்கணத்திற்காக, இக்கணம் நான் கூறிய நன்றி உரித்தாகட்டும்", என்றவாறே வாடைக் காற்றின் வழியோடியது அந்த வண்ணமிகு பறக்கும் மலர்.

வண்ணத்துப் பூச்சியை வழியனுப்ப தன் மணம் பரவும் எல்லை வரை உடன் சென்று மகிழ்ந்தது அந்த மலர்.

நாட்கள் சில கழிந்தன. பூவிலிருந்து உருவாகிக் கொண்டிருக்கும் காய் இருந்த அத் தாவரத்தின் கீழ் இருந்தது வண்ணத்துப் பூச்சியின் உதிர்ந்த ஒற்றை இறக்கை.

(நன்றி: மரத்தடி.காம்- பல மாதங்களுக்கு முன் மரத்தடியில் இட்டது. இங்கு மீண்டும் இற்றை படுத்துவதற்காக மீண்டும்)

நீ

சில ஒலிக்குறிப்புகள்.
சிற்சில எழுத்துக்கள் கொண்ட சிறுவார்த்தை.
சின்னஞ்சிறு செயல்கள்.
வியக்க செய்கின்றது
உனது மொழியின் விஸ்தீரணம்.
என் கவிதைகள்
மௌனமாகின்றது.
இது இயல்பு.

புத்தக விளையாட்டு

என்னை இந்த புத்தக விளையாட்டிற்கு அழைத்த நண்பர் பிரதீபாவிற்கு நன்றிகள்.

சிறுவயதில் எனது வீட்டில் ஒரு வாண்டுகள் பட்டாளம் இருந்தது என்பதாலும், எங்கள் காம்பௌண்டில் பல வாண்டுகள் இருந்ததாலும், குறைவின்றி பல்வேறு வகையான காமிக்ஸ் கிடைத்தது. அதில் என்னைக் மிகவும் கவர்ந்தது ஸ்பைடர்மேன், வேதாளம் (Fantom) மற்றும் இரும்புக்கை மாயாவி போன்ற கதாநாயகர்கள். இதில் சற்றே வித்தியாசப்பட்டவர் இந்த ஸ்பைடர் மேன். தான் குற்றவியல் சக்கரவர்த்தி என்று தன்னை இருத்திக் கொள்வதே இவரது முக்கிய நோக்கமாக இருக்கும். இவருக்கு சவால் விடும் வகையில் வரும் மற்ற கொடுங்கோலர்களையும், போலிஸையும் இவர் சமாளிக்கும் விதம் மிகவும் அற்புதமாக காட்டப்பட்டிருக்கும்.

பொள்ளாச்சியில் பூங்கா அருகில்தான் நூலகம் இருந்தது. அதன் பின் சில இடங்களுக்கு மாறி மீண்டும் பூங்கா அருகிலேயே வந்துவிட்டது. இப்போதும் அது அங்குதான் உள்ளது என்று நினைவு. எனது பெரியப்பா எங்களை பூங்காவிற்கு இட்டு செல்வார். அத்துடன் சற்று இருள் கவியத்துவங்கும் சமயம், அருகிலுள்ள நூலகத்திற்கு இட்டு செல்வார். ஆரம்பத்தில் அங்கு சென்று மிரள மிரள விழித்ததும், ஐந்தாவது ஆறாவது வகுப்பு படிக்கும் காலத்தில் பல்வேறுவகயான குழந்தைகள் கதைகள் கொண்ட அலமாரியை அலற வைத்ததும் நன்றாக நினைவில் உள்ளது. இக்காலகட்டம் எங்களை தனியாக வெளியே அனுப்ப பெற்றோர்கள் இசைந்த தருணங்கள்.

அச்சமயத்தில் எனது வெங்கடராமன் மாமா, தில்லியிலிருந்து நேருபால புத்தகாலயத்தின் பதிப்புகளாக் சுமார் பதினோரு புத்தகங்கள் அனுப்பி வைத்தார். நமது கப்பற்படை, கிரிகெட், பறவைகளைப் பார், பூனை இனம், வேடிக்கை கதைகள், என ஒரு நீண்ட பட்டியல் அது. பெரும்பாலும் ஒவ்வொரு விடுமுறையிலும் அந்த புத்தகங்கள் எங்களால் மீண்டும் படிக்கப்படும். எனது விவரமான புத்தக வாசிப்பு இங்கு இருந்து ஆரம்பித்தது எனக் கொள்ளலாம். விடுமுறை காலங்களில் எனது தந்தையார் அவரது பள்ளியில் இருந்து கொண்டு வந்த சிந்துபாத் கதைகள் மனதில் அப்படியே இருக்கின்றது. அதன் பிறகு சற்று பதிமன் வயதுகளில் ஆங்கிலத்தின் முக்கியத்துவம் கருதி, எனது தந்தை abridged version-களாக வந்த count of montecresto, around the world in eighty days என சில புத்தகங்களை அறிமுகப் படுத்தினார்.

பத்தாவது முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பாட புத்தகம் தவிர வேறெதுவும் படித்ததாக நினைவில் இல்லை. non-detailed-ல் நல்ல சிறுகதைகள் படித்தது நினைவில் உள்ளது. மிளகாய் பழச்சாமியார், மற்றும் ஜெயகாந்தனின் சிறுகதை (நந்தவனத்தில் ஓர் ஆண்டி) இன்றும் நினைவில் உள்ளது.

பிற்பாடு கல்லூரியில் சேர்ந்த பிறகு வாசிப்பு விரிய ஆரம்பித்தது எனலாம். பல்வேறு வகையான புத்தகங்கள், ருசிய கதைகள், என சுவாரசியமான பருவம் அது. திரு. ஈ.அருணந்தி அவர்கள் தாய் புத்தகத்தை கொடுத்து படிக்கச் செய்தார். முதல் வாசிப்பில் அதில் சொல்லப்பட்டது எதுவும் எனக்கு புரியவில்லை. அதை மீண்டும் இருவருடங்கள் கழித்து படிக்கும் போது, கீழே வைக்க முடியவில்லை. அந்த வருடங்களில்தான் எனக்கு சமூகத்தை பார்க்க சில துணிவுகளும், தேவைகளும் ஏற்ப்பட்டது. எனது வாழ்வியல் ஆசானாக அருணந்தி அவர்கள் இருந்தார். இப்பொழுது என் நினைவில் மட்டும் இருக்கின்றார். அதன் பின் உண்மையில் எனது சிந்தனைகளை புரட்டி போட்ட புத்தகம் என்றால் அது "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய புத்தகம். அது பல் வேறு தளங்களில் எனதாக இருந்த கற்பிதத்தை தகர்த்து எறிந்தது.

பின்பு இந்திய அறிவியற் கழகத்திற்கு வந்த பின், இன்னும் பல நட்புகள். இன்னும் பல புத்தகங்கள். இங்கு கிடைத்தது அக வளர்ச்சிக்கான புத்தகங்கள். குறிப்பிட்டு சொல்வதானால் ஹெர்மென் ஹெஸ்ஸெ-வின் சித்தார்த்தா, ஜோனாதன் லிவிங்ஸ்டன் சீகல், ஒல்ட் மேன் அண்ட் த சீ, அவன் காட்டை வென்றான், பால் கொய்லோவின் அல்கெமிஸ்ட் போன்றவை. ஆனால் உளப் போக்கிற்கு ஏற்ற வகையில் இருந்தது என சொல்லும் வகையில் அலெக்ஸ் ஹேலியின் ரூட்ஸ், கி.ரா வின் படைப்புகள், to kill a mocking bird போன்றவைகளை சொல்லாம். மேலும் நல்ல அனுபவமாக இருந்தது, மோக முள், செம்பருத்தி, சிந்தாநதி (குறிப்பாக சொல் என்ற தலைப்பின் கீழ் வரும் இரு கட்டுரைகளும்), அபிதா. இந்த சமயத்தில்தான் ஜெயகாந்தனின் கதைகளும் வாசித்தேன். அவரது கதைகளின் முன்னுரைகள் என்றும் fresh-ஆனவை. எனக்கு அவரது கதைகளின் மிகவும் பிடித்தது ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும். பாரீசுக்கு போ ஒரு நல்ல நாவல் என்றாலும் அதன் களத்தை அவர் வலிய உருவாக்கி இருந்ததால் ஒருவித செயற்கைதனம் தெரிந்தது. அவரது சிறுகதை தொகுப்பும் அப்போது வாசிக்க கிடைத்தது. என்னை மிகவும் குதூகலப்படுத்தியது குட்டி இள்வரசனும், ஜன்னலில் ஒரு சிறுமியும். அப்துல் ரகுமானின் காதல் கவிதை தொகுப்பையும் இங்கு தான் வாசித்தேன். வண்ணதாசன் எழுத்துக்கள் எனக்கு உண்மையை மட்டும் உரைப்பதாக தெரியும். சின்னு முதல் சின்னு வரை ஒரு தேர்ந்த படைப்பு. மனித உணர்வின் மாற்றங்கள் வீடுவீடாக மாறும் அற்புதம் அதில் காணலாம். நிலா பார்த்தல்- படித்ததன் விளைவு air field-ல் பல இரவுகள் கழிந்தன.

மேலும் என்னை அதிர வைத்த புத்தகங்கங்களாக நான் நினைப்பது, 1. கம்பிக்குள் வெளிச்சம் 2. தூக்கு மேடை குறிப்புகள்.3. நாகாராஜன் படைப்புகள். இவை எனது பல நாட்களின் இரவை தின்றுள்ளன. இதை தவிர வேற்று மாநில படைப்புகள் என்றால் இந்திரன் தொகுத்த அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம், சமஸ்காரா போன்றவை என்னை பாதித்தவை எனக் கொள்ளலாம்.

இப்பொழுது வாசிப்பில் இருக்கும் புத்தகங்கள்

1. முறிந்த பனை
2. பச்சை தேவதை
3. If life is bowl of Cherries, what am i doing in the pits?
4. இரவில் நான் உன் குதிரை (சிறுகதை தொகுப்பு)
5. மூலதனம் -தியாகுவின் மொழிப் பெயர்ப்பு

எப்போதும் வாசிப்பது

1. பாரதியார் கவிதைகள்
2. திருக்குறள்

மிகமிக முக்கியமான புத்தகங்களாக கருதுவது

1. வால்காவிலிருந்து கங்கை வரை -சாங்கிருத்யாயன்
2. ரூட்ஸ் - அலெக்ஸ் ஹேலி
3. குட்டி இளவரசன் - எக்சுபெரி
4. மோகமுள்- தி.ஜா.ரா
5. தூக்குமேடை குறிப்புகள்- புஸிக்
6. கம்பிக்குள் வெளிச்சம் -தியாகு
7. ஜன்னலில் ஒரு சிறுமி - டேட்சுகோ குரொநாயகே
8. தாய் -கார்க்கி


படிக்க விரும்பும் நூல்கள்

இது ஒரு பெரிய பட்டியல்.

நான் புத்தகங்களை படிக்க எனது நண்பர்களே காரணம். கிட்டதட்ட நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எங்கள் மத்தியில் சுழற்சி முறையில் இருந்தது. தங்கமணியின் அறை ஒரு குட்டி நூலகமாக இருந்தது என்றால் அது மிகையல்ல. எனது அறையில் நான் இருந்ததை விட அவரது அறையில் நான் கழித்த அர்த்தமுள்ள பொழுதுகள் ஏராளம். அது போல் கோகுல்-தேவி -யின் வீட்டில் படித்த புத்தகங்கள் குறிப்பாக அனைத்து JK புத்தகங்கள் தேவி தந்தவைதான். இதை தவிர மீனா எனக்கு வழங்கிய புத்தகங்களும் பல. பாபு கொடுத்தது எனது அறையில் ஆப்பிரிக்க வானம். பின்பு சென்னை செல்லும் போதெல்லாம், new bookland-ல் வாங்கியவையும் அடங்கும். பெங்களூரை விட்டு கிளம்பும் சமயம் வாங்கிய புத்தகங்கள் இப்போது மீனா வீட்டில் இருக்கும் நான் படிக்காத புத்தகங்கள்.

நான் அழைக்க விரும்பும் நண்பர்கள்

1. மயிலாடுதுறை சிவா
2. சங்கர பாண்டி (இவருக்கு வலைப்பதிவு இல்லை. எனக்கு அனுப்பினால் நான் அதை இடுகின்றேன்)
3. பொள்ளாச்சி நசன் (இவர் படித்ததை
முழுதாக எழுத இயலாது என தெரியும். ஆனால் இவரது வாசிப்பனுபவம் நமக்கு மிக்க
பயனுள்ளதாக இருக்கும்)
4. செல்வராஜ்
5. நற்கீரன்
6. நந்தலாலா

மெக்தலீனா சகோதரிகள் (2002)

இத்திரைப்படம் கிறித்துவ கத்தோலிக்க சமூகம், அயர்லாந்தில் சென்ற நூற்றாண்டில் நடைபெற்ற பெண்கள் மீதான மதத்தின் பெயரில் செய்த அடக்கு முறையை விரிவாக சொல்கின்றது.

மார்கரெட்: தனது உறவினான ஒரு கயவனால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றாள்.
ரோஸ்: இப்பெண் தந்தை அறியா குழந்தைக்கு தாயாகின்றாள்
பெர்னடெட்: இச்சிறுமி அனாதை விடுதியில் வளர்ந்து வருகின்றாள். பருவத்தின் இயல்பில் அவள் அழகாக இருக்கின்றாள். விடுதியின் வெளியில் இருந்து சில பையன்களின் குரலைக் கேட்டு மகிழ்கின்றாள்.

இவர்கள் மூவரும் கத்தோலிக்க கிறித்துவ முறையை பின்பற்றும் குடும்பங்களிலும், காப்பகத்திலும் இருக்கின்றனர். மார்க்கரெட் தனது தந்தையரின் நிர்பந்தத்தாலும், பெற்ற குழந்தையை தாயிடம் இருந்து பிரித்து அனாதை இல்லத்திற்கு கொடுத்துவிட்டு அந்ததாயை (ரோஸ்) அவளின் பெற்றோரினாலும், பெர்னடட் என்ற சிறுமி காப்பக கன்யாஸ்திரிகளாலும், மெக்தலீனா காப்பகத்தில் சலவைத் தொழிலாளி ஆக்கப்படுகின்றனர்.
அதன் நிர்வாகியான ஒரு மூத்த கன்னியாஸ்திரி தனக்கு கூறப்பட்ட வழிமுறைகளின் சற்றும் மாறாமல் இறைவனின் சேவையில் ஈடுபடும் பெண்களை கவனித்துக் கொல்கின்றார் ('ல்' எழுத்துப் பிழையல்ல).

அவர்களுக்குண்டான உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. அவர்கள் அங்கு அடிமை போல் நடத்தப்படுகின்றனர். சிறு சிறு தவறுகளுக்கும் கொடுமையான தண்டனைகள் கொடுக்கப்படுகின்றது.

அங்கு இருக்கும் பெண்கள் அனைவரும் பாவிகள் என்றும் அங்கு பணி செய்வதன் மூலம் தூய்மையடைந்து புனித ஆவியின் அன்புக்கு பாத்திரமாகி சொர்க்கத்திற்கு செல்லலாம் என்று கூறுகின்றார் அதன் நிர்வாகி.

இதில் முக்கியமான ஒரு பாத்திரமாக வருபவர் கிறிஸ்பினா. அவர் தனது குழந்தையை பிரிந்ததால் மனச்சிதைவுக்குள்ளாகின்றார். அவரை ஒரு பாதிரி தன் உடலிச்சையை தணிக்க பயன்படுத்துகின்றார். இதை வெளியில் கூற நேரும் பொழுது (YOU ARE NOT A GOD MAN என 27 முறை கூறுகின்றார்) தலைமை கன்னியாஸ்திரி அவரை மனநோய் மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றார். இதனிடையில் இவர் தற்கொலைக்கு முயற்சி செய்யும் அளவிற்கு நிலைகுலைக்கப் படுகின்றார்.

24-வயதில் அம்மருத்துவமனையில் அவர் இறந்து விடுகின்றார்.


மதம் தன்னை நிறுவுவதற்கு செய்யும் செயல்கள் மிக நுட்பமானது. இதில் ஒரு முறைதான் (method) நாம் மேலே கண்டது.

இத்திரைப்படம் sex in the cold climate என்ற ஆவணப்படத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஆவணப்படம் மிக மிக முக்கியமானது. இதில் உண்மையில் பாதிக்கப்பட்ட அந்த நபர்கள் தங்கள் வாழ்க்கையை கூறுவது மிகவும் உருக்கமானது. உண்மைகள் பொதிந்தது.

இந்த ஆணாதிக்க சமூகத்தில் மதம் தனது ஏஜென்ட்கள் பெண்களோ அல்லது ஆண்களோ இருந்தாலும் ஆதிக்க மனப்போக்கை எளிதாக கையாளுகின்றனர். மதம் போன்ற அமைப்பை நிறுவுவதில் ஆண்களின் நோக்கமும் பயமும் இவ்வகையான நிறுவனங்களின் கட்டமைப்பில் கண்கூடு. எனக்கு இது விந்தையாக படவில்லை. ஏனெனில் ஆண்களது பணி, இவற்றை நிறுவுவது மற்றும் இதன் அடிநாதத்தை கைகொள்வது மட்டுமே ஆகும். இவற்றை செய்த பின் மற்றவைகள் விளைவுகள் மட்டுமே. அந்த விளைவுகள் ஆண்களுக்கு எப்போதும் சாதகமாக இருக்குமாறு அந்த நிறுவனம் பார்த்து கொள்ளும் என்ற நிலையில் அதிலிருந்து விலகிவிடுகின்றனர் என தோன்றுகின்றது.

இந்திய சூழலில் இத்தகைய ஒரு படமாக நான் கருதுவது Son, father and holy war.
இதை பற்றி தங்கமணி தெளிவாக குறிப்பிட்டதை நினைவு கூறுகின்றேன்.
Son, father and holy war படம் போர்/ வன்முறை எப்படி முழுக்க முழுக்க ஆணாதிக்கத் தயாரிப்பு என்பதையும். உண்மையில் போர்/மதம்/ வன்முறை போன்றவை இருதரப்பினரையும் தாண்டி ஆண்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியே அன்றி வேறெதுவும் இல்லை என்றும் காட்டியிருக்கும்.போர்/மதம்/ வன்முறையினை மத சக்திகள் (மும்மதங்களும்) எவ்வாறு பெருமைப்படுத்துகின்றன, அதன் அடிப்படையில் கற்பு, ஒழுக்கம், இவைகள் எப்படி கிளைக்கின்றன என்ற கேள்விகளை எழுப்புகிற படம். அந்தப்படம் இரண்டு தரப்பினரையும் (இந்து, முஸ்லீம்) சரியாகவே காட்டியது.


இத்திரைப்படம் மிகவும் பாதிப்புக்குள்ளாக்ககூடியது.

-பாலாஜி-பாரி

வார்த்தைகள்

Image hosted by Photobucket.com
நமது உரையாடல்கள்
நிறைவு பெறுவதேயில்லை.
எனது 'உள்'ளில் சில வார்த்தைகள்
பாறை மீதின் அலையாக
மோதிச் சிதறுகின்றன.
வீட்டின் தோட்டத்தில்
பழுப்பு நிற மைனாக்கள் விளையாடுகின்றன.
புல்வெளியின் விளிம்பில்
மஞ்சள் பூக்கள் மலர்ந்துள்ளன.
நீ புன்முறுவல் செய்கின்றாய்
வார்தைகள் வெல்லப்படுகின்றன.


பாலாஜி-பாரி

ஊதா நிற மெழுகுவர்த்தி

Image hosted by Photobucket.com



எனது தேசம்
மணம் நிறைந்த
ஊதா நிற மெழுகுவர்த்தியால் ஆகியிருந்தது
உள் உணரா தேவனின் கட்டளையாக.

வாடையில் நடக்கும் போது
சில சமயம் இறுகியதால்
சில இடங்களில் உடைந்து போனது.

கோடையில் நடக்கும் போது
காற்றில் மணத்தை நிரப்பி
தேசம் உருகியதில் பாதங்கள் சிக்குண்டது.

சட்டென்று எதிர்பாராத கணத்தில்
ஒரு ஒளித் திவலை தோன்றி
என் தேசத்தின் மைய நாடியில்
வளர் சுடராக தன்னை அமர்த்திக் கொண்டது.

வேனில் கால காற்றில்
மணம் நிறைந்த சூழலில்
அமைதியான அந்த மெழுகுவர்த்தியின் ஒளியில்
என்னுள் இப்போது
தேவன் புன்னகைக்கின்றான்.

என்னுடன் நடப்பாயா?


-பாலாஜி-பாரி

தலித்துகளின் தொடரும் அவல நிலை: விவாதங்களின் தொகுப்பு

இந்த பதிவு கடந்த பதிவில் இருந்த பின்னூட்டங்களின் தொகுப்பே ஆகும். இது ஆவணப்படுத்தலுக்காக மீண்டும் இடப்படுகின்றது.
உங்கள் தகவலுக்காக.

தலித்துகளின் தொடரும் அவல நிலை..

தீண்டாமை என்றோ நடந்ததாக பேசி இக்காலத்தில் அவர்களுக்கு போதிய சுதந்திரம் கிடைத்துவிட்டது என்பவர்களுக்காக இந்த சுட்டி. ஒரு பெரிய ஆதிக்க ஜாதியின் தன்மைகளை உள்வாங்கி தன்னளவில் அதை நிகழ்த்தும் ஒரு வெறியர்களின் கூட்டத்தின் செயல் என்று தடுக்கப்படும்?.

தங்கமணி :

http://thatstamil.indiainfo.com/news/2005/04/24/buddha.html
இதைப்பாருங்கள். தமிழகத்தில் (இந்தியாவில்) இது பெருமளவு நடக்கவேண்டும். மற்ற மதங்களைவிட புத்தமதம் தமிழ்நாட்டில் குறைவாகவே நிறுவனப்படுத்தப்பட்டுள்ளது. தவிர இந்து, ஆபிரகாமிய மதங்களைவிட குறைவான அமைப்புரீதியான மடத்தனங்களைக் கொண்டுள்ளதும் ஒருகாரணம்.

ரோஸாவசந்த் :

பாலாஜி, எழுதியதற்கு நன்றி. ஆனால் ஆதிக்க ஜாதியினர் என்று பொதுவாய் சொல்வது சரியல்ல. தேவர் என்று குறிப்பிட்டு சொல்லவேண்டிய அவசியம் உள்ளது என்று நினைக்கிறேன்.

karthikramas Says:

//தேவர் என்று குறிப்பிட்டு சொல்லவேண்டிய அவசியம் உள்ளது //
கள்ளர் என்றுசொல்ல வந்தீங்களா? இந்த செய்தியில் அப்படித்தான் படித்ததாய் ஞாபகம்

காசி Says:

//இதற்கிடையே, தலைவர் பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணத்தை அழகுமலை தற்போது வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், தலித் சமுதாயத்தினர் இந்தக் கிராமத்தில் சிறுபான்மையினராக உள்ளனர்.
அவர்களில் ஒருவர் ஊராட்சித் தலைவராக தேர்வு செய்யப்படுவது நியாயமாக இருக்காது. எனது மனசாட்சிக்கு அது நியாயமாகப் படவில்லை. அதனால் தான் பதவயை ராஜினாமா செய்து விட்டேன் என்று கூறியுள்ளார் அழகுமலை.//
பெரும்பான்மையினர் ஆண்டால்தான் அது சரி என்பதுபோலவும், என்னவோ எல்லா இடங்களிலும் பெரும்பான்மையினர்தான் ஆள்வதுபோலவும்! நல்ல சப்பைக்கட்டு. இந்த ஒரு ஊர் அவலத்தை சரிப்படுத்த முடியாமல் முக்கியக் கட்சிகள் ஜனநாயகம் பேசுவது கேலிக்கூத்து.

-/பெயரிலி. Says:

/தவிர இந்து, ஆபிரகாமிய மதங்களைவிட குறைவான அமைப்புரீதியான மடத்தனங்களைக் கொண்டுள்ளதும் ஒருகாரணம். /
அப்படியாகச் சொல்லமுடியுமா, தங்கமணி? ஆனால், புத்தர் போதித்த பௌத்தம் குறித்து நான் உங்களுடன் ஒத்துப்போகிறேன்.

Dondu Says:

இத்தொகுதியில் உள்ள ஆதிக்க சாதி பிறமலைக் கள்ளர் வகுப்பினர். இம்மாதிரி சம்பந்தப்பட்ட இடங்களில் ஆதிக்கசாதியின் பெயரை அடையாளம் கண்டு எழுதிக் கொண்டு வந்தால் ஒரு பெரிய உண்மை தெரிய வரும். நல்லத் துவக்கம்.
காசி கூறுகிறார்: “பெரும்பான்மையினர் ஆண்டால்தான் அது சரி என்பதுபோலவும், என்னவோ எல்லா இடங்களிலும் பெரும்பான்மையினர்தான் ஆள்வதுபோலவும்!”
சிறுபான்மை வகுப்பினர் சில இடங்களில் வெற்றி பெற்றால் அது தனிப்பட்ட வேட்பாளரின் வெற்றி. பெரும்பான்மையினர் இவர் நமக்கு நல்லது செய்வார் என நம்பி வாக்களிப்பதாகும். இந்த இடத்தில் அது பொருந்தாது. பெரும்பான்மை மக்களை வற்புறுத்தினால் இம்மாதிரி கேலிக்கூத்துகள்தான் நடக்கும். ஏன், ரிசர்வேஷனை இத்தொகுதியிலிருந்து வேறு ஏதாவது தொகுதிக்கு மாற்றிப் பாருங்களேன், சம்பந்தப்பட்டத் தொகுதியில் இருக்கும் அரசியல்வியாதிகள் எப்படி அழுகின்றனர் என்று? இதுவும் பலர் இதை அடக்கி வாசிப்பதின் ஒரு முக்கிய நோக்கமாகும். எங்கேயாவது தங்கள் தொகுதிக்கும் இந்த நிலை வந்து விடுமோ என்று எல்லோரும் அஞ்சுகின்றனர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

தங்கமணி Says:

பெயரிலி, தமிழ்நாட்டில் பெளத்தம் ஒரு பலகீனமான அமைப்பையே கொண்டிருக்கிறது. மேலும் அதில் சாதியைக் கொண்டுவரமுடியாதென நினைக்கிறேன். நான் பெளத்ததை முன்வைக்கும் போது ஜப்பானில், கொரியாவில் இருப்பது மாதிரி அமைப்பு வழிபட்ட இறுக்கமான மத நம்பிக்கையற்ற ஒரு சூழல் இங்கும் (தமிழ்நாட்டில்) வரவேண்டியே சொல்கிறேன். நிச்சயம் இலங்கை போல நிறுவனப் படுத்தப்பட்ட ஒன்றை நோக்கியல்ல.

-/பெயரிலி. Says:

தங்கமணி நன்றி. புரிகின்றது.
டோண்டு ஐயா, உங்களுக்கு ஐயங்காரை ஆதிக்கசாதி என்று எண்ணாதவரையிலே உங்களுடைய பிரச்சனை முடிவடைந்துவிடுகின்றது என்று தோன்றுகின்றது. தேவர், கள்ளர், நாடார் என்று தலித்தோடு நிகழும் சாதிக்கொடூரம் ஒரு புறமிருக்கட்டும். ஏன் பிராமணர்கள் (குறிப்பாக, ஆர் எஸ் எஸ் + பிஜேபி இனைச் சேர்ந்த பிராமணர்கள்), தலித்துகளை நோக்கித் தம் கட்சிக்காகக் குறிவைக்கின்றார்கள் என்பதை உங்கள்-விஸ்வாமித்திரன் இணைப்பு உணர்த்துகின்றது. பிராமணர்களுக்குப் போட்டியாக வந்துவிட்டார்களோ என்ற நிலையிலிருக்கும் பிராமணியத்தின் சாதித்திட்டத்தைக் கொண்டு தொங்கும் அடுத்த மட்டச்சாதிக்காரர்களை (பிராமணருக்கும் பிராமணியத்துக்குமான வேறுபாடு உங்களுக்குத் தெரியுமென்று நம்புகிறேன்; இல்லாவிட்டால், உங்களைச் சோ காக்கட்டும்) மடக்கத் தங்கள் கருவியாகப் பயன்படுத்துவதிலே பிராமணியத்தை இன்னும் பிடித்துத்தொங்க முயலும் பிராமணர்கள் கையோங்கியிருக்கும் இந்துத்துவா இயக்கங்கள் முயல்கின்றது கண்கூடு. ஆடு நனைகிறதே என்று… அழுகின்றவர்கள் ஆரோ?

அன்புடன் பாலா Says:

ரோசா,
//டோண்டு போன்றவர்கள், ஆடு நனைவதற்கு கண்ணீர் விட்டு, மனதில் நகைப்பதற்கான சமுதாய சூழலே இதன் அடிப்படை காரணம்
//
டோண்டு ராகவன் தலித்துகளின் நலனுக்காக முதலைக் கண்ணீர் வடிப்பவராகத் தோன்றவில்லை. அவரே தலித்துகளின் ஒரு முக்கியப் பிரச்சினை குறித்து பாராட்டுதலுக்கு உரிய ஒரு பதிவு எழுதியுள்ளார். சுட்டி இதோ!
http://dondu.blogspot.com/2005/03/blog-post_28.html
நீங்களும் அதற்கு பின்னூட்டம் இட்டுள்ளீர்கள்!
ஆனால் அவர் கூறிய
//பெரும்பான்மை மக்களை வற்புறுத்தினால் இம்மாதிரி கேலிக்கூத்துகள்தான் நடக்கும். ஏன், ரிசர்வேஷனை இத்தொகுதியிலிருந்து வேறு ஏதாவது தொகுதிக்கு மாற்றிப்
பாருங்களேன், சம்பந்தப்பட்டத் தொகுதியில் இருக்கும் அரசியல்வியாதிகள் எப்படி அழுகின்றனர் என்று? இதுவும் பலர் இதை அடக்கி வாசிப்பதின் ஒரு முக்கிய நோக்கமாகும்.
எங்கேயாவது தங்கள் தொகுதிக்கும் இந்த நிலை வந்து விடுமோ என்று எல்லோரும் அஞ்சுகின்றனர்.
//
விவாதத்திற்கு உரியது தான். தலித் முன்னேற்றத்துக்கு எதிரானவர் என்று ஒரேடியாக கூறுவதை ஒப்புக் கொள்ள முடியவில்லை.
என்றென்றும் அன்புடன்
பாலா

Dondu Says:

“டோண்டு ராகவன் தலித்துகளின் நலனுக்காக முதலைக் கண்ணீர் வடிப்பவராகத் தோன்றவில்லை. அவரே தலித்துகளின் ஒரு முக்கியப் பிரச்சினை குறித்து பாராட்டுதலுக்கு உரிய ஒரு பதிவு எழுதியுள்ளார். சுட்டி இதோ!
http://dondu.blogspot.com/2005/03/blog-post_28.html
நீங்களும் அதற்கு பின்னூட்டம் இட்டுள்ளீர்கள்!”
ரோசா அவர்கள் அப்பதிவுக்கிட்டப் பின்னூட்டங்கள் அனைத்தும் அதைரியப்படுத்துவதாகவே இருந்தன. இரட்டைத் தம்ளர் முறை செய்பவர்களை சட்டம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னதையே திரும்பத் திரும்பக் கூறினார். 55 வருடங்கள் செய்துப் பார்த்துத் தோற்ற முறையையே கட்டிக் கொண்டு அழுதால் என்ன பலன்? ஆகவே லேட்டரல் திங்கிங் போன்ற ஒரு முறையைக் கூறினேன். அதற்கு எத்தனை விளக்கங்கள் கூறினேன்!
“ஆனால் அவர் கூறிய
//பெரும்பான்மை மக்களை வற்புறுத்தினால் இம்மாதிரி கேலிக்கூத்துகள்தான் நடக்கும். ஏன், ரிசர்வேஷனை இத்தொகுதியிலிருந்து வேறு ஏதாவது தொகுதிக்கு மாற்றிப்
பாருங்களேன், சம்பந்தப்பட்டத் தொகுதியில் இருக்கும் அரசியல்வியாதிகள் எப்படி அழுகின்றனர் என்று? இதுவும் பலர் இதை அடக்கி வாசிப்பதின் ஒரு முக்கிய நோக்கமாகும்.
எங்கேயாவது தங்கள் தொகுதிக்கும் இந்த நிலை வந்து விடுமோ என்று எல்லோரும் அஞ்சுகின்றனர்.
//
விவாதத்திற்கு உரியது தான்.”
நான் கூறியதில் என்ன தவறு? அதுதான் உண்மை.
அன்புடன்,
டோண்டு ராகவன்

பாலாஜி-பாரி Says:
இப்போது நிதர்சனமாக தெரியும் உண்மை என்னவென்றால், தலித் மக்கள் தாங்கள் நினைத்தாலும் தங்கள் நிலைமையை மாற்ற இயலா சூழலில் உள்ளனர் என்பதே. பூங்கொடி போன்று உறுதியான நிலைப்பாட்டை எடுத்தால், அதாவது தங்கள் போராட்டத்தை துவக்கினால், ஊரை விட்டு விலக்கி வைக்கப்படும் நிலைதான் உள்ளது. இவர்களுக்கு தேர்தலில் நிற்பது என்பதே போராட்டமாகிப் போன நிலையில் நாம் எதை ஜனநாயகம் என்பது?.
இத்தகைய சூழலில், மேலும் ஒரு செய்தி.
http://kanchifilms.blogspot.com/2005/04/blog-post_26.html
ஒரு தலித் தன்னை எரித்துக் கொண்டுள்ளார். இது ஏனென்றால் தனது வயிற்றுப்பாட்டிற்கு உழைக்கும் நிலையில் அதிகாரவர்கங்களின் ஆவேச தாக்குதல்களால். தாக்குதல்கள் மனதில் ஏற்பட்டால் அதன் வலி உயிரையும் பொருட்படுத்தாது. மக்களின் காவலனாக நிற்க வேண்டிய காவலர்கள் அவரை முதலில் மனதால் காயப்படுத்தினர். பின்பு அவரது 70% சத்வீத தீக்காயத்திற்கு காரணமாகினர்.
இதிலிருந்து நாம் சில உண்மைகளையாவது கொள்வோம்.
1.அவர்கள் வளர நினைத்தாலும், போராடினாலும், (பார்ப்பனிய மனோபாவத்தை கொண்ட)அதிகாரவர்கங்கள் அவர்களை அழுத்திப் பிடித்தாவாறே தான் உள்ளது.
2. இப்படி அழுத்தி பிடிப்பதற்குண்டான கலையை மனு எழுதி வைத்தான்.
3. இவர்களுக்கு விடிவு என்பது அவர்களிடம் மட்டுமில்லை உங்களிடமும் என்னிடமும் நம் சமூகத்தில் இருக்கும் ஒவ்வொருவரிடமும் உள்ளது. இதற்கான மனோபாவ மாற்றம் இந்த செய்திகளை கண்ட பிறகாவது நிகழ வேண்டும்.
4.ஒரு ரிசர்வ் தொகுதியில் ஒருவர் போட்டியிட்டு ஜெயித்தால் அவர் ராஜினாமா செய்வது ஏன் என்பதை பார்க்க வேண்டும். இது உள்ளங்கை நெல்லிக்கனி. பிறன் மலைக்கள்ளர் வகுப்பினரின் ஆதிக்க மனோபாவம்தான். ஆனால் இவர்களுக்கு யாரையா கற்றுக் கொடுத்தது? மரத்தின் கிழைகள்தான் இவர்கள். வேர் எங்குள்ளது என்று தங்கமணி கூறிவிட்டார்.
5. ஒரு ரிசர்வ் தொகுதியில் ரிசர்வ்ட் மக்கள் யார் வேண்டுமானால் நிற்கலாம். இதில் எந்தவித பேச்சு வார்த்தையும் தேவையிருக்க கூடாது. இது அடிப்படை உரிமை.
நிறைய இருக்கின்றது எழுத. இப்போது நேரமில்லை. முடிந்தால் தனிப் பதிவாக பதிகின்றேன்.

Karthikramas Says:

இது மாதிரியான விஷயங்களுக்கு தீர்வாய் என்ன செய்யமுடியுமென்று யோசித்த்து ஒன்று கிடைக்காமல் தற்போதைக்கு என் புத்தியை சாடிக்கொண்டிருக்கிறேன். மேலும் எழுதுவேன்

Padma Arvind Says:

சிலை திறப்பு விழாவிற்காக வந்த மத்திய மந்திரி ஜெகஜீவன் ராம் சென்றபின் அந்த சிலைக்கு புண்ணியாசனம் செய்ததை மறக்க முடியுமா? தினமர் செய்தியயும் புகைப்படத்தையும் பார்த்து அதிர்ந்து போனேன். ஒவ்வொரு நாட்டிலும் ஏதேனும் ஒரு பெயரில் தீண்டாமை இன்னமும் இருக்கிறது, அரசியல்வாதிகள் அதை வளர்க்கிறார்கள். மக்கள் தொகைகணக்கெடுப்பு இந்தியாவில் சாதீய அடிப்படையில் இருப்பதாகவும், அமெரிக்காவில் இன அடிப்படையில் இருப்பதாகவும் சமீபத்தில் நடந்த குழு விவாதம் ஒன்றில் அறிய கேட்டேன்

Padma Arvind Says:

மத்திய மந்திரி ஜெகஜீவன் ராம்சிலை திறந்துவைத்துவிட்டு சென்றபின், சிலையை புணருத்தாரணம் செய்த மக்கள் வாழும் இடத்தில் இருக்கிறோம். தினமலர் செய்தியை பார்த்தபின், தீக்குளித்த ஒருவரை வேடிக்கை பார்த்த கூட்டமும் பார்த்தேன். வேதனையாக இருக்கிறது. தீண்டாமை எல்லா நாட்டிலும் ஏதோ ஒருவகையில் இருக்கிறது சில அரசியல்வாதிகளின் வாழ்த்துக்களுடன். சமீபத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் மக்கள் தொகை கணக்கீடு இந்தியாவில் சாதி அடிப்படியிலும், ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார அடிப்படையிலும், அமெரிக்காவில் இன அடிப்படையிலும் செய்யப்படுவதாக உரையாடப்பட்டது. சாதி அடிப்படையில் தேர்தலில் நிற்பதும், இன்னார் இந்த சாதி என்று அடையாளம் சொல்வதும், சாதிக்குள்ளேயே சில சின்ன சின்ன பிரிவுகள் தீண்டாதவராய் நடத்தப்படுவதும் அனுபவத்தில் கண்ட உண்மை. வருந்த வேண்டிய செய்தி, இதை விடாமல் வளர்த்துக் கொண்டே இருப்பார்கள் அரசியல்வாதிகள் சுய இலாபத்திற்காக.

தங்கமணி Says:

//உங்களின் இந்தக்கருத்தை ஒத்துக்கொள்ளலாம்.//
பெயரிலி,
கருவறைக்குள் நாங்கள் மட்டும்தான் வருவோம் (நீங்கள் வரக்கூடாதெனச்) சொல்வதற்கும், பஞ்சாயத்துத் தலைவராக நாங்கள் மட்டும் தான் வருவோம்(நீங்கள் வரக்கூடாதெனச்) சொல்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எனவே நோய் முதல் நாடி தீர்த்தலே சரியானது.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களிடம் போய் சுனாமி ஆராய்ச்சி மையமும், அறிவிப்பு மையமும் அமைக்கப்போவதைச் சொல்லமுடியாது பெயரிலி, அது அவர்களுக்குத் தேவையுமில்லை. ஆனால் உண்மையிலேயே சுனாமியை எதிர்கொள்ள உணவுப்பொட்டலங்கள் போதாது; அது வழியுமல்ல. மூன்று தொகுதி மக்களுக்கான தீர்வல்ல நான் சொல்லிக்கொண்டிருப்பது. அது உங்களுக்கு புரியும், புரியவேண்டும்.
பாலாஜி, தீவைத்துக்கொண்டவனுக்கு மருந்து போட்டுவிட்டு பொட்டிக்கடை வைத்துக்கொடுத்துவிட்டால் அவர்கள் சுயமாக உழைத்து முன்னுக்கு வந்துவிடுவார்கள்.
அவனும் சுயமாக கட்டிடத்தொழில் பண்ணி பிழைத்துகொண்டுதானிருந்தான். அவனுக்கு என்ன கொழுப்பு வந்ததென்று போய் நெருப்பு வச்சுகிட்டான்? எல்லாவற்றுக்கும் காரணமாக சுயமாக முன்னுக்கு வரவேண்டும் என்று சொல்வது ஒரு வகையில் அவர்கள் மீது செலுத்தப்படும் வன்முறை. இந்தியாவில் காலையில் இருந்து மாலைவரை, குடும்பத்தோடு சுயமாக உழைக்கும் சாதியினருக்கு,பெண்கள் வெளியே போனால் ஒழுக்கமின்மை என்று அறிவுறுத்தும் சிந்தனைவாதிகள் சுயமாக உழைப்பதையும், சுயமரியாதையையும் பற்றியும் சொல்லிக்கொடுப்பதுதான் வன்முறையின் உச்சகட்டம்.
சுயமரியாதை அம்மக்களுக்கு எப்போதும் குறைவாய் இருந்ததில்லை; ஏனெனில் அது உழைப்போடு சம்பந்தப்பட்டது.

-/பெயரிலி. Says:

/கருவறைக்குள் நாங்கள் மட்டும்தான் வருவோம் (நீங்கள் வரக்கூடாதெனச்) சொல்வதற்கும், பஞ்சாயத்துத் தலைவராக நாங்கள் மட்டும் தான் வருவோம்(நீங்கள் வரக்கூடாதெனச்) சொல்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எனவே நோய் முதல் நாடி தீர்த்தலே சரியானது./
தங்கமணி, நீங்கள் சொல்லும் பார்வையிலே அது சரியே; நான் சொல்ல வந்தது, சாமிக்கு முன்னால் சாப்பாடு முக்கியமென்ற அடிப்படையினைக் குறித்து. (அதிலே டோண்டு ஐயாவின் ‘மட்டும்’கூடச் சேர்ந்து கொண்டுவிட்டது)

Padma Arvind Says:

தங்கமணி
உழைப்போடு சம்பந்தப்பட்டது சுய மரியாதை. சரியாய் சொன்னீர்கள்

ரோஸாவசந்த் Says:

//“ஆனால் அவர் கூறிய
//பெரும்பான்மை மக்களை வற்புறுத்தினால் இம்மாதிரி கேலிக்கூத்துகள்தான் நடக்கும். ஏன், ரிசர்வேஷனை இத்தொகுதியிலிருந்து வேறு ஏதாவது தொகுதிக்கு மாற்றிப்
பாருங்களேன், சம்பந்தப்பட்டத் தொகுதியில் இருக்கும் அரசியல்வியாதிகள் எப்படி அழுகின்றனர் என்று? இதுவும் பலர் இதை அடக்கி வாசிப்பதின் ஒரு முக்கிய நோக்கமாகும்.
எங்கேயாவது தங்கள் தொகுதிக்கும் இந்த நிலை வந்து விடுமோ என்று எல்லோரும் அஞ்சுகின்றனர்.
//
விவாதத்திற்கு உரியது தான்.”
//
நான் கூறவில்லை. பாலாஜி உங்கள் மெயிலுகு பதில் எழுதுகிறேன். சங்கரபாண்டி, நாராயணணுக்கும் எழுதுகிறேன்.

ரோஸாவசந்த் Says:

//காலையில் இருந்து மாலைவரை, குடும்பத்தோடு சுயமாக உழைக்கும் சாதியினருக்கு,பெண்கள் வெளியே போனால் ஒழுக்கமின்மை என்று அறிவுறுத்தும் சிந்தனைவாதிகள் சுயமாக உழைப்பதையும், சுயமரியாதையையும் பற்றியும் சொல்லிக்கொடுப்பதுதான் வன்முறையின் உச்சகட்டம்.//
நன்று சொன்னீர் தஙகமணி. சில திசைதிருப்பல்களை புறக்கணித்து, அதற்கு மீண்டும் மீண்டும் பதில் தருவதை நிறுத்தி இந்த பிரச்சனை குறித்து மட்டும் பேசுவது தேவை என்று நினைக்கிறேன்.

ரோஸாவசந்த். Says:

http://thatstamil.indiainfo.com/news/2005/04/27/keeripatti.html

தங்கமணி Says:

http://thatstamil.indiainfo.com/news/2005/04/28/kovai.html

aathirai Says:

டோ ண்டு சார் நல்ல மனத்துடனே சொன்னாலும், பொருளாதார மாற்றம்
மட்டுமே முழு தீர்வு ஆக முடியாது.
தமிழ்நாட்டில் 4/5 தலித் IAS ஆபீசர்கள் எந்த வேலையும் கொடுக்கப்படாமல் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.
இதில் ஒருவர் கோர்ட்டுக்கு போய் பின்னர் போஸ்டிங்க் வாங்கியிருக்கிறார். IAS க்கு இந்த நிலைமை என்றால்…..
தங்கமணியின் பின்னூட்டத்தில் கூறியிருப்பதைப் போல அடிப்படை பிரச்சினையை அணுகாமல் மேலோட்டமா
இந்த பிரச்னையை தீர்க்க முடியாது.

aathirai Says:
“இந்தியாவில் காலையில் இருந்து மாலைவரை, குடும்பத்தோடு சுயமாக உழைக்கும் சாதியினருக்கு,பெண்கள் வெளியே போனால் ஒழுக்கமின்மை என்று அறிவுறுத்தும் சிந்தனைவாதிகள் சுயமாக உழைப்பதையும், சுயமரியாதையையும் பற்றியும் சொல்லிக்கொடுப்பதுதான் வன்முறையின் உச்சகட்டம்.”
மிகவும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

Karthikramas Says:
Thanks to Kumudam.com
=========================
அழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்குவதும் பின்னர் மீண்டும் அழகர்மலை நோக்கிச் செல்வதும் ஆண்டுதோறும் தவறாமல் நடக்கும் நிகழ்ச்சி. அதுபோலத்தான் கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் பதவியும் ஆகிவிட்டது.
கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் பதவி தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டது. இதுதான் பிரச்னையே! இந்தமுறை பல அரசியல் கட்சிகள் ஆதரவோடு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வேட்பாளர் பூங்கொடி நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து கிராம மக்கள் சார்பில் அழகுமலை வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார். வழக்கம்போல கிராம மக்களின் வேட்பாளரான அழகுமலை, அமோக வெற்றி பெற்றார். பூங்கொடி வெறும் 29 ஓட்டுக்கள் மட்டுமே வாங்கினார்.
கடந்த 24_ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை எட்டரை மணிக்குப் பதவிப் பிரமாணம் எடுப்பதற்காக அழகுமலை, கீரிப்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வந்தார். அவருடன் இரண்டு போலீஸாரும் பாதுகாப்புக்கு வந்தனர். யாருடனும் பேசாமல் நின்ற அழகுமலையை நெருங்கி, ‘பதவிப் பிரமாணம் செய்தவுடன் ராஜினாமா செய்துவிடுவீர்களாமே…’ என்று கேட்டோம். ‘ஆமாம்…’ என்றார் மெல்லிய குரலில். ‘தேர்தலின்போது வெற்றி பெற்று மக்களுக்குத் தொண்டாற்றுவேன் எனச் சொன்னீர்களே?’ என்றதும், ‘எல்லோரும் நிம்மதியாக வாழணும்… அவ்வளவுதான்’ எனச் சொல்லிவிட்டு நகர்ந்துகொண்டார்.
சுமார் ஒன்பதரை மணியளவில் கிராமத்து மக்கள் சுமார் முப்பது பேர் அழகுமலையை அங்கிருந்த கோயிலுக்கு ஆரவாரத்தோடு கூட்டிச் சென்றார்கள். அவருக்கு ஜரிகைத் துண்டு அணிவிக்கப்பட்டது. அழகுமலை முகத்தில் எந்த ரியாக்ஷனும் இல்லை. எல்லோரும் சாமி கும்பிட்டார்கள். பின்னர் அருகிலுள்ள பெரிய வேப்ப மரத்தின் கீழ் கிராமக் கூட்டம் நடந்தது. அதில் சில வக்கீல்களும் கலந்துகொண்டனர். அப்போது ஒரு வக்கீல் எழுந்து ஒரு அஃபிடவிட்டை வாசித்தார். ‘அதில் உள்ளதெல்லாம் எனக்கு உடன்பாடுதான்’ என்று சொன்ன அழகுமலை, அதில் கையெழுத்துப் போட்டார். பிறகு ஒரு வெள்ளைத்தாள் வாங்கி வரச்சொல்லி Êஏதோ எழுதி அதுவும் வாசிக்கப்பட்டு அழகுமலையின் கையெழுத்தும் பெறப்பட்டது. அழகுமலை ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்தவர்.
பிறகு அழகுமலை, பஞ்சாயத்து அலுவலகத்துக்கு கிராம மக்களால் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். பத்தேகால் மணியளவில் பி.டி.ஓ. ராமச்சந்திரன் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கூடிநின்ற கூட்டம் கைதட்டியது. பதவியேற்றதும் மினிட் புத்தகத்தில் அவர் கையெழுத்துப் போட்டார். பின்னர் வக்கீல் ஏற்கெனவே வைத்திருந்த ஒரு வெள்ளைத்தாளை அழகுமலையிடம் நீட்ட… அதை என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அவர், அதை வாங்கி மீண்டும் அந்த வக்கீலிடமே நீட்டினார். ‘அதிகாரியிடம் கொடு…’ என கண்ஜாடை செய்த பின்னரே அதிகாரியிடம் கொடுத்தார். அது ராஜினாமா கடிதம்!
அதை வாங்கிப் படித்த பி.டி.ஓ., ‘நீங்க பதவியைத் தொடரணும். அப்போதுதானே கிராமத்தில் வளர்ச்சிப்பணியெல்லாம் தடையில்லாம நடக்கும். ஊருக்கு நல்லது செய்யணும்னா நீங்க பதவியில இருக்கணும். ஏன் ராஜினாமா செய்யறீங்க?’ என்று அட்வைஸ் செய்தார். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு குரல், ‘மந்திரி ராஜினாமா செஞ்சா ஏன் எதுக்குன்னு கேட்பீங்களா… இனி வக்கீல் பேசுவார்’ என்றது. பின்னர் வக்கீல் ஒருவர் அழகுமலைக்காக அஃபிடவிட் ஒன்றை அதிகாரியிடம் கொடுத்தார். அதனுடன் ராஜினாமா கடிதமும் இருந்தது.
அழகுமலை கையெழுத்திட்டிருந்த அந்த அஃபிடவிட்டில்…
‘18.4.2005 அன்று பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், யாருடைய வற்புறுத்தலுமின்றி, அச்சுறுத்தலுமின்றி, தூண்டுதலுமின்றி பதவியேற்பு நாளான இன்று என்னைத் தேர்ந்தெடுத்த மக்களின் ஒருமித்த கருத்துப்படி பதவியை ராஜினாமா செய்கிறேன். என்னைத் தேர்ந்தெடுத்த பிரமலைக்கள்ளர் இன மக்கள் 1950_ம் ஆண்டு ஜனவரி 26_ம் தேதி வரை ஞிமீஜீக்ஷீமீssமீபீ சிறீணீssமீs என்ற பட்டியலில் பள்ளர், பறையரோடு அனைத்து சலுகைகளையும் பெற்று வந்தனர். அதன்பிறகு அரசு சலுகைகள் குறைந்து மற்ற முன்னேறிய இனத்தவரை அவர்களோடு சேர்த்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிட்டு அவர்களின் சலுகைகள் குறைக்கப்பட்டன.
அதே நேரத்தில் எங்கள் இன மக்களுக்கு சலுகைகள் என்ற பெயரில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை எங்களில் பொருளாதார ரீதியாக முன்னேறியவர்களே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனைக் கண்டிக்கிறேன். அடுத்தமுறை இந்தப் பஞ்சாயத்துத் தலைவர் பதவி, பொதுப்பட்டியலுக்கு வரவேண்டுமென்பதைப் பிரதிபலிக்கும் விதமாக என் பதவியை ராஜினாமா செய்கிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து பி.டி.ஓ. ராமச்சந்திரனிடம் கேட்டபோது, ‘‘அவரது ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதா, வேண்டாமா என முடிவு செய்யவேண்டியது கலெக்டர்தான்… இந்தக் கடிதம் கலெக்டருக்கு அனுப்பப்படும்’’ என்றார்.
இந்தத் தேர்தல் சட்ட நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளால் நியமிக்கப்பட்டிருந்த சென்னை பார் கவுன்சில் உறுப்பினரும் தி.க. சட்டப்பிரிவு மாநிலச் செயலாளருமான கி. மகேந்திரனிடம் இந்த ராஜினாமா முடிவு குறித்துக் கேட்டோம்.
‘‘தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராஜினாமா செய்யக்கூடாது என நாங்கள் ஏற்கெனவே வற்புறுத்தி வருகிறோம். இப்போது அவர் நிர்ப்பந்தத்தின் பேரிலேயே ராஜினாமா செய்துள்ளார். அதை கலெக்டர் ஏற்றுக்கொள்ளக்கூடாது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தெளிவான முடிவு எடுக்கவில்லையென்றால் நியாயம் கிடைக்க கோர்ட்டிற்குச் செல்வோம்…’’ என்றார்.



விவாதத்தில் பங்கேற்ற நண்பர்களுக்கு நன்றிகள்
அன்புடன்
பாலாஜி-பாரி

PS: பின்னூட்டம் இடுவதில் இருந்த சிரமங்கள் குறித்து திரு. இராகவன் கூறிய தகவலுக்கு நன்றிகள். அதை சரிசெய்துள்ளேன் என நினைக்கின்றேன். (எனது இந்த புது வீட்டில் பல விசயங்கள் இன்னும் புதிதாகவே உள்ளது!)

தலித்துகளின் தொடரும் அவல நிலை..

தீண்டாமை என்றோ நடந்ததாக பேசி இக்காலத்தில் அவர்களுக்கு போதிய சுதந்திரம் கிடைத்துவிட்டது என்பவர்களுக்காக இந்த சுட்டி. ஒரு பெரிய ஆதிக்க ஜாதியின் தன்மைகளை உள்வாங்கி தன்னளவில் அதை நிகழ்த்தும் ஒரு வெறியர்களின் கூட்டத்தின் செயல் என்று தடுக்கப்படும்?.

ஒரு மாலை உணவு வேளையில்

ஒரு நாடுவிட்டு மறுநாட்டிற்கு செல்லும் போது, நமக்கு புதிய நாட்டின் மக்களின் பண்பாடு, மற்றும் பழக்க வழக்கங்களை எதிர்கொள்வது மிகவும் சுவையான மற்றும் மகிழ்ச்சியான அனுபவம். மற்ற ஐரோப்பிய நாடுகளை போல் அல்லாது, கனடாவில், பல் வகை நாட்டு மக்களும் வசித்து வருகின்றனர். இவர்களிடையே பண்பாடு மற்றும் பழக்க வழக்கங்கள், தங்களது தாய் நாட்டை சார்ந்து இருந்தாலும், இங்குள்ள இயற்கை நிகழ்வுகள் காரணமாக அவர்கள் அதில் சில மாறுதல்களை செய்து வாழ்வதை பார்க்க நல்ல அனுபவமாக இருக்கும்.
மேலும் கனடாவின் மக்கள் என்று யாரை சொல்லலாம் என்றால், சிவப்பிந்தியர்களையும், இன்னுயிட்-களையும் சொல்லலாம்.

எனது பல்கலை கழக நண்பர் ஒருவர் இந்திய உணவு வகைகள் மேல் நாட்டம் கொண்டவர். திரு. பாடில் என்பது அவர் பெயர். அல்ஜீரிய நாட்டுக் காரர். அவருக்கு இந்திய உணவை எப்படி சமைக்க வேண்டும் என்பதை அறிய ஆர்வம். ஆகையால் அவரையும், எனது நண்பரும் வீட்டின் உரிமையாளருமான திரு குல்வந்த் என்ப்வரையும் அழைத்தேன். மாலை உணவு செய்து சாப்பிட்டவாறே பேச ஆரம்பித்தோம்.

திரு பாடில் தனது அனுபவங்களை சொல்ல துவங்கினார்.

அவருக்கு ஒரு நண்பர். அவர் ஓண்டாரியாவில் வசிப்பவர். அந்த நண்பர் ஒரு முறை பணி நிமித்தமாக வட கனடா செல்ல வேண்டி இருந்தது. அவர் சென்ற பகுதியில் இன்னுயிட்ஸ் வாழ்ந்து வருகின்றார்கள். இரு வாரங்கள் அங்கிருந்து விட்டு, திரும்பி வந்தவர், உடனே யாரிடமும் எதுவும் சொல்லாமல், மறுபடியும் வடகனடா சென்று, ஒரு ஆறுமாதம் வாழ்ந்தார். பின்பு அங்கிருந்து வந்து, தனது குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்று, இந்த் ஆண்டுடன் 22 வருடங்களாகி விட்டது என்று பாடில் சொல்லும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாயிருந்தது. தொடர்ந்து திரு பாடில் கூறினார் , "அவர் ஒரு எட்டு ஆண்டுகளுக்கு முன் என்னை அங்கு ஒரு பள்ளியில் பாடம் கற்பிக்க அழைத்தார். அப்போது எனக்கு தெரிந்து இருக்கவில்லை எத்தகைய அனுபவம் எனக்கு காத்திருக்கிறதென்று. நான் அங்கு சென்றேன். ஒரு ஆறு மாதம் இருந்தேன்", என்று சொல்லிவிட்டு அம்மக்களின் வாழ்க்கை முறை பற்றி சொல்லத் துவங்கினார்.

இன்னுயிட்ஸ் மக்கள் சமூகமாக வாழ்வதையும் அவர்களது நேர்மையான சிந்தனைகளையும், எளிய வாழ்க்கை முறைகளையும் பற்றி சொன்னார்.

அவர்களது முக்கிய தொழில் மீன் பிடித்தல், வேட்டையாடுதல். அனைவரிடமும் துப்பாக்கிகள் உண்டு. அவர்கள் தாங்கள் வேட்டையாடிய பொருட்களையும், சீல் மற்றும் மீன்களையும் ஒரு ஊருக்கு பொதுவான இடத்தில் சேமித்து வைத்து விடுவார்கள். அந்த ஊர் மக்கள் தங்களுக்கு அன்றன்றைய தேவைக்கானதை மட்டும் எடுத்துக் கொண்டு செல்வார்கள் "இலவசமாக". பாடிலிடம் கூட அவர்கள் இது உங்களுக்கும் சேர்த்துதான் என்று சொன்னதை அவரால் ஏற்க முடியாமல் பின்பு அதை புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டதையும் சொன்னார்.

அவர்களுக்குள் சண்டைகள் வரும், மற்ற எல்லா சமூகத்தினரையும் போல. ஆனால், அவர்கள் துப்பாக்கியை பயன்படுத்துவதில்லை இச்சண்டைகளில். கத்தியால் கொலை கூட செய்வர். ஆனாலும், விசாரணையின் போது, "ஆமாம் கொலை செஞ்சேன்" என்று உரத்து கூறிவிடுவர்.

இவர்கள் சமூகத்தில் குழந்தைகளின் போக்கு சுவாரசியமானது. ஒரு ஐந்து வயது சிறுவன், தனது குளிர் உடுப்பை கழற்றி வைத்துவிட்டு, பனியில் சுருக்கி கொண்டு கிடந்துள்ளான். பாடில் அதை பார்த்துவிட்டு பதறி போய், அருகேயிருந்த பெரியவரிடம் சுட்டிக்காட்டி அவனை எழுப்ப சொன்னாராம். அந்த பெரியவர், "அட போப்பா! அவன் எதாவது வம்பு பண்ணிட்டிருப்பான்" என்று சொன்னாராம். இவர் மேலும் மேலும் வலியுறுத்தவே, அவர் அவனை எழுப்பியுள்ளார். உடனே அச்சிறுவன் தலையை மட்டும் திருப்பி, "ஹாய்" என்றானாம் சிரித்தவாறே. உடனே அப்பெரியவர் சிரித்துக் கொண்டே, "அவன் இந்த பனிக்கு பழகறான்" என்று கூறி சென்றுவிட்டாராம். நம்ம ஆளு முகத்தில் ஈயாடவில்லை(கிளிசே :P )

அவர்களுக்கு கல்வியின்பாற் நாட்டமும் இல்லை. வெறுப்பும் இல்லை. இது சுவையன்றோ?. இவர் முதன் முதலில் வகுப்புக்கு செல்கின்றார் பாடம் எடுக்க. வகுப்பில் யாரையும் காணவில்லை. ஆனால் சத்தம் மட்டும் வருகின்றது. என்னடா என்று பார்த்தால், குழந்தைகள் டெஸ்க்-கின் அடியில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்தனராம். இவருக்கு ஒரே சிரிப்பு இதைக் கண்டு. அவர்களை ஒருவாறு ஒன்று சேர்த்து டெஸ்க்கில் உட்காரவைத்து பாடம் எடுக்கும் போது, மிட்டாய்களை கொடுத்து ஆர்வத்தை வரவழைத்த கதையையும் சொன்னார்.

இதை கேட்டு கொண்டிருந்த திரு. குல்வந்த், " இந்த இடத்திலிருந்து இன்னும் வடக்கே இருந்து தெற்கு பகுதிக்கு சுற்றுலாவாக சில மாணவர்களை எங்கள் பள்ளி அழைத்திருந்தது. அவர்கள் வந்தார்கள். சுற்றி பார்த்தார்கள். மகிழ்ந்தார்கள். அவர்கள் திரும்பும் போது, அவர்களிடம் நாங்கள் கேட்டோம், உங்களுக்கு ஆச்சரியமும் சந்தோசத்தையும் அளித்த பொருள் என்ன? என்று." அதற்கு அவர்கள் அனைவருமே ஒரு சேர அளித்த பதில் "மரம்". அவர்கள் இதற்கு முன் மரங்களை பார்த்ததில்லையாம். அவர்கள் இருக்கும் இடங்களில் கிடையாதாம்.!!

மேலும் ஆங்கில மொழி பேராசிரியர் என்ற வகையில் அவர் கூறியது " நாற்பது வருடங்கள் முன்பு வரை அவர்களது மொழியில் நான், எனது என்ற வார்த்தைகளே கிடையாது". இது என்னை திகைப்புறச் செய்தது.

இதை குறித்து நான் மேலும் படிக்க முயல்கையில், சமூக அறிவியலாளர் ஒருவர், ஒரு இன்னுயிட்டிடம், பேச்சு வாக்கில் கேட்டாராம், " என்ன யோசிச்சு கிட்டு இருக்கீங்க?" என்று. அதற்கு அந்த இன்னுயிட் நண்பர், " நான் ஏன் யோசிக்கனும்? எங்ககிட்டே தேவையான மாமிச உணவு இருக்கே" என்று மிக இயல்பாக கூறினாராம். இது ஸென் கதை மாதிரி இருக்கு. இல்லையா?.

அப்புறம், என் நண்பன் ஒரு சமூக அறிவியல் புத்தகத்தில் படித்த செய்தியை சொன்னான்.
அக்காலத்தில் இன்னுயிட்களில் வயதானவர்கள் தாங்கள் சமூகத்திற்கு பாரம் என்று நினைத்துவிட்டால் தங்களது ஆடைகளை களைந்து விட்டு, வடக்கு நோக்கி யாரிடம் எதுவும் கூறாமல் நடக்கத் துவங்கி விடுவர் என்று.

இயற்கை நமக்கு பாடங்களை கற்பித்தவாறே உள்ளது.

ஒரு புத்தகம்-shogun

பொதுவாக நான் ஒரு பரந்த வாசிப்பனுபவம் கொண்டவன் கிடையாது. ஆனாலும் அவ்வப்போது என் கண்களில் சில சுவாரசியமான புத்தகங்கள் படத்தான் செய்கின்றன. தேர்ந்த உண்மையான உள்ளொளியுடன் எழுதப் படுகின்ற புத்தகங்கள், நமக்கு பல நாள் வாழ்ந்த அனுபவங்களை கொடுப்பதில் தவறுவதில்லை. இவ்வகையில் நான் சீரிய புத்தகங்களை சான்றோர்களாக கருதுகின்றேன். கல்வெட்டுகள், சுவடிகள், செவி வழி ஞானம் என்று பல வகைகளில் நமக்கு அவர்கள் வாழ்ந்த காலத்தின் சுவடுகளை நம் முன்னோர்கள் விட்டுச் சென்றுள்ளனர். இந்த செய்திகளின் அடிப்படையில் எழுதப்படும் வரலாற்று புதினங்கள் சில நம்மில் பலருக்கு அறிமுகமானவைகளே. இதில் குறிப்பிட்டு சொல்வதென்றால், 'சிவகாமியின் சபதம்', 'பொன்னியின் செல்வன்' என்ற இந்த இரு புத்தகங்களையும் சொல்லலாம். இவை தவிர 'வால்காவிலிருந்து கங்கை வரை' சமுக நிகழ்வுகளுக்கு பின் புலமாக இருந்த சில காரணிகளை தோலுரிப்பதால் இந்நூலை அவ்வகை புத்தகங்களில் மிக முக்கியமான ஒன்று எனக் கொள்கின்றேன். இந்த பதிவில் வரலாற்றுச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு ஆங்கில புதினத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள தலைப் படுகின்றேன்.

புத்தகத்தின் தலைப்பு: ஷோகன்
வெளியான ஆண்டு: 1975
ஆசிரியர் : ஜேம்ஸ் க்ளெவல்
வெளியீடு :Atheneum, NewYork

இந்தப் புதினம், 1600-க்கு மேற்பட்ட ஆண்டுகளில் ஜப்பான் எவ்வாறு இருந்தது என்பதை நமக்கு காட்டுகின்றது. அங்கு நிலவிய அரசியல், சமூக,மத சூழ்நிலைகளை நமக்கு ஒரு ஐரோப்பிய மாலுமியின் மூலம் அறிமுகப் படுத்துகின்றார், திரு. ஜேம்ஸ் க்ளெவல். இந் நூலை பற்றி தெரிந்து கொள்ளும் முன் 1560-1600 வரையான காலகட்டத்தில் ஐரோப்பாவின் அரசியல் நிலை பற்றிய சிறு குறிப்பை க்ளெவலின் கண்கள் மூலம் பார்ப்போம்.
கத்தோலிக்க ஸ்பெயினுடன் நாற்பது வருடத்திற்கும் மேலாக போர்முறை எதிர்ப்பை காட்டி வருகின்றது புரொட்டஸ்டன்ட் நெதர்லாந்து. நெதர்லாந்து சட்டரீதியாக ஸ்பெயின் பேரரசின் ஒரு பகுதியாகவே இருக்கின்றது. இங்கிலாந்து ரோமன் கிறித்துவ சம்பிரதாயங்களில் இருந்து ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன் விடுபட்ட முதல் நாடு என்பதால், இருபது வருடங்களாக ஸ்பெயினுடன் அறிவிக்கப்பட்ட போரில் ஈடுபட்டுள்ளது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் கடைசி பத்தாண்டுகளாக இங்கிலாந்து, நெதர்லாந்துடன் இணைந்து செயல்படுகின்றது.
மேலும் போப் கிளிமண்ட் VII 'ஸாராகோசா ஒப்பந்தத்தில்' (1529) கையெழுத்திட்டு, உலகின் கிழக்கு பாகாங்களை போர்த்துகீசியருக்கும், மேலை பாகங்களை ஸ்பானியர்களுக்கும் பிரித்து விடுகின்றார். போர்த்துகீசியர்களும், ஸ்பானியர்களும் ரோமன் கத்தோலிக்க சர்ச்-சை ஏற்றுக் கொண்டவர்கள்.

இந்த நிலையில் கதை துவங்குகின்றது.

ஒரு இங்கிலாந்து மாலுமி, நெதர்லாந்து கப்பலை செலுத்தி கொண்டு தென் அமெரிக்கா அடைவதும் அங்கிருந்து அவர் ஜப்பானுக்கு செல்வதும் ஒரு அற்புத தன்னம்பிக்கை முயற்சி. இதில் மாலுமி எவ்வாறு திடசித்தனாக இருப்பதும், தனது குழுவினருக்காக போராடுவது நன்றாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த மாலுமியின் பெயர், Blackthrone. இவர், ஜப்பானிய வாழ்க்கை முறைகளை பின்பற்றி அதில் உள்ள சிறப்பம்சங்களை உள்வாங்குவது, பல மன அதிர்வுக்குள் நிகழ்கின்றது. இந்த மாலுமிக்கு அன்ஜின்-சான் என்ற பெயர் ஜப்பானியர்களால் இடப்படுகின்றது. இதற்கு கேப்டன்
என்று பொருள். இவர் ஜப்பானுக்கு வருவதற்கு முன்பே, அங்கு போர்த்துகீசர்களால் ரோமன் கத்தோலிக் சர்ச் நிறுவப்பட்டிருக்கின்றது. இதன் பாதிரியாக அல்விட்டோ என்பவர் உள்ளார். இவர் ஜப்பானில் சர்ச்களை வளர்ப்பதில் பேரார்வம் கொண்டு அங்குள்ள அரசியல் நிலைமையை தனக்கு சாதகமாக்க கடுமையாக முயல்கின்றார்.

ஜப்பான் அக்கால கட்டத்தில் பல மாகாணங்களாக பிரிந்து இருக்கின்றது. 1542 களில் டைக்கோ என்பவர், தனது போர்திறம் மூலம், அனைத்து மாகாணங்களையும் இணைத்து ஒரு அவையை உண்டாக்குகிறார். அந்த அவைக்கு கவுன்சில் ஓஃப் ரீஜென்ட்ஸ் என்று பெயரிடப்படுகின்றது.டைக்கோ அதன் தலைவராக பிரகடனப்படுத்தி கொள்கிறார். டைக்கோ-விற்கு வாரிசாக ஒரு சிறுவன் இருக்கும் தருவாயில் அவர் மரணமுறுகின்றார். அச்சிறுவன் வளர்ந்து பொறுப்பேற்கும் வரை, டோரோனாகா -வை தலைவனாக அந்த கவுன்சில் அரசியல் மற்றும் அதிகாரத்தின் காரணமாக ஏற்றுக் கொள்கின்றது. டோரோனாக டைக்கோவின் வட்டத்திலேயே என்றும் இருந்தவர் என்பதும் ஒரு காரணம். ஆனாலும் மாகாணங்களின் தலைவர்களுக்கு கவுன்சிலின் தலைவனாக வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டிருக்கின்றது.

இச்சூழலில் தான் பிளாக்த்ரோன் ஜப்பானுக்குள் நுழைகின்றார். அவரது கலம் புயலில் சிக்கி கரையைத் தட்டுகின்றது. பின்பு டோரோனாகா -வை சந்திக்கின்றார். இவரை பயன்படுத்தி, தனது இராஜ தந்திரம் மூலம் டோரோனாகா எவ்வாறு காயை நகர்த்துகின்றார் என்பது சுவாரசியமானது.

சில மாகாண தலைவர்கள் ரோமன் சர்ச்சி-ற்கு ஆதரவாக உள்ளார்கள். ஆனால், அவர்களுக்கு சர்ச்-சை விட அதன் மூலம் கிடைக்கும் கறுப்புக் கப்பல் வணிகத்தின் மீது அதிக நாட்டம்.

இவ்வாறு ஒரு பெரிய அளவில் அரசியல் நிகழ்வுகளும், அதில் உள்ள சிக்கல்களும், அதை ஒவ்வொருவரும் பயன்படுத்தும் முறைகளும் மிகவும் திடுக்கிட வைக்கும்.

இப்புதினத்தில் எனக்கு மிகுந்த சுவாரசியமான சில விசயங்களை உங்களுக்கு தருகின்றேன்.

1. Rutters: இது ஒரு மாலுமியின் உயிர் மூச்சு. இது ஒரு சிறு புத்தகம். இதில் ஒரு மாலுமி தான் புதிதாக பயணம் மேற்கொள்ளும் வழிகளில் காணும் நிகழ்வுகள் குறிக்கப்பட்டிருக்கும். துறைமுகங்களுக்கும், முனைகளுக்கும் உண்டான காந்த முள்ளின் அளவைகள் இருக்கும். மேலும், அவர்கள் காணும் கடலின் நிறமும், ஒலியும், கடற்படுகைகளும் குறிக்கப்பட்டு இருக்கும். காற்றின் போக்கும் அவைகளின் திசைகளும் இருக்கும். மேலும் நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதான் செய்திகளும் உண்டு. ஒரு பாதுகாப்பான கடற்பயணத்திற்கு தேவையான அனைத்து குறிப்பும் எனக் கொள்ளலாம்.
இதை கைபற்ற பல வழிகளில் பல முயற்சிகள் நிகழும். இதில் போலிகளும் உண்டு. ஒரு தேர்ந்த மாலுமியால் மட்டுமே போலியையும், உண்மையையும் பிரித்து அறிய முடியும். இதை எவ்வாறு பிளாக்த்ரோன் பயன்படுத்துகிறார் என்பது சுவாரசியம்.

2. டைக்கோவின் இறப்புக் கவிதை:
" நான் ஒரு பனித்துளி யென பிறந்தேன்
பனித்துளியாக மறைகின்றேன்
ஓசாகா கோட்டையும் மேலும் யான் புரிந்த மற்றவைகளும்
ஒரு கனவுக்குள் ஒரு கனவே"

இதை படித்தவுடன், பாரதி சொன்ன பாடல் நினைவுக்கு வந்தது.

"உலகெ லாமொர் பெருங்கன வஃதுள்ளே
..........................................
........................
மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர்
கனவிலுங்கன வாகும்." (சுயசரிதை : முன்னுரை: பாடல் 3)

இதை பற்றி மேல் விவரங்கள் கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகின்றேன்

3. ஜப்பானியர்களின் ஜாதீய முறைகள், அவர்களுக்கு இருக்கும் "கர்மா" (விதி என்ற பொருளில்) நம்பிக்கை அவர்களது சமூகத்தை ஆதிக்க சமூகமாக பார்க்கத் தூண்டுகின்றது. மேலும் அவர்கள் பெண்களுக்கு இட்டிருக்கும் நியதிகள் இக்கூற்றை உறுதி செய்கின்றது.

இவற்றையெல்லாம் மீறி, இப்புத்தகம் படிக்க சுவாரசியமானது என்பது நிஜம்.

கனவுகளைத் தேடி

கதிரவனின் வெண் மஞ்சளில்
எனது கனவுகள் செதுக்கப்படுகின்றது.
எண்ணங்களே வாழ்க்கையாகி
சிந்தனை சிலைவடிக்கும்
கனவுச் சிற்பி ஆகினேன்.
மிதக்கும் கம்பளங்களாகிப் போன
இக்கனவுலகு
இயல்நிலையை தொடும் கணம்,
மனச் சூறாவளியில்
அலை எழுப்ப,
நானும் நீங்களும் எப்போதும்
எதிரெதிர் கரைகளிலேயே!

-பாலாஜி-பாரி

பாரதி இன்று நெஞ்சை நிமிர்த்தி நடப்பான்!! -2

மிக மிக அமைதியான குரலில், தோழமையுடன் பேசும் பத்மா, இன்று நம்மிடையே, தனது ஆராய்ச்சி காலங்களில் உலகத்தின் பெரும் கவனம் பெற்ற மனித மரபணு திட்டத்தை பற்றி பகிர்ந்து கொள்கின்றார். கார்னலில் இரு வருடங்கள் உதவி பேராசிரியாராக பணி புரிந்து, பின்பு அதில் வளர்ச்சிக்கு இருந்த தடைகளாலும், மற்ற காரணங்களாலும், அப்பணியை உதறிவிட்டு மீண்டும் பல்கலைகழகம் சென்று MBA பட்டம் பெற்றார். அதன் பின் மைக்ரோசாஃப்ட் உட்பட புகழ்பெற்ற நிறுவனங்களில் பணிபுரிந்து விட்டு அது தனது எண்ணத்திற்கு நிறைவை தரவில்லை என்று உணர்ந்தார். ஆகையால் அவர் மீண்டும் பல்கலைகழகம் சென்று பொது சுகாதாரத்தில் பட்டம் பெற்றார். தனக்கு முன்பே அனுவபமிருக்கும் மருத்துவ அறிவியற் துறையும், தனது "கட்டென்பதறியோம்" என்ற உளப்பாங்கினால் கற்ற மேலாண்மை கல்வியையும் amalgam செய்து தனது சிறு வயது எண்ணமான ” இது போல கஷ்டப்படும் ஏழைகளுக்கு உதவாவது மருத்துவராக வேண்டும்” என்ற பொறியை இன்று தன்னளவில் பூர்த்தி செய்யும் விதமாக மருத்துவ திட்ட இயக்குநராக இருக்கின்றார். தான் பெற்ற இந்த தகுதிகள் இன்று அவரை ஒரு முழுமை ஆக்கி உள்ளதாக நினைக்கின்றார். மேலே குறிப்பிட்டது உங்களுக்கு அவரை பற்றிய ஒரு பின் புலத்திற்காகவே. "உண்மை சுதந்திரம் வேண்டி நின்றார் வேறேதும் கொள்வாரோ " என்ற வரியின் நினைவு எனக்கு தவிர்க்க முடியவில்லை.


இனி அவருடன்.....

6. ஒரு இந்திய கிராமத்து பெண் அறிவியல் துறையில் பிரகாசிக்க இப்போதைய சூழலில் இயலுமா?

"நிச்சயமாக முடியும். திடமான மனமும், முயற்சியும் இருந்தால். அசைவறு மதி வேண்டும் !! "


7. சிறிது நாட்களுக்கு முன் ஹார்வேட் பல்கலைகழகத்தில் ஒரு பேராசிரியர் தனது எண்ணத்திற்கு அறிவியலை துணைக்கு அழைத்து கடும் கண்டனத்திற்கு ஆளானார். இது குறித்து ரவி ஸ்ரீரிநிவாஸ் ஒரு பதிவு இட்டார். அப்பேராசிரியரின் கூற்றை நீங்களும் உங்கள் பதிவில் சுட்டி இருந்தீர்கள். இத்தகைய சூழலில், ஒரு பெண் அறிவியலாளராக புகழ்பெற்ற கார்னல் பல்கலைகழகத்தில் பணியாற்றிய நீங்கள், அப்போது எவ்வாறு உணர்ந்தீர்கள்? ஒரு பெண் அறிவியலாளரை இந்த சமூகம் எப்படி பார்க்கின்றது?

கார்னெலில் பெண் விஞ்ஞானிகளுக்கு பாலியல் தொந்திரவுகளும் உண்டு, சிறப்பான ஆராய்சி project களும் கிடப்பதில்லை. ஒரே நேரத்தில் இரு மாணவரிடையே ஒரே project தந்து போட்டியை வளர்ப்பது உண்டு. பெண்கள் சரியாக வேலை செய்ய மாட்டார்கள் என்ற கருத்தும் உண்டு. ஆனால், என் துறை தலைவர் என்னை வேறு படுத்தியதில்லை. ஆனால் எனக்கு திருமணம் என்று சொல்லி விடுப்பு அனுமதி கேட்க எண்ணியபோது, நான் திருமணம் செய்து கொண்டு ஆய்வகத்தை விட்டு விடமாட்டேன் தானே என்று எனக்கு முன்னதாக பேசியதை கேட்டவுடன், இப்போதைக்கு திருமணமாவதை சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்து ஊருக்கு சென்றேன். திருமணம் ஆனதும் 6 மாதம் வரை யாருக்கும் எனக்கு திருமணமானதே தெரியாது. அர்விந்தும் அப்போது கலிபோர்னியாவில் இருந்ததால் பிரச்சினை இல்லை. circadian variation of HLA gene பிரச்சினையில் வேலை பார்த்த போது, இரவு பகல் பாராது ஆய்வகத்தில் இருக்கும் போது, சக ஆராய்சியாளர்கள் இரவில் நான் என்னுடைய அறைக்கு வரும் போது, எனக்கு துணையாக வருவதும் உண்டு. கார்னெலின் தற்போதைய dean தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை என்னிடம் சொல்லியிருக்கிறார். அவரே பெண் ஆராய்ச்சி மாணவிகளுக்காக ஒரு கழகமும் ஏற்படுத்தியிருந்தார்.

ஆராய்ச்சி செய்கிற பெண்கள் நல்ல மனைவியாக இருக்க முடியாது என்ற நம்பிக்கை இருக்கிறது என்று எண்ணுகிறேன். எனக்கு திருமணம் செய்ய எண்ணி என் பெற்றோர்கள் சிலரிடம் பேசிய போது, படித்த சில ஆண்களே, இரவில் வெகு நேரம் கழித்து வரும் பெண்ணின் நடத்தையில் எப்படி நம்பிக்கை கொள்ள முடியும் என்று கேட்டிருக்கிறார்கள். என் சகோதரிக்கு திருமணம் ஆவதும் தடங்கி கொண்டே இருந்தது. வெளிப்படையாகவே சிலர் என் சகோதரியிடம் உனக்கோ திருமணம் ஆக போவதில்லை நீ ஏன் 50 வயதுள்ளவரை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள கூடாது என்றும் சொன்னதுண்டு. ஆராய்சி செய்யும் பெண்களின் குழந்தைகளைக்கூட ஒரு பூத கண்ணாடி கொண்டு குறைகளை தேடி, அதிகம் படித்த பெண் குடும்பத்தை கவனிப்பதில்லை என்றும் குறை கூறுகிறார்கள். கணவனின் ஒத்துழிப்பு இல்லாமல் திண்டாடும் பெண்களில் எனக்கு தெரிந்தே 3 பேர் தற்கொலையும் செய்துகொண்டுள்ளார்கள். கலந்துரையாடும் கூட்டங்களுக்கு சில முறை செல்ல முடிவதில்லை, மேலும் grant கிடைத்துவிட்டாலோ இவள் யாருடனுன் படுக்கையை பகிர்ந்து கொண்டிருப்பாள் என்றும் நாகூசாமல் பேசுவாரும் உண்டு.

can you adjust என்று கேட்பவரும், இதனால் என்ன தவறு? என்று சொல்பவரும் அதிகம். பொதுவாகவே வேலை பார்க்கும் பெண்களுக்கு பிரச்சினைகள் உண்டு என்றாலும், இரவு பகல் பாராமல் வேலை பார்ப்பவர்களுக்கு இவை அதிகம். ஒரு கார்த்திகை அன்று நான் புதிதாக க்ளோன் செய்த ஜீனை சரிபார்க்க வேலை செய்ய வேண்டி விடியற்காலமே கிளம்பி போய்விட, வீட்டில் இருந்த என் கணவரின் பெற்றோரிடம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், அமெரிக்காவில் மத சம்பந்தமாக விடுப்பு எடுக்க முடியும் என்றும், நான் வேண்டுமென்றே வேலைக்கு சென்றுவிட்டதாகவும் கூறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதும் ஒரு கதை. பெரும்பாலோருக்கு ஆராய்ச்சியின் காலமும், அதன் முடிவுகளும் நம் கையில் இல்லை என்பது புரிவதில்லை. இது கணினியில் வேலை பார்பது போல சட்டென்று சேமித்துவிட்டு வீட்டிற்கு கிளம்ப முடியாது. அதுவும் ஒரு ஜீன் க்ளோன் செய்தால், அதை வளர்த்து அதன் தன்மையை அறிந்து, அதை சரிபார்த்து என பலவும் தொடர் நிகழ்வுகளாகும்.


8. ஹ்யூமன் ஜீனோம் ப்ரோஜக்ட் பற்றி சற்று விவரமாக கூற இயலுமா? குறிப்பாக இந்த திட்டத்தின் நோக்கம், அதன் நன்மைகள், தீமைகள் மற்றும் கடைசியாக அதனால் தோன்றிய உலக அரசியல் நிலைப்பாடுகள் பற்றி கூற இயலுமா?


பதின்மூன்று வருடங்களாக நடந்து 2003இல் நிறைவு பெற்ற மனித ஜீனோம் முயற்சி, தற்போது தீவிரவாதத்தை தடுக்க பண் உதவி பெறுவது போல நிறைய பொருட்செலவு செய்து நடத்தப் பட்ட ஒரு ஆராய்ச்சி. இதில் நானும் பங்கு கொண்டிருக்கிறேன். இந்த முயற்சிக்கு காரணம்

1.25000 ஜீன்களை க்ளோன் செய்து அதன் மில்லியன் DNA வடிவை காண்பதும், அதன் மூலம் ஒருவரின் மூலக கூற்றை(genetic make up) அறிவதும் அதன் மூலம் பிறப்பின் மூலம் வரும் நோய்களை தடுக்க முடியுமா என்பன போன்ற ஆய்வுகளை செய்ய திட்டம்

2. இதன் மூலம் கிடைக்கும் செய்தியை தனியார் நிறுவனத்திடம் தந்துவிடல் போன்றவை காரணம்.
இதனால் அடிப்படையிலேயே நோய்களை கண்டறிய முடியும், தடுக்க முடியும் ஒருவருக்கு நோய் வர சாத்தியக்கூறு உண்டா என்பது போல பல நன்மைகள் உண்டு.

இந்த போட்டியில் நான் முந்தி நீ முந்தி என்று வேலை செய்ய அதன் பளுவும் அதனுடன் சேர்ந்த சில தில்லுமுல்லுகளும், அதன் பின் தொடர் ஆராய்ச்சிக்கு பண உதவி தருவதில் பாரபட்சமும் இருந்தது ஒரு பக்கம் என்றால் சில நேரடி அபாயங்களும் உள்ளன என்பது தெரிய வந்தது.

அவை கீழே:

அ. ஒருவருக்கு நோய் வரக்கூடிய சாத்தியக்கூறு இருப்பது தெரிய வந்தால் அவரின் காப்பீடு உரிமை, உடல் நல காப்பீட்டி மாத கட்டணம் உயரும் சாத்தியம், இராணுவம் பள்ளி, விளையாட்டு துறை இவற்றில் பலவித உரிமை பிரச்சினைகள் வரக்கூடும்

ஆ. ஆசியா, சீனா போன்ற இடங்களிலிருந்து வருபவருக்கு இன வாத உரிமை மீறல்கள், ஆப்பிரிக்க இனத்தவருக்கான உரிமை பாதிப்புக்கள் வரலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட சில இனத்தை சேர்ந்தவர்களை அவர்களின் மூலக் கூற்றின் அடிப்படையில் கொடுமை படுத்தவும் வாய்ப்பு உண்டு. இன்னார் இந்த துறையில் தான் பிரகாசிக முடியும் என்பது வரை பாகுபாடு வரக்கூடும்.

இ. திருமணத்தின் போது மூலக்கூறு அடிப்படை மூலம் பிரச்சினைகள் வரக்கூடும்
பெர்றோர்களின் மூலக் கூறு செய்தி பிள்ளைகளின் மனநலத்தை பாதிப்பது முதல், கருவில் உள்ள குழந்தையை பரிசோதிப்பதன் அபாயத்தை சரியாக மருத்துவர் எடுத்து சொல்வார்களா, பெண்களுக்கு இதி முடிவெடுக்க உரிமை உண்டா என்பது போல மனநிலை பிரச்சினைகளும் வரும்.

ஈ. அப்படியே நோய்களை தீர்க்க முடிந்தாலும் எத்தனை மக்களுக்கு இது பொருளாதார வகையில் முடியும் என்பதும் கேள்விக்குறி

உ. இதை உரிமை கொண்டாடுபவர் யார்? (ownership of DNA database), காப்புரிமை பிரச்சினைகள்...
இதுபோன்ற முயற்சிகள், வளரும் நாடுகள் வளர்ந்த நாடுகளை சார்ந்திருக்கும் நிலையை அதிகமாக்கிவிடுமா

ஊ. மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் இதை தவறாக தங்கள் சொந்த இலாபம் கருதி உப்யோகிக்க சாத்தியக்கூறுகள் அதிகம் .

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

(இதில் இவர் சொன்னதின் நேர்மறையான செய்திகள் வெளிப்படை. ஆனாலும் அது எவ்வாறு திரிக்கப் படும் என்ற அபாயத்தையும் முன் வைக்கின்றார் - பாரி)

9.நீங்கள் கூறிய படி, இப்போது திருப்தி தரும் வகையிலான பணியை செய்து வருகின்றீர்கள். மக்களோடு இணைந்து மக்களுக்காக திட்டங்கள் இடும் இப்பணியில் உங்களின் மருத்துவ அறிவியல் அனுபவமும் உங்களுக்கு நன்கு கைகொடுக்கும். இதை குறித்து நீங்கள் பதிவில் குறிப்பிடாத சில அனுபவங்களை பகிர்ந்து கொள்ள இயலுமா?

வட கரோலினா மாநிலத்திலிருந்து ஒரு ஆராய்ச்சி மாணவி எங்கள் துறைக்கு வந்திருந்தார். இவருக்கு இந்திய பெண்கள் சிலருடன் அவர்களின் உடல் நலம் பற்றி பேச வேண்டும் என்றும் ஒருவருக்கு 30$ சன்மானமும் தருவதாக சொல்லியிருந்தார். நானும் எங்களிடம் சிகிச்சைக்காக வந்த சில பெண்களை தொடர்பு கொண்டு அவர்கள் வீட்டிற்கு சென்றோம். எல்லா பெண்களும் தங்கள் பிள்ளைகளின் வீட்டில் தங்கியிருப்பவர்கள். 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள். சிலர் மார்பக புற்று நோயிலிருந்து குணமானவர்கள். ஆனலும் நான் இவர்களை சந்தித்தது அவர்கள் வேலை செய்யும் வீட்டில். வயதான இந்த பெண்கள் மணிக்கு 2.50$ க்கு குழந்தைகளை பார்த்து கொள்வதிலிருந்து சமைப்பது வரை பல வேலைகளை செய்கிறார்கள். எத்தனை கொடுமை! ஆணுக்கு கிடைக்கும் வேலை ஓய்வு போல இந்த பெண்களுக்கு ஏன் இல்லை? அதிலும் ஒரு (எசமானப்) பெண்ணும் அவர் கணவனும் இந்த பேட்டிக்கு எத்தனை நேரமாகும் என வினவ நான் ஒரு மணி ஆகும் என்று கூற, அவர்கள் அந்த பெண்ணிடம் மாலை பணம் தரும்போது அந்த ஒரு மனிக்கான $2.50 குறைத்து கொண்டு தருவதாக கூறியதை என்ன என்று சொல்வது?

இன்னொரு பெண் வீட்டில் காலையில் சமைத்து பேரக்குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, நிறைய திருமணமாகாத ஆண்களுக்கு சப்பாத்தி இட்டு தரும் பணியை செய்கிறார். 10 சப்பாத்திக்கு இவருக்கு கிடைக்கும் ஊதியம்1:50$. இதன் பின் மாலையில் தன்னுடைய பேரக்குழந்தைகளோடு இன்னும் சில குழந்தைகளையும் பார்த்துக் கொள்கிறார். ஆனால் இந்த ஊதியத்தை இவர் கையில் கொடுப்பது கூட இல்லை. இலவச மருந்துகளும் சிகிச்சைகளும் பெற்று வாழும் இவர்களை தன்னை சார்ந்திருப்பதாக சொல்லி வரி சலுகை பெற இந்த பிள்ளைகள் தயங்குவதில்லை. பரிசு காசோலையாக சன்மானம் வந்தால் அதை மாற்றி தன்னிடம் தரமாட்டர்கள் என்று சொல்லி அதை பணமாக தருமாறு சொல்லி என்னிடம் கேட்ட வயதான கணவனையும் தன் மனைவிக்கு தேவையான ஓய்வை தர கூட வேலை செய்யும் கணவனையும் பார்த்த போது முதுமை இவ்வளவு கொடுமையானதா என்று தோன்றியது.

மத்திய அரசு நடத்திய ஒரு கலந்துரைடாலில் முதலில் எனக்கு எதுவும் தெரியாது என்று அதிகம் பேசாத சிலர், கூட்டம் ஆரம்பித்தபின் என்னுடைய திட்டங்களை பாராட்டியதும், அதன் தொடர்பாக மகளிர், தாய் சேய் நல திடக்குழு, குழந்தைகள் நல குழு ஆகியவற்றில் நியுஜெர்ஸியில் என்னை சேர்த்துகொண்டது எனக்கு கிடைத்த மகிழ்ச்சியான அங்கீகாரம் (Nj State minimum standard commitee). திறமைக்கான இந்த மரியாதை இந்தியாவில் எனக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. (இது திறமை மற்றும் மனிதத்திற்கான அங்கீகாரம். வாழ்த்துக்கள் :) -பாரி)

10. இத்தகைய திட்டங்கள் இந்தியாவில் நடைபெற இயலுமா?. அவ்வாறு செய்ய இந்தியாவில் அரசு சாரா நிறுவனங்கள் பல முயன்று வருகின்றன. அவர்களுக்கு உங்களால் உதவ இயலுமா? அதாவது திட்டங்கள் வகுப்பது என்ற நிலையில் மட்டும்.

அரசியல் கலப்பில்லாவிடில் முடியும். திட்டங்கள் வகுக்க உதவி செய்யவும் முடியும் அது சரியாக பயன்படுத்தப்படும் வரை.

பாரதி இன்று நெஞ்சை நிமிர்த்தி நடப்பான்!!

அன்பு நண்பர்களே! பாரதி உயிருடன் இருந்தால், இன்று நெஞ்சை நிமிர்த்தி நடப்பான். " பாரடா, நான் கொண்ட கனவை மெய்பித்தவளை. சக்தி கனலடா இவள்!" என்று கர்ஜித்திருப்பான் பெருமை பொங்க. என்னுள் ஒரு பெரும் சக்தியாக தோற்றம் எடுத்தது இவர் கூறிய பதில்கள். நமக்கு பாரதியின் கூற்றான மனதில் உறுதி வேண்டும் என்ற சொற்றொடருக்கு உண்மை பொருள் விளக்கினார் தனது மிக எளிய பதிவின் மூலம். இப்பொழுது "அசைவறு மதி வேண்டும்" என்பதற்கு புது பொலிவு சேர்க்கின்றார். பல நேரங்களில் நாம் take it for granted-ஆக எடுத்துக் கொள்ளும் வரிகளில், வாழ்க்கையின் பொருளை நிறுத்தி, நமக்கு களைப்பை தீர்க்க வருகின்றார், திருமதி. பத்மா அர்விந்த்.
இவர் தற்போது பொது நல ஆரோக்கிய திட்ட அமைப்பாளராக பணி புரிந்து வருகின்றார். இது இந்தியாவில் சிவில் சர்வீஸ் பணிக்கு நிகரானது. இவர் தனது உழைப்பையும், பாஸிட்டிவ்வான (நேர்மறையான) உளப்பாங்கையும் ஆற்றலின் தோற்றமாகக் கொண்டு, ஒரு விதையாக தோன்றி விருட்சமாக வளர்ந்தவர் . இவரது பதிவை பார்க்கும் எவரும் "அட" என்று எண்ணும் வகையில் ஒரு வரியை எழுதி வைத்துள்ளார். அது: ``I enjoy planning activities and design strategic plans for poor people``.

இனி இவருடன் ...

1. நீங்க பிறந்து வளர்ந்த சூழ்நிலை, உங்கள் பால்ய கால படிப்பார்வம் மற்றும் உங்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் பற்றி கூறுங்களேன்.

ஒரு கீழ் நிலை நடுத்தர குடும்பத்தில், 5 சகோதர, சகோதரிகளுடன் பிறந்தேன். கோப்பையில் குடித்தால் சீக்கிரமே ஆகிவிடும் என்று கஞ்சியை தட்டில் ஊற்றி மெதுவாய் பருகி பசிதீர்த்துக்கொள்வோம். கிடைப்பது ஒரு மிட்டாய் என்றாலும் 8ஆல் வகுந்து உண்போம். பொருளுக்கு பஞ்சம் என்றாலும் அன்புக்கு பஞ்சமில்லை. எல்லோருமே நன்றாக படித்ததால், பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு செல்லப் பிள்ளை. வீட்டில் சர்க்காவும் ராட்டினமும் கொண்டு அம்மா நூல் நூற்று சட்டைகள் செய்வதுண்டு.

அப்போதெல்லாம் திருக்குறள், திருப்பாவை திருவெண்பாவை ஒப்பித்தல் போட்டிகள் வரும். நாங்கள் அனைவரும் பங்கு கொண்டு அந்த அந்த வகுப்புக்கு வரிசையில் பரிசு பெறுவது உண்டு. போக போக மற்றவர்கள் ஆர்வம் குறைந்துவிட, நான் மட்டும் தொடர்ந்து பங்கு பெறுவேன். திடீரென ஒரு தலைப்பு கொடுத்தாலும் பேசுவதில் எனக்கு தகுதி உண்டு என்பதால் என் பள்ளியின் சார்பாக பல ஊர்களுக்கும் சென்று பேச்சு போட்டிகள், பட்டி மன்றங்கள் இவற்றில் கலந்து கொள்வதும் உண்டு. கந்தர் கலிவெண்பா போன்றவை படித்து எழுத்து தேர்விலும் முதல் பரிசு பெற்றால் தொடர்ந்து ஒரு ஊதிய தொகை வரும். இது என் பெற்றோருக்கு உதவும் என்பதும் நான் தமிழ் படிக்க ஒரு காரணம். ஆனாலும் சில காலத்திற்கு பிறகு கட்டாயமாக ஆங்கில புத்தகங்களே படிக்க வீட்டில் ஊக்குவித்தனர்.
விளையாட நேரம் ஒதுக்குவதைக் காட்டிலும் படிப்பதும், யார் எழுதிய புத்தகமானாலும் தேடி படிப்பதும் பொழுது போக்காக இருந்தது. மற்ற குழந்தைகளுக்கும் விட்டு பாடங்களில் உதவுவதும், tutuion நடத்துவதும் மேலும் படிக்க ஆர்வம் வர காரணம்.

2. அறிவியல் துறையில் உங்களுக்கு ஈடுபாடு வருவதற்கு எத்தகைய சூழ்நிலை காரணமாக இருந்தது?

வறுமை. இலக்கியம் படிக்க ஆர்வம் இருந்தும் படித்தால் வேலை கிடைப்பது சிரமம், அறிவியல் படித்தால் உடனே எங்கு வேண்டுமானாலும் வேலை கிடைக்கும் என்று என் சகோதரர்கள் சொன்னதும், என் அக்கா தான் செய்யும் ஆராய்ச்சி பற்றி பேசுவதும், என் அண்ணன் ஐ.ஐ.டியில் தன் அனுபவங்கள் பற்றி சொல்வதும் இதற்கும் மேலாக அவர்கள் விடுமுறைக்கு ஊருக்கு வரும் போது அவர்களுக்கு கிடைக்கும் நல்ல கவனிப்பும் காரணம். ஒருமுறை என் அம்மா கடுமையாக நோய்வாய்பட, காசில்லாமல் கவனிக்க யாருமின்றி, உறவினரும் கைவிட்ட நிலையில், ஒரு மருத்துவர் எங்கள் வேண்டுகோள் கேட்டு வீட்டிற்கு இரவில் வந்து கவனித்தபோது நான் சொல்லிக் கொள்வேன் " இது போல கஷ்டப்படும் ஏழைகளுக்கு உதவாவது மருத்துவராக வேண்டும்" என்று.

3. உங்கள் மேற்படிப்பு குறித்து சில விவரங்களை பகிர்ந்து கொள்ள இயலுமா?

என் அண்னனும் அக்காவும் மேற் படிப்பு படித்து கொண்டிருந்ததால் மற்ற நால்வரும் இளநிலை படித்து வேலை தேடிக்கொள்ளவேண்டும் என்பதில் என் தந்தை உறுதியாக இருந்தார். ஆசிரியை வேலை பார்த்தாலே போதும் என்பதும் எப்படியாவது என் அக்காவிற்கு திருமணம் முடிக்க பொருள்சேர்க்க வேண்டும் என்றும் திடமாக இருந்தார். ஆனால் ஒவ்வொருவரும் 'நுழைவுதேர்வு தானே! இடம் கிடைக்கும் என்று என்ன நம்பிக்கை?" "முயற்சி செய்து பார்க்கிறேனே!" என்று சொல்லி அனுமதி வாங்குவோம். இதன் படி ஜிப்மரில் மருத்துவ துறையில் உயிர்வேதியில் படிக்க சேர்ந்தேன். நுழைவுத்தேர்வில் 10000 (கிட்டதட்ட) பேரில் தேர்வு செயப்பட்ட 500 பேரில் ஒருத்தியாக நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டேன். வந்திருந்த 500 பேர்களில் ஐவருக்குத்தான் இடம் என்பதால் எனக்கு கிடைக்காது என்று தந்தை நம்பியிருக்க, வந்த அனைவரும் கான்வென்ட் ஆங்கிலத்தில் பேச, நான் தமிழை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உரையாட, நம்பிக்கை அற்று ஊருக்கு திரும்பிவிட்டோம். ஆச்சரியமாக முதலிடம் பெற்று தேர்ந்தேன். உதவிதொகையும் பிர்லாவிடமிருந்தும் உதவிதொகையும் கிடக்க அது ஆசிரியை வேலையைவிட அதிக ஊதியம் என்பதால் படிக்க அனுமதி கிடைத்தது. அப்போது முதன் முதலில் இறந்த ஒரு மனிதனின் உடலை அறுத்து படிக்கும் போது சக மாணவர்களும், ஆசிரியர்களும் கேவலமாக பெண் உறுப்புகளை பேசுவதும், அறுவை சிகிச்சை போது தவறாக பேசுவதையும் கண்கூடாக பார்த்து மனித மனத்தின் வக்கிரங்களை அறிந்து கொண்டேன்.

அதன் பின் AIIMS ல் காசநோய்க்கான எதிர்ப்பு சக்தியில் ஆராய்சி செய்ய அனுமதி கிடத்தது. என் சகோதரன் புது தில்லியில் வேலை பார்த்தால், அவனுக்கும் உதவியாக இருக்கும் stipendஉம் சம்பளத்தைவிட அதிகம் (அர்விந்த் கண் மருத்துவ மனியில் விரிவுரையாளர் வேலை) என்றும் தில்லி சென்றேன்.

வேலைக்கான ஊதியத்தைவிட, உதவிதொகை அதிகம் என்றே நாங்கள் அனைவரும் மேற்படிப்பு படிக்க அனுமதி பெற்றோம்.

என் மூத்த சகோதரிக்கே திருமணமாகாத நிலையில் நானும் வீட்டில் இருந்தால் என்ன செய்வது என்பதும், இவை அனைத்திற்கும் மேலாக எங்களுக்கு உறுதுணையாக என் அம்மா இருந்ததும் (அப்பாவிற்கு தெரியாமல் விண்ணப்ப படிவங்களை அனுப்ப,... அப்பா படிப்பதற்கு எதிரி இல்லை என்றாலும் நண்பர்களின் விமரிசனத்தையும் தன்னுடைய உறவினர்கள் எங்கள் குடும்பத்தை ஒதுக்கிவைத்ததையும் அவரால் தாங்க முடியவில்லை) மனம் தளரும் போதெல்லாம் மருந்தாக இருந்தது.


4. நீங்கள் எப்போது சமூகத்தை ஒரு விமர்சனக் கண்ணோடு பார்க்க துவங்கினீர்கள்? அதை குறித்த ஏதேனும் சம்பவங்கள் சொல்ல இயலுமா?

எனக்கு 4 வயதாக ஒருக்கும் போது எதிர்வீட்டு aunty கையில் குழந்தையுடன் மழையில் வெளியேற்றப் பட்ட போது எதனால் என்று அம்மாவிடம் கேட்க, பெண்குழந்தை பிறந்ததால் என்று சொன்னார். புரியாவிட்டாலும் நானும் பெண் தானே அவர்வீட்டு பாப்பாவிற்கு என்ன குறை என கேட்டது நினைவிருக்கிறது.எங்கள் வீட்டில் இரவை கழித்த அந்த பெண் மறு நாள் பாலிடால் குடித்து இறந்தது என்னை பாதித்தது.

என் 2வது வகுப்பு ஆசிரியை கோமளா அனுராதா திருமணம் தடை பட்டு கொண்டே போக, வருத்தப் பட்டு இறந்ததும் அர்த்தம் புரியாத வயதில் ஆழ்மனதில் காயமாகிப் போனது. பள்ளி விடுமுறை என அனைவரும் சந்தோஷிக்க எனக்கு மட்டும் வெறுப்பாகிப் போனது.
5வது படிக்கும் போது என் தோழி மேகலாவிற்கு திடீரென திருமண்ம் ஆக, நண்பர்கள் கேலி செய்ய, பூச்சி மருந்தை குடித்து இறந்து போனாள். அவளை மாலையுடன் பார்த்ததும் மனதில் படிந்திருக்கிறது.
சேரிகளில் வசிக்கும் சிலரை தண்ணீர்கூட தராமல் கேவலமாக பேசுவதும், வயதில் எத்தனை பெரியவராக இருந்தாலும் பெயர் சொல்லி அழைப்பதும் எனக்கு பிடித்ததில்லை. இவர்களுக்கு என் அம்மா வீட்டில் எழுத படிக்க சொல்லி தருவார். ஒரு பெண் சிங்கப்பூரில் வேலை பார்த்த தன் கணவரிடமிருந்து வரும் கடிதங்களை அடுத்தவரை விட்டு படிக்க சொல்வதும், அவர்கள் அந்த பெண்ணின் கணவர் அனுப்பும் பணத்தில் ஏமாற்றுவதை பார்த்த என் அம்மா வீட்டிலேயே இலவசமாக படிப்பு சொல்லி தருவார். அந்த பெண்களின் சந்தோஷம் சொல்லி மாளாது. இது எனக்கு பிடித்திருந்தது. ( :) பாரி)

நானும் சிறு சேமிப்பு, குடும்ப கட்டு பாடு என்றெல்லாம் வீடு வீடாய் சென்று பேச ஆரம்பித்த போது எனக்கு 7 வயது. சிறுமியாக இருந்து கொண்டு குடும்ப கட்டு பாடு பற்றி பேசும் போது கேலி செய்தவர் உண்டு. ஆனாலும் என்னை அலட்சியப்படுத்தியவர் இல்லை.
ஏழைகளை அவமதிப்பவர் இந்தியாவில் அதிகம். இன்னமும் ஒரு பொறியியல் வல்லுனருக்கு கிடைக்கும் மரியாதை ஒரு செருப்பு தைப்பவருக்கு இல்லை. இத்தனைக்கும் யாரும் யாரையும் சார்ந்திருக்காமல் இல்லாவிட்டாலும் அவமரியாதை அதிகம். நானும் என் அண்ணனும் என் தந்தையின் நண்பரின் வீட்டிற்கு அவரே அழைத்ததால் போன போது அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்த ஒரு சிறுவன் "நாங்களே இன்னும் சாப்பிடைல்லை அதுக்குல்ளேயே வந்தாச்சா, போ! போ!!" என்று விரட்டியதும், பாத்திரங்களை அடகு வைக்க போகுமிடத்தில் கேவலமாக பார்ப்பதும் பேசுவதும் என்று தேவையில்லாமல் காரணமில்லாமல் மனதை காயப்படுத்துவது அதிகம். இந்தியாவில் இந்த மனப்பான்மை அதிகம். தன்னிடம் வேலை பார்க்காதவராக இருந்தாலும், தனக்கே சம்பந்தம் இல்லதவராக இருப்பினும் ஏழை என்றால் ஏதோ அடிமைகள் போல் நடத்துவதும், அவர்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதை புரிந்து கொள்ள மறுப்பதும் ஏனென்று தெரியவில்லை.

5. இந்தியாவில் அறிவியல் துறையும், அதில் பெண்களின் பங்கும், அவர்களது நிலை குறித்தும் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியுமா?

பெண் விஞ்ஞானிகளுக்கு அதிக நேரம் ஆய்வகத்தில் வேலைசெய்துகொண்டு வீட்டையும் கவனிக்க முடியாது என்ற பரவலான கருத்து உள்ளது. மேலும் ICMR, DST போன்ற இடங்களில் பொருளாதார உதவி தொகை (grant) கிடப்பது கடினம். இதில் நிறைய அரசியல் கலந்திருக்கிறது. என்னுடைய முதல் grant கிடைக்க நான் மிகவும் சிரமப்பட்டேன். சக ஆராய்சியாளர்களும் இரவில் வேலை செய்யும் போது, எனக்கு உன் மீது காம உணர்ச்சி வந்துவிட்டது என்று சொல்லி தொல்லை கொடுப்பதும், ஆரய்சிக்கு கிடைக்க வேண்டிய அனுமதி கிடைப்பதற்காக தடங்கல்கள் செய்வதும் உண்டு. இதையும் மீறி நிறைய பெண் விஞ்ஞானிகள் வந்திருக்கிறார்கள். சில குறைவான பெண் விஞ்ஞானிகள் ஆண்களின் சபலத்தை பயன் படுத்தி அவர்களை வேலை செய்ய சொல்வதும் உண்டு!!

அறிவியல் துறை (மருத்துவ) இந்தியாவில் முன்னேற வேண்டுமானால் அதற்கு உரிய அங்கீகாரம் வேண்டும். ஒரு வேதி பொருள், அல்லது ரேடியோ கதிவீசு kit வரும் போது அதன் தன்மையை புரிந்து கொண்டு சுங்க அதிகரிகள் அதனை உடனே தந்து விட வேண்டும். அதற்கும் லஞ்சம் எதிர்பார்த்து தேக்கி வைத்தால் அதன் வீரியம் கெட்டு விடும். இதற்கும் மேலாக, மனித திசுக்கள், இரத்தம் ஆகியவற்றில் ஆராய்சி செய்ய தேவையான உரிமைகள் பெறவும், மனிதர்களின் confidentiality பாதுகாக்கவும் அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
சமீபத்தில் பாஸ்டனில் இந்தியாவிலிருந்து வந்திருந்த சில விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடும் போது இன்னமும் நிலை மாறவில்லை என்பது தெரிந்தது.
அரசு அங்கீகாரத்தோடு national biotechnology board அமெரிக்காவிற்கு பயிற்சி பெற அனுப்ப தேர்ந்தெடுக்கும் விஞ்ஞானிகளில் அரசியல் கலப்பு உண்டு. புது தில்லியில் ஆராய்ச்சி கழகத்திலிருந்து வருபவருக்கு உடனே அனுமதி கிடப்பதும், தென்னக கல்லூரிகளிலிருந்து வருபவருக்கு அனுமதி கிடைக்காததும் சகஜம். cloningஇல் தேர்சி பெற 6 மாத சம்பளத்தோடு, பயண செலவுகளும் தந்து NIH வந்த ஒருவர் ஊர் திரும்பியபோது இதெல்லாம் எனக்கு புரியாது. நான் நன்றாக ஊர் சுற்றி பார்த்தேன் என்று சொன்னதை கேட்டிருக்கிறேன். AIIMSல் இருந்த பெருவாரியான ஆராய்சி மாணவர்கள் கூட்டங்களில் கலந்து கொள்ள வெளிநாடுகளுக்கு செல்ல உதவி தொகையும் அனுமதியும் விரைவாக பெறுவதும், அதே நேரம் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கல்லூரியில் உள்ள மாணவிக்கு அனுமதி கிடைக்காமல் இருப்பதும் நானே கேட்ட சில புகார்கள். இந்த நிலை மாறி, தகுதி அடிப்படையில் எல்லருக்கும் பயிற்சி தர வேண்டும் , அறிவியலில் அரசியல் கலப்பு கூடாது.


இதன் இரண்டாம் பாகம் நாளை......

காலங்கள் மாறும்...கோலங்கள் மாறும்...

அடுத்த வரியை நீங்க ஞாபகப்படுத்திட்டு, ஏதோ கனமா எழுதப் போறான்னு நினைச்சா, சாரி, மக்கா, சாரி.

பெங்களூர்ல இருந்தப்போ, இந்த மாதிரியான மாற்றங்கள் மிக அழகா, மனசை தொடர மாதிரி இருக்கும். இந்த ஊர்லயும் அப்படி இருக்கும்னு சொல்றாங்க.

இப்போ என் கவனத்தில் இருக்கின்ற சில விசயங்கள சொல்றேன்.




வீதிகளின் இருபுறமும் இருக்கும் குட்டி பனி சுவர்கள் கரைய தொடங்கி விட்டன. அம்மலைகளின் அடியில் இருக்கும் பழுப்பு நிற புற்கள் "அப்பாடா!" என்று ஒரு சுமையை இறக்கி வைத்து வெளியே தலை காட்டுகின்றன.

காற்று தன் கனத்தை குறைத்து கொண்டுள்ளது இதமாக.

பறவைகள் சில வந்து உற்சாகம் கொடுக்கின்றன. காலை பொழுதில், "ப்ளிங்" என்று சத்தமிட்டபடி
சீ கல்-கள் பறக்கும் அவைகள் ஒரு அற்புதம். தங்களது உடலின் மேல் ஒரு கருமையான சாம்பல் நிறத்தையும், அவற்றின் அடியில் தூய்மையான வெள்ளை நிறத்துடனும் பறப்பதை பார்ப்பது சுகம். Feynman-னின் தந்தை பறவைகளின் சிறகை பற்றி அவருக்கு சொல்லும் போது அதில் இருக்கும் ஒரு மெல்லிய மெழுகு போன்ற ஒரு பூச்சை பற்றி குறிப்பிடுவார். இவைகளின் தூய்மை அக்கூற்றை நினைவு படுத்துகின்றன.

எங்கு போனாலும் இருக்கும் காக்கைகள். அவைகள் மனிதர்களை சுற்றி வாழும் என்பது இங்கு சிறிது மகிழ்ச்சியை தருகின்றது. புறாக்களும் அவ்வாறே.

இவற்றை தவிர எனது வீட்டில் சாளரத்திற்கு அருகில் வசிக்கும் சில குருவி போன்ற பறவைகள் அவ்வப்போது ஹலோ சொல்லும்!!

இன்று காலையில் சில பறவைகள் கீச் கீச் சென்று சப்தம் எழுப்பி, தங்கள் வருகையை தெரிவித்தன. அவைகளை காண முடியவில்லை.

மழை பெய்கின்றது. வானொலியில் ஏப்ரல் மழை என்று கூறுகின்றனர். இந்த மழைதான் பனி சுவர்களை கரைக்கின்றதோ என உணர்வு வருகின்றது.

இப்போதெல்லாம் டெம்ப்ரேச்சர் பாஸிட்டிவில் உள்ளது. 2 லிருந்து 7 வரை.

வசந்தம் வருகின்றது.

நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்: 6 தபால்காரர்(கள்)

எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து இன்னிக்கு வரை மக்களின் வாழ்வோடு பின்னி பிணைஞ்சவருனு நான் பார்க்கிற ஒரு நபர் இந்த தபால்காரர். நாங்க வாண்டுகளா இருக்கும் போது எங்க காம்பௌண்ட்க்கு ரெகுலரா வருவதால் கவனத்தை ஈர்த்த நபர் இவரு. பதினோரு வீட்ல ஏதாவது ஒரு வீட்டிற்காவது தபால் இருக்கும். ஐயங்கார் மாமி, எங்க அம்மா-ட்ட,``ஏண்டி ஜெயம், தபால்காரன் வந்துட்டானா?``ன்னு கேட்பார். அப்படி கேட்டால், NGM காலேஜ்ல மேலாளரா வேலை செய்யும் அவரோட கணவருக்கு மதிய சாப்பாடு எடுத்து செல்ல, அந்தோணி என்பவர் சீக்கிரம் வந்துருவார்னு அர்த்தம். இப்படி தபால்காரர் வருவது அவருக்கு நேரத்தை உணர்த்தும் விசயமா இருந்துச்சு.

இந்த தபால்காரர்கள் சைக்கிள் அல்லது கால் நடையா நடந்து, ஒரு கற்றை காகிதங்களை கையில் வைத்துக் கொண்டு, மீதியை அவர்களின் உடலுறுப்பாகவே ஆன தோள் பையில் வைத்துக் கொண்டும் வருவது, பலருக்கு ஒரு வகை எதிர்ப்பார்ப்பையும், நிம்மதியையும் தருவதாக இருக்கும். எங்க ஏரியா தபால்காரர் பொதுவா, பாலா கோபால(BG) புரம் தெரு ஆரம்பித்து, பல்லடம் ரோட்டை ஒட்டிய சில இடங்களை சுற்றி விட்டு பின்பு எங்க தெருவுக்கு வருவார். எனது பெரியப்பாவிற்கு எப்போதும் ஒருவித பரபரப்பு உண்டு தகவலை முன் கூட்டி அறிவதில். ஆகையால் விடுமுறை நாட்களில் (postal holidays அற்ற மற்ற நாட்களில், குறிப்பா சனிக்கிழமைகளில்) என்னையும் சில வாண்டுகளையும் முன்னரே BGபுரத்திற்கு அனுப்பி தபால்காரரிடம் தபாலை பெற்று வரச் சொல்லுவார். அப்போது நாங்க வண்டிய எடுத்துகிட்டு (பஸ் தான்...) சும்மா டிர்ர்ர்ர்ன்னு கிளம்பினா, கிருஷ்ண மூர்த்தி டாக்டர் கிளினிக் பக்கத்துல அவர பிடிச்சுடுவோம். அவருக்கு மூடு நல்லா இருந்தா உடனே பார்த்து தருவாரு. இல்லாட்டி ``அதுதான் வரிசையா வரேன்ல.. போய் அய்யன்கிட்ட சொல்லு``ன்னு முடுக்கி விடுவார். அவரு தபால கையில குடுத்துட்டார்னா வர்ற சந்தோஷம் இருக்கே யப்பா....

இவர்களிடம் இருக்கும் ஒரு பழக்கம். இது ரொம்ப பாஸிட்டிவ்வான ஒரு தன்மைன்னு இன்றைக்கு தோன்றுகின்றது. எப்போ போய் இவங்ககிட்ட தபால் இருக்கான்னு கேட்டாலும், அன்றைய நாள்ல நமக்கு தபால் இல்லைன்னா, ஒரு வித கடமை கலந்த மனோபாவத்துடன், ``நாளைக்குதான்`` ந்னு சொல்லுவாங்க. தபால் இல்லைன்னு மூஞ்சில அடிக்கிற மாதிரி சொல்ல மாட்டாங்க. இதுவே எங்களுக்கு பழகி போய்,``என்னங்க தபால் இருக்கா, இல்ல நாளைக்கு தானான்னு`` கேட்க ஆரம்பிச்சிட்டோம்.
இவர்கள் அணியும் சீருடை பல சமயங்களில் வண்ணங்கள் மாற்றப்பட்டு, சமீப காலங்களில் காக்கி நிறத்தில் இருக்கின்றது. எனக்கு தெரிந்து இவர்கள் ஒரு வித சாம்பல் கலந்த நீல நிறம், மர நிறம், என பல நிறங்களில் காட்சி தந்துள்ளனர். மேலும் ஒரே பீட்டில் நீண்ட நாள் வந்தவராயின் ஒரு சினேக மனோபாவத்தையும் இவர்கள் நமக்கு தருவார்கள். என்னோட அன்பு ராஜூ அண்ணாவிற்கு இண்டர்வியூ கடிதம் வரும்னா அதை முன்னரே தபால் காரரிடம் சொல்லிவைத்து தபால் நிலையத்திலேயே அதை வாங்கிக்கிற சலுகைகளையும் அவங்க தந்தாங்க.
நாங்க பழனிக்கு மாறினப்பிறகு, இங்கும் தபால்காரர்களது தன்மைகளின் பல ஒற்றுமைகளை பார்த்தேன். நாங்க இருக்கிறது தெற்குரத வீதி. அப்பா பெயர் திரு. சுப்பிரமணியன். வடக்குரதவீதியிலும், இன்னொரு திரு. சுப்பிரமணியன். இன்னொரு ஒற்றுமை (தபால் காரருக்கு கொடுமை) என்னன்னா, இவரும் வாத்தியார். தெருவின் பெயர் சரியாக இல்லாத, குறிப்பா ரதவீதி -ன்னு மட்டும் இருக்கிற கடிதங்கள் சிலது ரெண்டு இடத்திலும் பாடாய் படும். ஆனாலும் இந்த தபால்காரர் இருக்காரே, மிகச் சரியாக இதை கொண்டு சேர்த்துடுவார்.
நான் பெங்களூர் வந்த பிறகு, இன்ஸ்டிட்யூட்டில் என்னை அடையாளம் கண்டு கையில் கடிதத்தை கொடுக்கும் அளவிற்கு அவர்கள் நட்பு பாராட்டினார்கள்.`` ஏனு பாலாஜி சாரே``-ன்னு அவங்க கூப்பிடறதுல இருக்குற வாஞ்சை மற்ற எந்த இடத்திலும் நான் பார்க்கவில்லை. இவர்கள் நமக்கு முக்கிய செய்தி தொடர்பாளர்களாக இருக்கின்றனர். இந்த ஈ-மெயில் யுகத்திலும் இவர்களது சேவை மிக்க அவசியமானது. இவர்கள் மழை வெய்யில் என்று எந்த காலநிலையிலும் தங்களை கரைத்துக்கொண்டு நமக்கு செய்யும் சேவைக்கு ஈடு ஏதுமில்லை.மேலும் கிராமங்களில் இவர்களது சேவை பலதரப்பட்டது. சிலருக்கு படித்துக்காட்ட வேண்டும். சிலருக்கு பதில் எழுதிதர வேண்டும். போர் முகத்தில் இருக்கும் தனது மகனிடமிருந்து கடிதத்தை எதிர்பார்த்து இருக்கும் மூதாட்டிக்கு ஆறுதல் சொல்ல வேண்டி இருக்கும். இவ்வாறு பல ..ம் கள்.
இவர்களின் தொழிற்சார்ந்த சகோதரர்கள் தான் தந்தி பட்டுவாடா செய்யும் நபர்கள். இரவு பகல், என்றில்லாமல் எந்த வித செய்தியையும் ஒரு ப்ரோஃபசனல் மனோபாவத்துடன் செய்யும் இந்த நபர்களும் நமது நன்றிக்குரியவர்கள்.
இப்படி பட்ட இந்த நபர்களுக்கு அரசாங்கம் தரும் சம்பளம் மிகவும் சொற்பமே. இந்த அருமையான நண்பர்கள், விழா காலங்களில் ஒரு பேப்பர் எடுத்துக் கொண்டு உங்களால் ஆனதை கொடுங்கள் என நம் முன் நிற்கும் போது, நாம் தான் உண்மையில் வெட்கம் கொள்ள வேண்டும்.
இவர்களுக்கு என் நன்றிகள்.

அன்புடன்
பாலாஜி-பாரி

அணு என்ற கருத்துருவாக்கம் -2

அனைத்திலும் அவற்றுக்கு உண்டான ஒரு பிரத்யேக அழகுண்டு. ஆனால் அனைவருமே அவற்றை பார்ப்பதில்லை
-கான்பூசியஸ்

நாம் அணு என்பதை பற்றி பேசுவதற்கு முன், ஏன் இப்படியான தலைப்பு என்பதை ஒரு எடுத்துக்காட்டுடன் பார்ப்போம்.

உறுமி மேளம் என்றால், மேலுள்ள படத்தை பார்த்து இது தான் உறுமி மேளம் என்று கூறிவிடலாம். மேலதிகமாக இது ஒரு தாள வாத்தியம் என்பதும், இதன் வடிவம் பற்றிய தகவல்களும், இதனை செய்யும் முறையும், உண்டாக்கும் ஒலியும், உறுமி மேளம் என்பதற்கான ஒரு புரிதலை உண்டாக்கும்.

ஆனால் அணுவை பற்றி இவ்வளவு எளிதாக ஏதும் சொல்லிவிட இயலவில்லை. ஏனெனில், முற்காலத்தில் இதை பார்க்க இயலாத நிலை மட்டுமே இருந்தது. இதன் வடிவம் பற்றி கருத்துகள் மட்டுமே சொல்லப்பட்டன. இக்கருத்துக்களுக்கு எந்த வித நிரூபணங்களும் இல்லை. ஆகவே எனக்கு இத்தலைப்பை தவிர வேறேதும் மிக பொருத்தமானதாக தெரியவில்லை. இன்று வரை அணு என்ற கருத்துருவாக்கத்தின் மூலமும் வேர்களும் அறிவியலின் வராலாற்றை ஆராயும் ஆய்வாளர்களுக்கு ஒரு புதிராகவே இருக்கின்றன.

ஆனால், அக்கால அறிஞர்கள்/தத்துவவாதிகள் அணு என்ற ஒன்று உள்ளது என்பதை அவதானித்து இருந்தனர். சென்ற பதிவு அவர்கள் அவ்வாறு உணர தலைபட்டதற்கு எத்தகைய சிந்தனை கோர்வை காரணமாக இருந்தது என்பதை முன் வைத்தது. இந்த பதிவு டிமாக்ரிடஸிற்கு முன்பே இந்தியதுணைக் கண்டத்தில் தோன்றிய அலுக்யா என்ற ஒரு சிந்தனையாளரை அறிமுகம் செய்கின்றது. இவர் கனடா என்றும் அழைக்கப்பட்டார். கனடா என்றால் அணு-உண்ணி என்று பொருள்.

இவர் கிமு 7-ஆம் நூற்றாண்டில் ஒரு சிந்தனா சாலையும், சமயப் பள்ளியையும் நிறுவினார். இவைகளின் மையக்கரு அணுவை சார்ந்தே இருந்தது. இவரது கருத்துப்படி அறிவு என்பது ஆறுவகையான நேர்மறை பிரிவுகளின் மூலம் பெறக்கூடியது. அவையாவன பொருள், தரம், செயற்பாடு, பொதுத்தன்மை, குறிப்பானதன்மை, தெரிந்தறிதல். இதில் பொருள் என்பது ஒன்பது வகையான வெளிப்பாட்டுத் தன்மை உடையது. இவற்றில் ஐந்து பருபொருள் அடிப்படைகளிலும் (நீர், நிலம், காற்று, நெருப்பு, ஈதர்**), மேலும் நான்கு அரூபமானவையாகவும் (நேரம், வெளி, சுயம், மனம்) உள்ளன. இவற்றில் பருபொருள் அடிப்படையில் அமைந்தவை அனைத்தும் அணுக்களால் ஆனவை. இயற்கையில் நமக்கு கிடைக்கும் மீச்சிறு துகள் ஆறு அணுக்களால் ஆனவை என்றும், இவைகள் சூரிய ஒளிக்கற்றையில் சோடி,சோடியாக (கடவுள் அல்லது மற்ற காரணங்களால்) இருப்பதாகவும், அவர் கூறினார்.

இக்கருத்துக்கள் இன்றைய தேதியில் ஒரு விளையாட்டு போல தோன்றினாலும், தன் ஆய்வுக்கான கருவை தெளிவாக வரையறுத்து பின்பு அவற்றை பிரித்து பட்டியலிட்ட தன்மைக்காகவேனும் அவரது முயற்சியை தெரிந்து கொள்வது அவசியமாகின்றது. மேலும் கனடா, அணுவை பற்றி, நாம் உணர்தல் மூலம் தெரிந்து கொள்வதைவிட அவதானிப்பதன் மூலமே தெரிந்து கொள்கின்றோம் என்பதிலும் தெளிவாக இருந்தார். அவர் இந்த அவதானத்திற்கு ஒரு எடுத்துக்காட்டும் கொடுத்திருந்தார். பருபொருட்களை கணக்கிலடங்கா (சுழிக்கு ஒப்ப) பங்காக பிரித்து கொண்டே போனால், ஒரு மலைக்கும், ஒரு கடுகிற்கும் எந்தவொரு வேறுபாடும் இருக்காது. ஏனெனில் சுழியும் சுழியும் ஒன்றே எனக் கூறினார்.

இதை பற்றி பொனமரோவ் கூறும் போது: டிமாக்ரிடஸ் கனடாவின் தத்துவங்கள் பற்றி அறிந்திருந்தாரா?. இது சாத்தியமே ஏனெனில் டெமாக்ரிடஸ் ஒரு பயணவிரும்பி. அவர் பயணித்த இடங்கள் பல. ஆகையால் இந்தியாவிற்கும் பயணத்திருக்கலாம். அவ்வாறு இருந்தால் கனடாவின் கருத்தே தொன்மையானதாக இருக்கக் கூடும்.

இத்தகைய மாபெரும் சிந்தனையாளர்கள் வாழ்ந்த சூழல் கிழக்கும் மேற்கும்!! ஆனாலும், அவர்களது கருத்து, அவர்களது பார்வை சந்திக்கும் புள்ளிகள் மிகவும் சுவாரசியமானது இல்லையா?

சரி. மேலும் இத்தகைய கருத்துக்கள் எவ்வெவ்வாறு உருமாற்றம் பெற்றன என்பதை வரும் பதிவுகளில் அறிய முயற்சிப்போம்.
-தொடரும்

** ஈதர் பற்றி அவர் எந்த வகையில் சொல்லி இருப்பார் என்பது எனக்கு புதிராகவே உள்ளது. இதை பற்றி மேலும் தகவல் கிடைத்தால் உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன்.

அணு என்ற கருத்துருவாக்கம் -1

அணுக்களை பற்றி பேச, கவிதை போன்ற மொழி நடையே மிக்க வசதியாக உள்ளது. - நேய்ல்(ஸ்) போர் (1885-1962 AD )

அணு என்ற வார்த்தை நம்மில் பலர் பல இடங்களில் கேட்டிருப்போம். சித்தர் பாடல்களில் கூட இதை பற்றிய குறிப்புள்ளதாக அறிகின்றேன். ஆங்கிலத்தில் atom என்று அழைக்கப்படும்.

அணு என்ற வார்த்தை எதை குறிகின்றது?. இது குறித்தான சிந்தனை யாரால் எப்போது முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது?

இக்கேள்விக்கான பதில் நோக்கி நாம் கால இயந்திரத்தை பின்னோக்கி செலுத்தினால்……
நாம் அடைந்த இடம்: மத்திய தரைக் கடல் பகுதியில் இருக்கும் த்ராசியன் கடற்கரை.
கால இயந்திரத்தின் மானிட்டரில் நாம் பார்க்கும் கால அளவை: 460 - 370 B C

ஒரு மிதமான வெய்யில் இருக்கும் நற்காலை பொழுது. கடலை ஒட்டிய ஒரு பாறையின் மேல் அமர்ந்து கொண்டிருக்கின்றான் டிமாக்ரிடஸ். அவன் கைகளில் ஒரு ஆப்பிள். தன் முன் இருக்கும் பரந்து விரிந்த ஆகாயமும், அதனை மௌனமாக தொட்டு விளையாடும் ஆழமான கடலும் அவனுள் ஒரு மோனத்தை உருவக்குகின்றது. அப்பொழுது அவனுள் இருக்கும் ஆகாயத்திலிருந்து ஒரு மின்னல் கீற்று ஒரு சிந்தனையாக வெளிப்படுகின்றது. ” இந்த ஆப்பிளை நான் வெட்டினால், இரு அரை பகுதிகள் கொண்ட துண்டுகள் கிட்டும். அவைகளில் ஒரு பகுதியை நான் வெட்டினால் என்னிடம் நான்கில் இரு பகுதிகள் இருக்கும். இவ்வாறே நான் தொடர்ந்து வெட்டிக்கொண்டே போனால், என்னிடம் 1/8,1/16, 1/32, ..1/1024…..etc., என ஒரு ஆப்பிளின் சிற்சிறு துண்டுகள் கிடைத்துக் கொண்டே இருக்குமா? அல்லது, இந்த முயற்சியில் ஒரு கட்டத்தில் ஆப்பிளின் பண்பை இழந்த, தனித்தன்மையிலான மீச் சிறு துண்டுகள் மட்டுமே எஞ்சுமா?”

அவனது இக்கேள்வியில் ஒரு உண்மை பொதிந்து கிடந்தது. ஒரு பொருளை சிதைத்துக்கொண்டே போனால் ஒரு கட்டத்தில் மேலும் பிளக்க இயல நிலை உண்டாகும் என்ற முடிவுக்கு வந்தான். அதை அவன் “பிளக்க இயலா துகள்” என பெயரிட்டான். கிரேக்கத்தில் அதனை
ατομοζ என்று அழைப்பர். ஆங்கிலத்தில் atom என்று பிற்காலத்தில் வழங்கலாயிற்று. இந்த தகவல்களை அவன் “Little world system” என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளான்.

சரி. நாம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே மீண்டு(ம்) வந்து விடுவோம்.

தற்கால அறிவியலில் டெமாக்ரிடஸ் அணு கருத்துருவாக்கத்தின் தந்தை என போற்றப்படுகின்றார்.

இவரை பற்றி சிறு குறிப்பு: அப்டேரா என்ற இடத்தில் பிறந்தார். இந்த இடம் மத்தியதரைக் கடல் பகுதியில் அமைந்த த்ராசியன் கடற்கரையில் இருந்தது. இவர் லூசிப்பஸின் சீடன் ஆவார். மேலும் இவர் சால்டியன் சான்றோர்களிடமும், பெர்சிய மாகி -இடமிருந்தும் பாடங்கள் பெற்றார். இவர் பெரிய நாடோடியாக இருந்துள்ளதால் பல தகவல் அறிந்தவராகவும் சித்தரிக்கப்படுகின்றார். இவரது நகரத்து மக்கள் இவரிடம் பெரு மதிப்பு வைத்திருந்ததாகவும், இவரது இறுதிச் ஊர்வலத்தில் பொது மக்கள் பெருந்திரளாக இருந்தனர் என்றும் கூறப்படுகின்றது. ஓவியர்கள் இவரை உயரமான, குறுந்தாடியுடைய மனிதனாக சித்தரிக்கின்றனர்.

நான் மேலே குறிப்பிட்டதை நன்கு கவனித்தால் தெரியும் நான் சொன்னது முதன் முதலில் “பதிவு” செய்யப்பட்ட தகவல் என்று. நமக்கு அங்குமிங்குமாக கிடைக்கும் வராலாறு என்ன சொல்கின்றது என பார்ப்போம். டெமாக்ரிடஸ்-ன் ஆசானான லூசிப்பஸ்-க்கும் அணு கருத்துருவாக்கத்தில் பங்கு இருகின்றது என கூறப்படுகின்றது. பண்டைய இந்திய சிந்தனையாளர்களில் ஒருவரான கனடா என்பவரும் டெமாக்ரிடஸ்-க்கு முன்பே அணுக் கருத்துருவாக்கத்தில் கவனம் கொண்டார் என்றும் தெரிகின்றது. இதை பற்றி விவரமாக அடுத்த பகுதியில் பதிகின்றேன்.

-தொடரும்

இந்த கட்டுரை (தொடர்) L I Ponomarev அவர்களால் எழுதப்பட்ட The quantum dice என்ற புத்தகத்தின் அடிப்படையில் எழுதப்படுகின்றது. இப்புத்தகம் Mir publishers Moscow- ஆல் 1988-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. எனக்கு இந்த புத்தகம் ஒரு பழைய புத்தக கடையில் கிடைத்தது

பாலாஜி-பாரி