Wednesday, December 31, 2003

நட்பு

காயப்படுத்திக் கொண்டே
இருந்தாய்
சிரித்தபடி ஏற்றுக் கொண்டேன்

உன் மீது யாரேனும்
பழி சொல்ல,
சொன்னவரைக்
கடிந்து கொண்டேன்

நீ சொல்ல நடந்து
நீ சொல்ல நின்றேன்.

உன் குருவிக்கூட்டு இதயத்திற்குள்
வலுக்காட்டாயமாய் நுழைந்தேன்
மின்னும் மின்மினியாய்

என் சிறகை விரிக்கவும்
எனக்குள் சுருக்கி கொள்ளவும்
உன் கட்டளைக்காய் காத்து நிற்கிறேன்

காதலைப் போல
நட்பிற்கும் மயக்கமுண்டு என்று
காட்டியது நீ!!

- வீணா நிரஞ்சனா (ஒரு இணை தளத்தில் படித்தது.....இவரது படைப்புகளை மேலும் படிக்க விரும்பும் - பாரி)


நட்பு மேலோங்கி நானிலம் தழைக்க, அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!!

Saturday, December 27, 2003

யார்???

கார் இருள்..
ஒளி நிறைந்த உள்ளம்..
கண் தெரியா ஆழம்..
செவி உணறும் ஓலம்..
கதறல்..
வெளி..
வாசனை..

இருவன் நான் என
உணர்ந்த பின்
முகமறியா ஒருவனை
முகமுள்ள ஒருவன்
அறிய முயலும்
அந்தகாரத்தில்
எவனது எது?
ஓ..........உணர முடியா நிகழ்வுகள்!!

-பாரி

Friday, December 26, 2003

நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்: 4(பேப்பர்....பேப்பரேய்ய்ய்)


வியாபார ரீதியாக நம்மை அணுகும் மனிதர்களில் சிலர் தங்களை அறியாமலே, சுற்று சூழல் அறிவியலின் ஒரு கூறாக உள்ள "மீள்சுழற்சி" என்ற செயல்முறைக்கு உதவியாக உள்ளனர். இதை தவிர, பல சொல் வழக்குகளிலும், நாடகம் மற்றும் திரைப்படங்களிலும் நகைச்சுவைக்கு வாய்ப்பு தந்துள்ளனர் (எ. கா: கரகாட்டக்காரன் படத்துல, கவுண்டமணி ஒரு அரத பழசான "காரை" ஓட்டிட்டு வருவாரு. அப்போ அந்த பக்கம் வந்த நம்ம ஆளு அந்த "காரை" பார்த்து உரக்க சொல்வாரு "ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம் பழம்"ந்னுட்டு. அதை தொடர்ந்து வரும் வசனங்கள்ல ஒரு நல்ல சிரிப்பு இருக்கு (அது அப்புறம்)). பண்டைய கால வியாபார முறைகளை தற்காலத்திலும் கைக்கொண்டு இருக்கும் கடைசிக் கண்ணிகள் இவர்கள். பணம் கொடுத்து பொருள் வாங்கிப் பழகிய நமக்கு, பொருள் வாங்கி பணம்/பண்டம் கொடுப்பவர்கள். நம்மிடையே இருக்கும் அத்தகைய நபர்களில் எனக்கு தெரிந்த சிலரை உங்களுக்கும் அறிமுகம் செய்கிறேன்.
துரு ஏறிப்போன சக்கரங்கள் கொண்ட ஒரு மிதி வண்டியில், மதியம் மங்கி மாலை தோன்றும் பொழுதில் "பேப்ப்ரு........... பேப்ரேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்"ந்னு அவர் சத்தம் கொடுத்துட்டு வருவார். அந்த சைக்கிள் காரியர்ல ஒரு மரப் பெட்டி இருக்கும். அத ஒரு "சைக்கிள் ட்யூப்"நால இழுத்து, சைக்கிள் காரியரோட கட்டி இருப்பார். அதுக்குள்ள என்ன இருக்கும் என்பது எட்டிப் பார்த்தாலும் தெரியாத ஒரு மர்மமே!. சைக்கிள் பாரோட இரண்டு பக்கத்திலேயும் கோணிச்சாக்குகள் தொங்கும். எங்க காம்பௌண்ட்-க்குள் அவர் வருவது வாண்டுகளான எங்களுக்கு வேடிக்கையாக இருக்கும் என்றால், எனது அப்பாவிற்கும்-பெரியப்பாவிற்கும் பிதுரார்ஜித சொத்து பறி போகிற பயம் வந்து தொற்றிக் கொள்ளும். எங்கள் வீட்டில் இருக்கும் பயன் தராத பொருட்களை களைய முயலும் எனது பெரியம்மாவிற்கு அவரது வரவு ஒரு வடிகாலாக அமையும். கூவுவதற்கு தான் "பேப்பர்". மற்றபடி அவர் பழைய உடைந்து போன பிளாஸ்டிக் பக்கெட்கள், கண்ணாடி சீசாக்கள், பழைய தகரங்கள் இவைகளையும் தக்க பொருள் தந்து ஆர்ஜிதம் செய்துகொள்வார்.
இவரைத் தவிர, சீனிக் கிழங்கு, உப்பு, புதிய பிளாஸ்டிக் பொருள் போன்றனவற்றை பண்ட மாற்றாக கொடுத்து பழைய பொருட்கள் வாங்கிச் செல்லும் நபர்களும் எங்கள் காம்பௌண்டிற்கு வந்து செல்வார்கள்.

Thursday, December 18, 2003

மழை



சவுக்குத் தோப்பில் ஈரமாய் நின்று
ஏகமாய் காட்டினாய் நான் அழகு என்று...
துளியாய் நின்றாய்....
தூலம் சிலிர்க்கச் செய்தாய்...
மென்மை ஒளியை ஊடுறுவச் செய்தாய்.....
ஒளியும் வியந்தது!
ஒளிக்கு ஒளி கொடுத்தாய் என்று!!

தண்(ன்)மை மிக்க மழைத்துளியே....
இவ்வளவு இருந்தாலும்,
கருணையினால் கசிந்து
கண் விளிம்பில் பூத்த துளிக்கு...
எவ்வாறு நீ பதில் சமைப்பாய்??

-பாரி

Thursday, December 11, 2003

நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்: 3 (தாயம்மா.........தொடர்ச்சி.....

தாயம்மாவிற்கு இரண்டு மகள்கள், கடைசியில் ஒரு மகன். முன்பு கூறிய, என்னோடொத்த பேரன்கள் இருவரும் மூத்த மகளின் புதல்வர்கள்.
தாயம்மாவிற்கு அந்த காம்பௌண்ட் ஒரு நிரந்தரமான நிலை என்று அவரும், அவரது பந்தங்களும் நம்பியதாக இன்று நான் நினைக்கிறேன். அவரது பணி காலை பகலவன் வரும் முன் தொடங்கும். வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து விடுதல்தான் அவரது முதல் வேலை. அதன் பின் ஒரு எட்டு மணிக்கு, பாத்திரம் தேய்பதற்கு வருவார். அப்போது அவருக்கு ஒரு டோஸ் காப்பி/டீ கிடைக்கும். பின்பு பெரிய அய்யங்கார் மாமி அவரை "வானொலி" வாங்க அனுப்புவார். மதியம் ரேசன் கடைக்கு சென்று எவர் வீட்டுக்கெனும் வேண்டிய பொருட்களை வாங்கி வருவார். மாலை நேரம் மீண்டும் ஒரு முறை அனைத்து கூட்டி பெருக்க வேண்டிய இடங்களை தூய்மை செய்து விட்டு தன் வீட்டிற்கு செல்வார்.
அவருக்கே உரித்தான சில பிரச்சனைகள் இருந்தன. பல வீடுகளில் தரும் உணவை அவர் உண்டுவிட்டு மீதியை, தனது தொட்டியின் அருகே ஒரு அலுமினியத் தூக்கில் இட்டு வீட்டிற்கு எடுத்து செல்ல வைத்திருப்பார். அதை சரியாக மூடாமலோ, அல்லது நன்கு வெளியே தெரியும்படியோ வைத்துவிட்டால், காக்கைகளும் அந்த உணவுக்கு போட்டியாக வந்து விடும். அந்த உயிர் போராட்டத்தில் பங்கு கொள்ள சில வேளைகளில் பூனைகளும் வரும்.
சில மாலை பொழுதுகளில் அவரது இரண்டாம் பெண் அங்கு வருவதுண்டு, ஏதேனும் சிக்கல்களோடு. சமூக மற்றும் பொருளாதார நிலையில் தாழ்ந்து, தனது நேர்மை, மற்றும் உடலுழைப்பை மட்டும் சார்ந்து வாழும் அவருக்கு வாழ்க்கை அச்ச மூட்டுவதாக அமைந்து விட்டதில் வருத்தங்களே எஞ்சி இருந்தது. அந்நிலையில் அவரது மகளுக்கான தேவையை நிறைவேற்றுவதில், தனக்கு உண்டான தோல்வியை கோபமாக சத்தம்போட்டு மகளை திட்டித்தீர்ப்பதில் வெளிப்படுத்துவார். மகளின் திருமணமோ, திருமணம் ஆகி சில வருடங்களில் மகளின் கணவன் இறந்ததோ, இரண்டு மூன்று நாள் பணி விடுப்பு என்று மட்டுமே உணர வேண்டியதாகியது தாயம்மாவிற்கு, சில கண்ணீர் துளிகளுடன்.
அதற்கு பின் இரண்டு - மூன்று வருடங்கள் கழித்து, என் அம்மாவிடம் கூறியது "என் பொண்ணு இப்போ நல்லா இருக்குங்க. இரும்படிச்சு அடுப்பு செஞ்சு விக்கும் கடை வைச்சிருக்கிர ஒரு ஆளு வீட்டுக்கு வந்து போகுதுன்னு எனக்கு படுது. அந்தாள பத்தியும் மோசமான வார்த்தை இல்ல" என்று கூறிவிட்டு, "நான் என்னம்மா செய்யறது? அதுஅதுக நல்லா இருந்த சரி" என்று கூறி மூக்கை சிந்தியவாறே மற்றும் ஒரு நாளை ஆரம்பித்தார். (தாயம்மா- முற்றும்)

Wednesday, December 03, 2003

நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்: 3 (தாயம்மா..)

இன்றைய வேகமான நாட்களில், குறிப்பாக இரண்டு சம்பாத்தியம் இருக்கும் வீடுகளில் அல்லது முதியோர் மட்டும் வசிக்கும் வீடுகளில், அந்த வீட்டில் உள்ளோரைத் தவிர தினமும் மிக உரிமையாக வலம் வந்து கொண்டு இருப்பவர்கள், அந்த வீட்டின் "வேலைக்காரர்கள்". இவர்களை நீங்கள் சந்தித்திருக்க கூடும், சமயங்களில் கருணையோடும், சமயங்களில் காழ்ப்போடும். இங்கு அறிமுகமாவது லக்ஷ்மி புரத்தில் பெரும்பாலான வீடுகளில் பணிபுரிந்த "தாயம்மா" அவர்கள்.......

குழந்தைகள் மனிதர்களை அடையாளம் அறியும் வயதிலேயே, எனக்கு அறிமுகமானவங்கதான் "தாயம்மா". இவங்க பார்க்க நல்ல கருப்பா இருப்பாங்க. ரொம்ப ஒல்லியான வற்றிப் போன உடம்பு. ஆனா ஆச்சரியப் பட வைக்கிற சுறுசுறுப்பு. எங்க காம்பௌண்ட்ல ஒரு சதுரமான வாயுடைய கிணறு இருக்கு(ம்). அதுல தண்ணி வத்தினதே கிடையாது. அந்த கிணறை சுத்தி நேர்த்தியான கல் சுவர்கள் இருக்கும். கல் சுவர்கள் மேலே ஒரு நீர் சேமிப்பு தொட்டி உண்டு. அந்த கல் சுவரின் ஒரு பக்கத்தில்தான் தாயம்மாவோட பொருட்கள் அடங்கிய சற்றே சிதிலமான தொட்டி இருக்கும். இதுதான் அவங்க சொத்து.

அவங்க எப்பவும் "பிசி"யாவே இருப்பாங்க. அவங்க சாப்பிடறது பெரும்பாலும் 11-வீடுகள்ல் எதிலிருந்தாவது கொடுக்கப்பட்டிருக்கும் உணவாக இருக்கும். அவங்ககிட்ட ஒரு பழக்கம். மதியம் சாப்பிட்டவுடன் கொஞ்ச நேரம் தூங்குவது. தாயம்மாவின் பேரன்களுக்கு எங்கள் வயதுதான் இருக்கும். அவர்கள் அவ்வப்போது வந்து போவார்கள்.

-தொடரும்....

Saturday, November 29, 2003

நம்மிடையே இருக்கும் நம்மவர்கள் : 2 ( குடுகுடுப்பாண்டி......)

இந்த நபர் வந்து விட்டால், வாண்டுகளின் சர்வ நாடிகளும் ஒடுங்கி விடும். எங்க காம்பௌண்ட்-ல் இருக்கும் அனைத்து "மல்ட்டிப்பிள்" வால்களும் சுருண்டு அடங்கி விடும். இந்த நபரை பற்றிய எங்களுக்கான அறிமுகம்தான் இதன் காரணம்.
பாலாமாமி சொல்வார் "குட்டிகளா! அவன் உங்கள காணப்படாது கேட்டேளா?" என்று கூறி பின்னர் மிரட்டும் மற்றும் எச்சரிக்கும் குரலில் "அவன் உங்களை பார்த்தாலோ, அப்படியே வீபூதி போட்டு மயானத்துக்கு கூட்டிண்டு போய்டுவன்"என்பார். எங்களில் பலருக்கு மயானம் என்றால் அம்புலிமாமா-வின் விக்ரமாதித்யன் கதையில் வரும் வேதாளத்தின் இருப்பிடம் கண் முன் வந்து மிரண்டு கிடக்கும் எங்களை மேலும் மிரளச்செய்யும்.
இது போதாது என்று எங்கள் வீடுகளில் இருக்கும் அக்காக்களும், அண்ணண்களும், தங்களது சிறுவயதில் எப்படியெல்லாம் அவரின் (குடுகுடுப்பாண்டி) வசியத்தில் இருந்து தப்பியதாக கூறி அவர்களது சாதனைகளை பட்டியலிடுவார்கள். அதிலும், குறிப்பா பாக்கியாக்கா கூறிய சம்பவம் எப்பொழுதும் எனக்கு கனவாக வந்து நுரை தள்ள வைக்கும். அவங்க சொன்னாங்க "நான் அன்னிக்கு உடம்புக்கு முடியாம ஸ்கூலுக்கு போகல. பத்து மணிக்கு தண்ணி பைப் பக்கத்துல நிக்கும் போது அவன் வந்துட்டன். கையும் ஒடல, காலும் ஒடல. நான் ஆம்முக்கு வேகமா ஓட பாக்கிறேன். என்னால ஓட முடியலயாக்கும். (102 டிகிரி காய்ச்சல எப்படி ஓட முடியும்?). அப்போ என்ன அவன் கூப்பிட்டு "பாப்பா! இந்தா விபூதி"ன்னான்"!!. எனக்கு மயக்கம் வர்ர மாதிரி ஆகி, அம்மான்னு கத்திண்டே கிழே விழுந்தேன். அப்போ பார்த்து அம்மை அங்கே வந்தாள். இல்லேன்னாக்கா, இன்னிக்கு நான் உனக்கு கதை சொல்ல இங்க இல்லையாக்கும்", என்று முடித்தாள் மாபெரும் மர்மத்தோடு.
பிற்காலத்தில், குடுகுடுப்பை காரர்களின் வாழ்க்கை முறை அறிந்து, அவர்களின் நாடாறு, காடாறு மாத திரிதல்களில் வியந்து, அவர்களது கடவுளான ஜக்கம்மா-வின் மகிமை(?), கட்ட பொம்முவின் வம்சம் தாங்கள் என்பனவைகளை கூறக் கேட்டாலும், எங்களது அறியா வயதின் அந்த புரியா மர்மம் இப்பொழுதும் எங்களை சிலிர்க்க வைக்கும்.

Friday, November 28, 2003

நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்.....

நம் வாழ்க்கை அமைப்பில், நாம் விரும்பாவிட்டாலும் நம்முடன் இருப்பவர்கள், "பிச்சைகாரர்கள்".
நம்மில் பலருக்கு பிச்சை எடுத்து வாழும் சில-பல நபர்களின் பரிச்சயம் உண்டாகி இருக்கும். சில வேளைகளில், அவர்களை சந்திக்காவிடில் "இன்ன்னிக்கு எங்கே காணம்?"என்ற எண்ணம் லேசாய் தோன்றி மறையும். அவ்வாறு எனக்கு சிறு வயதில் பரிச்சயமான இங்லீஷ் பிச்சைகாரரை பற்றி....

எங்க காம்பௌண்ட்ல, 11-வீடு இருக்கும். நண்டும், சிண்டுகளுமாய் 8- 10 வாண்டுக இருப்போம். (அதுல சிலருக்கு அது "அவே ப்ரம் ஹோம் க்ரவுண்ட்"). ஞாயிற்றுக் கிழமைகள்ள, வெய்யில வீணாக்காம விளையாடும் போதுதான், மேலே சொன்ன இங்லீஷ் பிச்சைகார அன்பர் வருவாரு. என்னமோ இங்கிலாந்து-ல இருந்து நேரா எங்க காம்பௌண்டிற்கு வர்ரவருன்னு நினைக்க வேண்டாம். ரொம்பபோன அவரோட பூர்வீகம், எங்க தெருவிலிருந்து ஒரு மூன்று தெரு தள்ளி இருக்கும். அவ்வளவுதான். மனுஷன் "சீனுக்கு"வந்த உடனே, அதாவது எதிர்காலத்தில் புகழ் பெற போகும் "லக்ஷ்மி புரம்" காம்பௌண்டின் (எங்க காம்பௌண்டின் திரு நாமம் தான்) நுழை வாயிலை மிதித்ததும், சொல்வாறு "டுடே சண்டே" என்று. இப்படி அவரு சொன்னதுதான் தாமதம் எங்களுக்கு குஷி பிறந்திடும். எங்கள்ல சிலதுக கான்வென்ட்ல் படிகிறதுக. அதுக "டெல் ஒன், டூ, த்ரி...."ந்னு ஆரம்பிக்குங்க. , அவரோட இங்கிலீசு கேட்க, அவருக்கு பின்னாடியெ பதினோறு வீட்டுக்கும் போவோம். சில சமயம் மக்க அடிக்கிற கடுப்புல, அவரு தன்னோட கைத்தடிய வைச்சு அடிக்க வரும் போது "கே-கொள்ளே"ன்னு சத்தம் போட்டு வீட்ல இருக்கிற பெரியவங்களுக்கு எங்கனால முடிஞ்ச அமைதிய கொடுப்போம். அவரு அப்போ என்ன பேசினாரோ தெரியாது. ஆனா, என்னய மாதிரி, நகராட்சி நடு நிலைப் பள்ளி-ல் (BG புரம்) படிச்ச மக்களுக்கு (வாண்டுகளுக்கு) அவர்தான் முதல் இங்லிஷ் வாத்தியாரு......................

Wednesday, November 26, 2003

உயிர்ப் பறவை

ஆழ் மனச் சச்சரவுகள்...
சிதறும் தருவாயில் மனக் குருவி...
..... விட்டு விடுதலையாகி,
அண்டப் பெரு வெளியில்
உற்சாகமாக உயரும் பொழுது
அண்ணாந்து பார்த்து
அமைதியாயின
ஆழ் மனச் சச்சரவுகள்...
விட்டு விடுதலையாகியது

மனக் குருவியா.....???
உயிர்ப் பறவையா.....???

-பாரி

(இந்திய அறிவியல் கழகத்தின் தமிழ் பேரவையின் இலக்கிய மலரான மின்னலில் வெளி வந்த கவிதை இது...)

Monday, November 24, 2003

அன்புடையீர், வணக்கம்!!

பாரியின் உருமி மேளத்தில் வரவிருக்கும் சில தாளங்கள்....
1. சமூகமும் அதன் இயக்கமும்....
2. அறிவியல்.......
3. சில கதைகளும், "கட்டு"உரைகளும்....
4. பாதித்த கவிதைகளும், பாதிப்பால் உண்டான கவிதைகளும்.....