Saturday, February 28, 2004

நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்: 5 (தென்னை மரத்....-2)

அவர் ஒரு நிதானத்துடன் ஒரு மரத்தை அண்ணாந்து பார்ப்பார். பின்பு ஒரு கையை அதன் மேல் வைத்து, அழகான லாவகத்துடன் தனது கால்களில் நாரால் ஆன பெல்ட்டை மாட்டி கொள்வார். அதன் பின் அவர் வலது கையை மரத்தை அணைத்தவாறு பிடித்துக் கொண்டு, இடது கையை மரத்தில் அழுத்தி, நாரால் ஆன பிணைப்பின் உதவியோடு கால்களால் மரத்தை கவ்விக் கொண்டு ஏறுவார். அது ஓர் பெரிய நேர்த்தியான செயல். அவர் அதை அனாயசமாக செய்வார். மர உச்சியை அடைந்தவுடன், கைகளால் காய்ந்த மட்டைகளை பிய்த்து போடுவார். வீட்டில் இருக்கும் தட்டி வழியாக அண்ணாந்து பார்க்க அவ்வளவு பரபரப்பாக இருக்கும். அதன் பின், தேங்காய வெட்டி மேலே இருந்து போடுவார். அப்ப கீழே நிற்கும் அவரது மகனோ அல்லது மனைவியோ அந்த வழி செல்பவர்களை உஷார் செய்வர். இவ்வாறு கவனித்து செய்யும் பொழுது கூட எங்களது காம்பௌண்ட் அருகில் உள்ள (ஜெயந்தி அக்கா) வீட்டில் தேங்காய் விழுந்து அவரது தாயாரின் மலையாளம் கலந்த தமிழ் வசை சொற்கள் அசரீரியாக வரும். இதனிடையே, கொஞ்சம் பச்சை மட்டைகளையும் மேலேயிருந்து தள்ளுவார். இவ்வாறு அனைத்து மரங்களையும் ஒரு ரவுண்ட் வந்த பிறகு பறித்த தேங்காய்களை மூட்டையிலிட்டு எடுத்து செல்வார்.

இந்த நிகழ்வுகளுக்கு இடையில், மேலேயிருந்து சிதறி இருக்கும் தென்னங் குரும்பைகள், தென்னம் மட்டைகள் ஆகியன வாண்டுகளின் உற்சாகத்தை கூட்டும். தென்னங்குரும்பைகளை நாங்கள் குரும்பைக்காய் என்போம். அது பல சமயங்களில் எங்களுக்கு Ball -ஆக மாறி கிரிக்கெட் ஆட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும். மேலும் குரும்பைக்காயை கொண்டு கிலுகிலுப்பை செய்யலாம். குரும்பக்காயின் தொப்பி பகுதியை நீக்கி மென்மையான முன் பகுதியை தரையில் தேய்த்து தட்டை ஆக்கி கொள்ள வேண்டும். ஈர்க்குச்சி ஒன்று எடுத்து அதை வளைத்து தட்டை பகுதியில் U வடிவத்தில் அமைத்து செருகி கொள்ள வேண்டும். மேலும் ஓர்க் குச்சியை மையத்தில் செருகிக் கொள்ள வேண்டும். இப்போது அது நாமம் மாதிரி தோன்றும். அதற்கு செங்குத்தாக இரு குச்சிகளை செருகி சுழற்றும் போது, நடுவில் இருக்கும் குச்சி முன்னும் பின்னும் அசைந்து கடக், கடக் என்று சீராய் ஒலி எழுப்பும். கிலுகிலுப்பை தயார். தென்னம் மட்டைகளின் அடிப்பகுதியை வெட்டி, சிறிது செதுக்கி Bat-ஆக மாற்றும் ஓர் கலையும் நாங்கள் கற்றோம். மட்டையின் மேல் இருவர் உட்கார மேலும் இருவர் அதை இழுத்து செல்லும் வண்டி விளையாட்டும் மிக்க களிப்பை தரும். பச்சை தென்னம் மட்டைகளிலிருந்து ஓலைகளை பறித்து அதில் குச்சிக்கு அருகில் நுனியில் இருந்து அடி வரை கீறி விட்டு கடைசியில் தொங்குமாறு செய்து, அதை பின்னி ஒரு பாம்பு போல் செய்வோம். தென்னை ஓலைகளில் இருந்து ஊது குழல் செய்வதும் எளிது. ராக்கெட் மாதிரி அந்த ஓலைகளை பறக்க விடவும் செய்யலாம். எங்களுக்குள் இருக்கும் குரங்கு விழித்து எழுந்து விட்டால், தென்னை மரத்தில் ஒரு கால் பங்கு உயரம் ஏறுவோம்.

இவ்வாறு தென்னை மரத்தின் பயன்கள் பல. (தென்னை மரத்தின் பயன்கள் என்ன? என்ற பரிட்சை கேள்விக்கு நியாயமான பதில் இதுதான் என்பது அடியேனின் அக்கால எண்ணம்).

காம்பௌண்டை பிரித்து விற்க வேண்டிய ஓர் சூழ்நிலையில், அம்மரத்துக்காரர் வந்தார். அவருடன் மேலும் சில நபர்கள் வந்தனர். அவர் ஒரு சில மரங்களை கைகாட்டி அவர்களுடன் விவாதித்து கொண்டிருந்தார். ஒரு வாரம் கழித்து நாங்கள் பார்த்தது அம்மரங்களின் வீழ்ச்சியை. நான்கு மரங்களும் ஓரிரு நாட்களில் சாய்ந்தன. அப்போது நான் ஒரு துயரமும் இன்றி அதை வேடிக்கை பார்க்க அசாத்திய தைரியம் அடைந்தவனானேன். அந்த தென்னை மரத்துக்காரரும் அவ்வாறே எண்ணியிருக்க கூடும்.
(தென்னை மரத்துக்காரர் - முற்றும்)

- பாரி

Thursday, February 26, 2004

என் வேதனைக் கால குறிப்புகள் - 2

முகில்கள் தோற்குமோ
கவின் மிகு பிம்பங்களில்....

மலைகள் தோற்குமோ
அழுத்தமான இருப்புகளில்...

மலர்கள் தோற்குமோ
பரவச ரசனைகளில்....

ஒளிகற்றை தோற்குமோ
தேடல்களின் ஆழத்தில்...

உணர்வுகள் தோற்குமோ
உயிர் துடிக்கும் பிரிவின் அக்கணத்தில்...

(காற்றிலே கலந்து இருந்தது
பெண்டத்தால் வாசனை குளிர்ச்சியாய்)


- பாரி

Thursday, February 19, 2004

அறிவுக் களஞ்சியம் www.thamizham.net

இன்று ஒரு இணைய தளத்தை நண்பர் தங்கமணி சுட்டிக்காட்ட நான் பார்த்தேன். அதில் ஓர் ஆசிரியரின் சீரிய பணியை கண்டு வியந்தேன். இவர் தற்கால தமிழ் இலக்கியத்தின் ஓர் கருவூலம். இவரை பற்றி நம் வலைபதிவர்களுக்கு தெரியுமா எனத் தெரியவில்லை. ஆகையால் இந்த உடனடி செய்தி.
திரு. நடேசன் அவர்கள், பொள்ளாச்சியில் இருந்து கொண்டு இந்த அருமையான தமிழ்த் தொண்டாற்றி வருகிறார். அவரது நூலகத்தில் இருக்கும் சிற்றிதழ்-களின் எண்ணிக்கை வியக்கத்தக்கது மேலும் போற்றத் தக்கது. அவருடன் இணைந்து பணியாற்றும் ஒவ்வொரு இளைஞர்களிடமும், ஓர் தீவிரம். அனைவரையும் நாம் போற்றுவோமாக.
இவர்களின் பணி ஓர் கூட்டு முயற்சியாய் நடை பெறுகின்றது. பல அரிய புத்தகங்களும், தமிழ் சார்ந்த பல தகவல்களும் சுவாரசியம் கொள்ள செய்கின்றன. இவர்கள் இதை மின் ஊடகத்தில் மாற்றவும் முயற்சி செய்கின்றனர். இவர்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.

அன்புடன்
-பாரி

நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்: 5 (தென்னை மரத்துக்காரர்)

கடந்த பல வாரங்களாக மற்ற விஷயங்களில் சென்ற கவனம், இன்று தான் இந்த தொடருக்கு திரும்பியது.

எங்க காம்பௌண்ட்ல பதினோரு வீடுகள் இருந்தன. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு மரம் என்ற வகையிலோ என்னவோ, பதினொரு தென்னை மரங்கள் இருந்தன. ஒரு அடர்த்தியில்லா தென்னந்தோப்பு. இதை தவிர ஒரு பெரிய அடுக்கு - செம்பருத்தி செடி (புதர்?), அழகிய மஞ்சள் பூக்கள் தரும் மந்தாரைச் செடி, குட்டியா ஒரு செம்பருத்தி செடி, கிணற்றடி அருகிலே வசந்தி அக்காவின் முயற்சியில் தோன்றிய சில வாழை மரங்கள், என்று கலகலப்பாக இருக்கும். நான் மூன்றாவது படிக்கும் போது, எனது பெரியம்மாவின் கடைசி மகன் (என்னையும் சேர்த்துக் கொண்டு), சோமு என்ற நண்பரின் வீட்டில் இருந்து, ஜீன்யா செடியை கொண்டு வந்தான். இந்த பூக்கள் பல வண்ணங்களில் பிரகாசமாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். நான் இதுவரை பல பூக்களை (பெயர் தெரியாவிட்டாலும்) கண்டு மகிழ்ந்துள்ளேன். ஆனால் ஜீன்யா பூ எனக்கு சொல்ல முடியாத அளவு பெரு மகிழ்ச்சி தரும். இப்போது பார்த்தாலும்.... (JNC-விடுதிக்கு அருகில் இதை நான் காலையில் தினமும் பார்க்கின்றேன்). இதை தவிர, சேனைக் கிழங்கு எனது தந்தையின் முயற்சியால் அவ்வப்போது இடப்படும். (சேனைக் கிழங்கு செடி பார்ப்பதற்கு அழகாக இருக்கும்: வெளிர் பச்சையில் ...)

சரி. விசயத்திற்கு வருவோம். இந்த தென்னை மரங்களில், இரண்டு "செவ்வெளநீ" தரும். இந்த இரண்டில் ஒன்று பாலா மாமியின் வீட்டினுள் வளர்ந்து கூரை வழியாக வெளி வரும். கூரை சீமை ஓடால் வேயப்பட்டிருக்கும். அந்த மரத்தில் தென்னம் மட்டைகள் காய்ந்து போனால், பாலா மாமிக்கு டென்ஷன் அதிகமாகிவிடும். "இப்படியே இருந்தாக்க, காத்தடிச்சு மட்டை விழுந்து ஓடுகள பொறுக்கணும். இந்த விஷயத்தை ராஜாமணி காதில போட்டுடணும்" என்பார். (ராஜாமணி என்பவர், எங்க house ownerin ரின் மூத்த புதல்வர்). இவரை தவிர மற்றவர்களும் இதனால் பாதிக்கப்படுவார்கள். ஆனால் எப்போதாவது அகஸ்மத்தாக விழும் ஒரு தென்னம் மட்டை, ஒரு தேங்காய் இவைகள் வாண்டுகளுக்கு ஒரு களிப்பை உண்டாக்கும். விழும் தேங்காய்களை கைப்பற்ற ஒரு பெரிய கலாட்டாவே நடக்கும். இவ்வாறு நடக்கும் கலாட்டாவில் பெற்ற சில வெற்றிகள் எனக்கு, "தேங்காய்" என்ற ஓர் சிறப்பு பட்டத்தை (!) எனது வீட்டாரிடம் பெற்று தந்தது.

பாலாமாமியின் வார்த்தைகள் சிறிது நாட்களில் வேலை செய்யும். நாரால் (என்ன நார்?) ஆன ஒரு V-பெல்-டை தோளில் எடுத்துக்கொண்டு, இடுப்பில் ஒரு அரிவாளை செருகி, திறந்த மேலுடம்புடன் அவர் வருவார். அதாங்க நம்ம தென்ன மரத்துக்காரர். எப்பயாவது விழும் தென்னை மட்டைக்கே குதியாட்டம் போடும் நாங்க, அவரக் கண்டதும் பயங்கர ஜாலி ஆயிடுவோம். ஆனா வழக்கம் போல பெரியவங்க பிரச்சனை. "வீட்டை விட்டு வெளியே வராதீங்க! அவன் போனப்புறமா வந்து விளையாடலாம்".
(தென்னை மரத்துக்காரர் - தொடரும்)

Wednesday, February 18, 2004

கல்லுக்குள் ஈரம்

ஐந்து நாரைகள்....
புற்களின் மேல் குட்டி குட்டி
வெண் மேகங்களாய்.......
உள்ளங்கைகளின் செந்நிறத்தில்
அதன் அலகுகள் மின்ன....
ஒடிந்து விடுமோ அதன் கால்கள்
என அஞ்ச வைத்து
ஒய்யாரமாய் அது நகர்வதென்ன...
வட்ட விழி கிட்டே பார்த்து
வான் வழி அவை பறக்க,
சுட்டதென்னவோ அவந்தான்.
ஆனாலும் மகிழ்ச்சி அவனுள்
நம்மால் நான்கு தப்பியதே......

-பாரி

Friday, February 13, 2004

என் வேதனைக் கால குறிப்புகள்...

என் நண்பா!!
நமக்கு மிகுந்த துக்கம்
தரக்கூடிய
ஓர் செய்தியை அறிவிக்கிறேன்.
தெளிவோடும்,
முரட்டு தைரியத்தோடும்.

"நம்மால் இனி அன்றைய
+2 மாணாக்கர்களாய்
மாறவே இயலாது".


அறிவின் தெளிவை நோக்கி
உள்ளொளியுடன் எரியும் சக்தியுடன்
வானத்தின் கீழ் அனைத்தும்
புதிதாய் புத்துணர்ச்சியாய்
இருந்தகாலம் இனி
இறந்த காலம்....

புகுத்தப்பட்ட கல்வியால்,
அறிந்த மற்றவைகளால்,
இது இப்படித்தான் என
பாழாய்ப்போன பயனற்ற "அறிவு"
நமக்கு உறுத்தி....
புதிர் காணும் சக்தியென்னும்
ஆக்கையை தொலைவில் நிறுத்தி
நம்மை அண்டத்தின்
அணைப்பில் அண்டவிடாமல்......

அறிவே நீயும் அழிவுதான்.......

-பாரி

Saturday, February 07, 2004

பிளாட் ஃபாரம்

"அங்கனே பாரு புள்ள....
மெயின் ரோட்டுக்கு மத்தியில...
வரிசையா நட்ட மரம் அழகு தாம்லே?"
அப்பா சொல்ல
அதை பார்த்தாள் அச்சிறுமி.
"அட..இதா...ரோட்ல இறங்காத புள்ள..
பிளாட்ஃபாரம்லயே நட..."
"அதெனங்கையா பிளாட்ஃபாரம்?"
"நாம நடக்குதோம் இல்ல? அத்யான்"
"மக்கா... நடக்க என்னாமா
கட்டிருக்காக! பட்டணம்னா சும்மாவா?"
அடிச்ச மழையில் பிஞ்ச கூரை
ஒதுக்கியிருந்தது வேறு சிலரை
பிளாட்ஃபார பாலித்தீன் கூடாரத்தில்.
அதையும் கண்டாள் அச்சிறுமி!
அகலமான கண்கள் மேலும் அகல கேட்டாள்
"அய்யா! இவுகளை யாரு இங்கே நட்டது?"

-பாரி