Thursday, December 11, 2003

நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்: 3 (தாயம்மா.........தொடர்ச்சி.....

தாயம்மாவிற்கு இரண்டு மகள்கள், கடைசியில் ஒரு மகன். முன்பு கூறிய, என்னோடொத்த பேரன்கள் இருவரும் மூத்த மகளின் புதல்வர்கள்.
தாயம்மாவிற்கு அந்த காம்பௌண்ட் ஒரு நிரந்தரமான நிலை என்று அவரும், அவரது பந்தங்களும் நம்பியதாக இன்று நான் நினைக்கிறேன். அவரது பணி காலை பகலவன் வரும் முன் தொடங்கும். வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து விடுதல்தான் அவரது முதல் வேலை. அதன் பின் ஒரு எட்டு மணிக்கு, பாத்திரம் தேய்பதற்கு வருவார். அப்போது அவருக்கு ஒரு டோஸ் காப்பி/டீ கிடைக்கும். பின்பு பெரிய அய்யங்கார் மாமி அவரை "வானொலி" வாங்க அனுப்புவார். மதியம் ரேசன் கடைக்கு சென்று எவர் வீட்டுக்கெனும் வேண்டிய பொருட்களை வாங்கி வருவார். மாலை நேரம் மீண்டும் ஒரு முறை அனைத்து கூட்டி பெருக்க வேண்டிய இடங்களை தூய்மை செய்து விட்டு தன் வீட்டிற்கு செல்வார்.
அவருக்கே உரித்தான சில பிரச்சனைகள் இருந்தன. பல வீடுகளில் தரும் உணவை அவர் உண்டுவிட்டு மீதியை, தனது தொட்டியின் அருகே ஒரு அலுமினியத் தூக்கில் இட்டு வீட்டிற்கு எடுத்து செல்ல வைத்திருப்பார். அதை சரியாக மூடாமலோ, அல்லது நன்கு வெளியே தெரியும்படியோ வைத்துவிட்டால், காக்கைகளும் அந்த உணவுக்கு போட்டியாக வந்து விடும். அந்த உயிர் போராட்டத்தில் பங்கு கொள்ள சில வேளைகளில் பூனைகளும் வரும்.
சில மாலை பொழுதுகளில் அவரது இரண்டாம் பெண் அங்கு வருவதுண்டு, ஏதேனும் சிக்கல்களோடு. சமூக மற்றும் பொருளாதார நிலையில் தாழ்ந்து, தனது நேர்மை, மற்றும் உடலுழைப்பை மட்டும் சார்ந்து வாழும் அவருக்கு வாழ்க்கை அச்ச மூட்டுவதாக அமைந்து விட்டதில் வருத்தங்களே எஞ்சி இருந்தது. அந்நிலையில் அவரது மகளுக்கான தேவையை நிறைவேற்றுவதில், தனக்கு உண்டான தோல்வியை கோபமாக சத்தம்போட்டு மகளை திட்டித்தீர்ப்பதில் வெளிப்படுத்துவார். மகளின் திருமணமோ, திருமணம் ஆகி சில வருடங்களில் மகளின் கணவன் இறந்ததோ, இரண்டு மூன்று நாள் பணி விடுப்பு என்று மட்டுமே உணர வேண்டியதாகியது தாயம்மாவிற்கு, சில கண்ணீர் துளிகளுடன்.
அதற்கு பின் இரண்டு - மூன்று வருடங்கள் கழித்து, என் அம்மாவிடம் கூறியது "என் பொண்ணு இப்போ நல்லா இருக்குங்க. இரும்படிச்சு அடுப்பு செஞ்சு விக்கும் கடை வைச்சிருக்கிர ஒரு ஆளு வீட்டுக்கு வந்து போகுதுன்னு எனக்கு படுது. அந்தாள பத்தியும் மோசமான வார்த்தை இல்ல" என்று கூறிவிட்டு, "நான் என்னம்மா செய்யறது? அதுஅதுக நல்லா இருந்த சரி" என்று கூறி மூக்கை சிந்தியவாறே மற்றும் ஒரு நாளை ஆரம்பித்தார். (தாயம்மா- முற்றும்)

No comments: