Friday, December 26, 2003

நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்: 4(பேப்பர்....பேப்பரேய்ய்ய்)


வியாபார ரீதியாக நம்மை அணுகும் மனிதர்களில் சிலர் தங்களை அறியாமலே, சுற்று சூழல் அறிவியலின் ஒரு கூறாக உள்ள "மீள்சுழற்சி" என்ற செயல்முறைக்கு உதவியாக உள்ளனர். இதை தவிர, பல சொல் வழக்குகளிலும், நாடகம் மற்றும் திரைப்படங்களிலும் நகைச்சுவைக்கு வாய்ப்பு தந்துள்ளனர் (எ. கா: கரகாட்டக்காரன் படத்துல, கவுண்டமணி ஒரு அரத பழசான "காரை" ஓட்டிட்டு வருவாரு. அப்போ அந்த பக்கம் வந்த நம்ம ஆளு அந்த "காரை" பார்த்து உரக்க சொல்வாரு "ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம் பழம்"ந்னுட்டு. அதை தொடர்ந்து வரும் வசனங்கள்ல ஒரு நல்ல சிரிப்பு இருக்கு (அது அப்புறம்)). பண்டைய கால வியாபார முறைகளை தற்காலத்திலும் கைக்கொண்டு இருக்கும் கடைசிக் கண்ணிகள் இவர்கள். பணம் கொடுத்து பொருள் வாங்கிப் பழகிய நமக்கு, பொருள் வாங்கி பணம்/பண்டம் கொடுப்பவர்கள். நம்மிடையே இருக்கும் அத்தகைய நபர்களில் எனக்கு தெரிந்த சிலரை உங்களுக்கும் அறிமுகம் செய்கிறேன்.
துரு ஏறிப்போன சக்கரங்கள் கொண்ட ஒரு மிதி வண்டியில், மதியம் மங்கி மாலை தோன்றும் பொழுதில் "பேப்ப்ரு........... பேப்ரேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்"ந்னு அவர் சத்தம் கொடுத்துட்டு வருவார். அந்த சைக்கிள் காரியர்ல ஒரு மரப் பெட்டி இருக்கும். அத ஒரு "சைக்கிள் ட்யூப்"நால இழுத்து, சைக்கிள் காரியரோட கட்டி இருப்பார். அதுக்குள்ள என்ன இருக்கும் என்பது எட்டிப் பார்த்தாலும் தெரியாத ஒரு மர்மமே!. சைக்கிள் பாரோட இரண்டு பக்கத்திலேயும் கோணிச்சாக்குகள் தொங்கும். எங்க காம்பௌண்ட்-க்குள் அவர் வருவது வாண்டுகளான எங்களுக்கு வேடிக்கையாக இருக்கும் என்றால், எனது அப்பாவிற்கும்-பெரியப்பாவிற்கும் பிதுரார்ஜித சொத்து பறி போகிற பயம் வந்து தொற்றிக் கொள்ளும். எங்கள் வீட்டில் இருக்கும் பயன் தராத பொருட்களை களைய முயலும் எனது பெரியம்மாவிற்கு அவரது வரவு ஒரு வடிகாலாக அமையும். கூவுவதற்கு தான் "பேப்பர்". மற்றபடி அவர் பழைய உடைந்து போன பிளாஸ்டிக் பக்கெட்கள், கண்ணாடி சீசாக்கள், பழைய தகரங்கள் இவைகளையும் தக்க பொருள் தந்து ஆர்ஜிதம் செய்துகொள்வார்.
இவரைத் தவிர, சீனிக் கிழங்கு, உப்பு, புதிய பிளாஸ்டிக் பொருள் போன்றனவற்றை பண்ட மாற்றாக கொடுத்து பழைய பொருட்கள் வாங்கிச் செல்லும் நபர்களும் எங்கள் காம்பௌண்டிற்கு வந்து செல்வார்கள்.

No comments: