Saturday, November 29, 2003

நம்மிடையே இருக்கும் நம்மவர்கள் : 2 ( குடுகுடுப்பாண்டி......)

இந்த நபர் வந்து விட்டால், வாண்டுகளின் சர்வ நாடிகளும் ஒடுங்கி விடும். எங்க காம்பௌண்ட்-ல் இருக்கும் அனைத்து "மல்ட்டிப்பிள்" வால்களும் சுருண்டு அடங்கி விடும். இந்த நபரை பற்றிய எங்களுக்கான அறிமுகம்தான் இதன் காரணம்.
பாலாமாமி சொல்வார் "குட்டிகளா! அவன் உங்கள காணப்படாது கேட்டேளா?" என்று கூறி பின்னர் மிரட்டும் மற்றும் எச்சரிக்கும் குரலில் "அவன் உங்களை பார்த்தாலோ, அப்படியே வீபூதி போட்டு மயானத்துக்கு கூட்டிண்டு போய்டுவன்"என்பார். எங்களில் பலருக்கு மயானம் என்றால் அம்புலிமாமா-வின் விக்ரமாதித்யன் கதையில் வரும் வேதாளத்தின் இருப்பிடம் கண் முன் வந்து மிரண்டு கிடக்கும் எங்களை மேலும் மிரளச்செய்யும்.
இது போதாது என்று எங்கள் வீடுகளில் இருக்கும் அக்காக்களும், அண்ணண்களும், தங்களது சிறுவயதில் எப்படியெல்லாம் அவரின் (குடுகுடுப்பாண்டி) வசியத்தில் இருந்து தப்பியதாக கூறி அவர்களது சாதனைகளை பட்டியலிடுவார்கள். அதிலும், குறிப்பா பாக்கியாக்கா கூறிய சம்பவம் எப்பொழுதும் எனக்கு கனவாக வந்து நுரை தள்ள வைக்கும். அவங்க சொன்னாங்க "நான் அன்னிக்கு உடம்புக்கு முடியாம ஸ்கூலுக்கு போகல. பத்து மணிக்கு தண்ணி பைப் பக்கத்துல நிக்கும் போது அவன் வந்துட்டன். கையும் ஒடல, காலும் ஒடல. நான் ஆம்முக்கு வேகமா ஓட பாக்கிறேன். என்னால ஓட முடியலயாக்கும். (102 டிகிரி காய்ச்சல எப்படி ஓட முடியும்?). அப்போ என்ன அவன் கூப்பிட்டு "பாப்பா! இந்தா விபூதி"ன்னான்"!!. எனக்கு மயக்கம் வர்ர மாதிரி ஆகி, அம்மான்னு கத்திண்டே கிழே விழுந்தேன். அப்போ பார்த்து அம்மை அங்கே வந்தாள். இல்லேன்னாக்கா, இன்னிக்கு நான் உனக்கு கதை சொல்ல இங்க இல்லையாக்கும்", என்று முடித்தாள் மாபெரும் மர்மத்தோடு.
பிற்காலத்தில், குடுகுடுப்பை காரர்களின் வாழ்க்கை முறை அறிந்து, அவர்களின் நாடாறு, காடாறு மாத திரிதல்களில் வியந்து, அவர்களது கடவுளான ஜக்கம்மா-வின் மகிமை(?), கட்ட பொம்முவின் வம்சம் தாங்கள் என்பனவைகளை கூறக் கேட்டாலும், எங்களது அறியா வயதின் அந்த புரியா மர்மம் இப்பொழுதும் எங்களை சிலிர்க்க வைக்கும்.

No comments: