Wednesday, June 23, 2004

நிழல் கூத்து: மலையாளம் -கலர்- பாட்டு பைட்டு- கிடையாது!! - 2

இத்திரைப் படம் "அண்ணாச்சியின்" குற்ற உணர்வை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது என புரிந்து கொள்கின்றேன். முந்தைய பதிவில் கூறியபடி, எப்பொழுதும் அவர் முகத்தில் தனது பணி நிமித்த சோகம் இழையாக ஓடும்.

இப்படம் பல மனித உணர்வுகளை சிக்கல் இல்லாமல் காட்டுகின்றது.
"அண்ணாச்சியின்" கடைக்குட்டி மல்லிகா பருவம் அடைவது, அதற்கான விழா எடுப்பது, அவ்விழா முடிவில், மூத்த மகளின் கணவன் சொல்லிக் கொண்டு செல்லும் போது, மல்லிகாவை ஒரு கணம் பார்ப்பது, அந்த நிகழ்வை மல்லிகாவின் பெற்றோர் கவனித்து விடுவது இவை அனைத்தும் ஓர் சரம் போல் தொடுக்கப்பட்டுள்ளது.

அண்ணாச்சியின் மகன், சுதந்திரத்திற்காக பாடுபடுவதை ஓரிரு வசனங்கள் மூலமும், ராட்டையில் நூல் நூற்பதன் மூலமும் காட்டுகின்றார் இயக்குநர். அண்ணாச்சியின் மகன், தூக்கிலிடுவதை எதிர்த்து நாகர்கோவிலில் பிரச்சாரம் செய்வதையும் கள்ளுக்கடை காரர் மூலம் காட்டுகின்றார்.

அண்ணாச்சியிடம் நிறைய நோயாளிகள் வருவதை அறிந்து, மூத்த மகள் நிலம் வாங்க பணம் கேட்டு வருவதும், அது தொடர்பான வசனங்களும், அவள் மீது அண்ணாச்சியின் பரிவை காட்டுகின்றது.

அண்ணாச்சியின் உடல் நலம் குன்றி, அவரால் "ஆரச்சார்" தொழிலை தொடர முயலாத நிலையில், திருவாங்கூர் சமஸ்தானத்திலிருந்து வரும் டவாலி, அவரது மகனை உதவிக்கு வைத்து கொள்ளுமாறு பணிக்கிறார். தந்தையின் உடல் நலம் கருதி தானும் அவருடன் செல்கிறார் மகன், கொள்கையை சற்றே ஓரமாக வைத்துவிட்டு.

அங்கு சென்ற பின், தூக்கின் திறனை சோதித்து, ஓர் வீட்டில் உட்காருகின்றனர். தூக்கிலிடுபவர், அன்றைய இரவு உறங்காமல் இருக்க வேண்டும். அதற்காக, அங்கு அவருடன் இருக்கும் மூன்று காவலர்கள் அவருக்கு கதை சொல்ல முயல்கின்றனர். முதலில் ஒருவர், அவருக்கு நந்தனார் கதையை கூறுகின்றார். பின்பு மற்றொருவர், அரிச்சந்திரன் கதையை கூற முற்படும் போது, அக்கதையில் நாட்டம் இன்றி தூக்கம் வருவதாக கூறுகின்றார் அண்ணாச்சி. உடனே, மூன்றாவது நபர் சுவாரசியமான ஓர் கதையை கூறுகின்றார்.

அந்தக் கதை:
ஓர் சிறுமி. 13 வயது. ஆடு மேய்க்க செல்லும் போது புல்லாங்குழல் வாசிப்பவனிடம் பழக்கம் ஏற்படுகின்றது.
அவள் தனது காதலனின் புல்லாங்குழலின் இசையில் மயங்குகிறாள். ஒரு நாள், அவனிடம் அவள் புல்லாங்குழல் வாசிக்க கற்று தரும் படி கேட்க, அவனும் கற்று தருகின்றான். அவள் ஆடு மேய்த்து கொண்டே அவனது புல்லாங்குழலை வாசிக்கின்றாள். அச்சிறுமியின் அக்காள் கணவன், அப்போது அங்கு வந்து அச்சிறுமியை கெடுத்து கொன்று விடுகின்றான். ஆனால், அச்சமயம் அங்கு வரும் அவள் காதலன் மீது பழியாகி தூக்கு தண்டனை பெறுகின்றான்.

இக்கதை அண்ணாச்சியின் மனக் கண்ணில் எவ்வாறு விரிகின்றது என்பது இப்படத்தின் திருப்பம், முடிவு. அவர் அச்சிறுமியை மல்லிகாவாக எண்ணிக்கொள்கின்றார். தனது மாப்பிள்ளையை அவளது அக்காவின் கணவனாக பாவித்து அதனால் அவர் மிக துயருற்று, கதையை நிறுத்தும் படி சொல்கின்றார். அப்போது, கதையாளி, "அண்ணாச்சி, எப்படி கதைய நிறுத்தறது? நீங்க தூக்கில போடப்போவது அந்தப் பையனதான" என்கின்றார். அதற்கு அவர் "நான் மாட்டேன், நான் மாட்டேன்" என்றபடியே சரிகின்றார். மாரடைப்பால் இறந்து விடுகின்றார். இச்சம்பவம் மூலம் இயக்குநர், பார்வையாளர்களின் எண்ணத்தை கவ்வுகின்றார்.

இச்சூழ்நிலையில், தண்டனையை நிறைவேற்ற சட்ட சிக்கல் வந்து விடுகின்றது. அப்போது அவரது மகன் பற்றிய எண்ணம் அவர்களுக்கு வருகின்றது. அவனை அப்பணி செய்ய அழைத்து செல்கின்றனர். கடைசிக் காட்சி நிழலாக காண்பிக்க படுகின்றது.

இப்போது பார்வையாளர் மனதில் ஓர் பாரம்.

இப்படத்தின் இசை இளையராஜா. படத்தில் பல இடங்களில் அவரது மேன்மை தெரிகின்றது. இசையே இல்லாத இடங்களிலும், படத்தினுள் இருக்கும் அக் குட்டிக் கதை துவங்கும் போதும், புல்லாங்குழல் இசையிலும் நம்மை கவர்ந்து விடுகின்றார். சில இடங்களில் அவரது இசை ஓர் அமானுஷ்ய தன்மையை கொடுக்கின்றது. இவரும் படத்தின் முதுகெலும்பு.

நன்றாக இருந்தது இப்படத்தின் ஒளிப்பதிவு. காடுகளும், தாமரைக் குளங்களும், மலைகளும், கண்ணுக்கு குளுமை.

சந்தர்ப்பம் கிடைத்தால் ஒருமுறை கட்டாயம் பாருங்கள்.


Tuesday, June 22, 2004

நிழல் கூத்து: மலையாளம் -கலர்- பாட்டு பைட்டு-கிடையாது!! -1

இன்னைக்கு அபிலாஷ் கூப்பிட்டதால் இந்த படத்தை பார்த்தேன். இன்ஸ்டிட்டுயுட் ஜிம்கானாவில் திரையிட்டனர். அடூர் கோபாலகிருஷ்ணன் அவர்களின் படம்.
சுதந்திரத்திற்கு முன்பு நடக்கும் கதை. குற்றவாளியை தூக்கில போடற பணியை செய்யும் ஒருவரை பற்றியும் அவர் குடும்பத்தை பற்றியும் சொல்றாங்க.

திருவாங்கூர் சமஸ்தானத்தில் குற்றவாளிகளை தண்டிக்க உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை தருவார்கள். இதை நிறைவேற்றும் பணியை செய்பவர் "அரச்சார்" என்றழைக்கப்படுவர். இது பரம்பரையாக வரும் பணி.

இப்படத்தின் நாயகன் சுமார் ஐம்பது-அறுபது வயதான "அண்ணாச்சி" (கொடுவில் உன்னிக்கிருஷ்ணன்). அவருடைய மனைவி, சுகுமாரி. அவர்களுக்கு மூன்று வாரிசுகள். மூத்தவள் திருமணமாகி, எட்டு வயது பெண் குழந்தைக்கு தாய். அவள் கணவன் (முரளி). அடுத்தவன் சுதந்திர போராட்ட வீரன். சத்தியாகிரகி. கடைக்குட்டி, பதிமூன்று வயதான மல்லிகா.

இப்படம், ஒரு கள்ளுக்கடையில் அண்ணாச்சி குடித்துக் கொண்டிருப்பதில் இருந்து துவங்கும். தான் தூக்கிலிட்ட ஒரு நபர் குற்றவாளி இல்லை என்று தெரிந்தும் தூக்கிலிட்ட வருத்தத்தை குடித்துவிட்டு புலம்புவார்.

கதையின் ஓர் முக்கிய அம்சம் சமஸ்தானத்தில் நடக்கும் ஓர் பழக்கம். தூக்கிலிடுவதற்கான கயிறை சிறையில் கைதிகள் தயாரிப்பர். அக்கயிற்றுக்கான நோக்கம் நிறைவேறியவுடன், அண்ணாச்சி அதை தன் வீட்டின் பூசை அறையில் வைப்பார். அக்கயிற்றை பஸ்பம் செய்து நோய் கண்டவர்களுக்கு வீபூதியாக கொடுப்பார். அதனால் நோய் தீர்ந்துவிடும் என்று நம்பி பலர் அவரிடம் வருவார்கள். (ஒருகட்டத்தில், நீண்ட நாட்களுக்கு தூக்கில் யாரையும் போடாததால், அண்ணாச்சியின் பவர் குறைந்து விட்டது என்று ஊர்மக்கள் பேசுவர்:-)).

தூக்கிலிடும் பணியை மேற்கொள்ளும் அவருக்கு சொல்லொண்ணா சோகம். தனக்கு தெரியாத ஒருவன் எப்படி தன் எதிரியாக முடியும்?. அவனைக் கொல்கின்றோமே என்ற எண்ணம் அவர் முகத்தில் எப்பொழுதும் தெரியும். தனக்கு உடம்பு சரியில்லை என்றெல்லாம் சொல்வார். ஆனாலும் அவரை அழைத்து சென்றுவிடுவர். தீவிர காளி பக்தர். தன் குற்ற உணர்வை குறைக்க, தன் மீது காளி வந்து இக்காரியம் செய்கின்றாள் என நினைத்து கொள்வார்.

-தொடரும்

Thursday, June 17, 2004

வன்முறை

இந்த பதிவிற்கு திரு. JR அவர்களின் கவிதைதான் காரணம்( அவர் வலைப்பூ ஆசிரியராக இருந்தபோது இட்டது ).
எனது உள்ளில் இருக்கும் மூர்க்கம் சார்ந்த வன்முறையை வெளிக்கொணர அவர் தூண்டுகோலாகிவிட்டார்.

நான் சிறுவயதில் இருந்து செய்த, எனக்கு நினைவில் இருக்கும், வன்முறை என நான் கருதிய செயல்களை பகிர்ந்து கொள்கின்றேன்.

UKG படிக்கும் சமயம் என் அம்மாவிடம் அடி வாங்கிய போது நடந்தது....
நான் அழுதபடி எங்கள் வீட்டில் இருந்த பலகையில் (சின்ன பலகை) உட்கார்ந்து கொண்டிருந்தேன். செய்த தவறை நான் உணர வேண்டும் என்பதற்காக சினஞ் சொற்கள் கூறிக் கொண்டிருந்தார் என் அம்மா. அது என் கோபத்தை வலுப்படுத்தியது. அவரை எதிர்க்க நான் அப்பொழுது கூறியது," போடி...".

இரண்டாவது வகுப்பு படிக்கும் போது என் நண்பன் முருகானந்தத்திடம் சண்டை இட்டேன். அப்பொழுது எழுந்த வன்சீறலில், என் கைகளின் நகங்களை வைத்து அவன் தொடையை கிள்ளி விட்டேன், இரத்தம் கசியும் அளவிற்க்கு. அவன் தனது போலீஸ் அண்ணனண அழைத்து வருதாக மிரட்டி, என்னை இரு தினங்கள் மிரள வைத்தான்.

எனது தங்கையை நான் கடித்து விட்டதால் பல் பதிந்து இரத்தம் வந்து, அந்த வடு இன்றும் இருக்கின்றது. அவள் கைகளில் மட்டும் அல்ல, எனது நெஞ்சிலும்.

ஐந்தாவது படிக்கும் போது பள்ளிவிட்டு செல்லும்போது ஓர் சண்டையை வைத்து, சக்திவேலும் நானும் மோதினோம். திட்டமிட்ட ஒரு ஒற்றைகொற்றை சண்டை.

தொட்டு விளையாட்டின் போது, எனது தங்கை என்னை முந்திய தருணத்தில் அவளது பொட்டு சிதறி விழ, அதை வன்மத்துடன் எடுத்து பிய்த்து போட்டேன். பாவம் அவள் தப்பினாள்.

ஏழாவது படிக்கும்போது, துடுக்கான முதல் வீட்டுப் பையனின் பட்ட பெயரை அவனது வீட்டின் முன் எழுதி அவனை தாழ செய்தேன்.

என்னை விட வயதில் மூத்த என் ஒன்றுவிட்ட அண்ணனை, குரூரமாக வார்த்தைகளால் தாக்கியது.

இன்னும் பலப்பல உள்ளன....

என் செய்வது, இதை அறிய முயலும் போதும் வேறொரு தவறை செய்து விடுகின்றேன்.

குற்ற உணர்வின் காரணமாக இப்பதிவு எழுத்ப்படவில்லை என்பதையும் வரிகளுக்கு இடையே படியுங்கள்.

Thursday, June 03, 2004

பௌர்ணமி !!

(சூழலுக்கும் எனக்கும் ஒரு மௌனமான உரையாடல்)

சூழல்: ஒரு மெல்லிசான மேகப் படலத்துக்கு பின்னால பளீர்னு நிலா ஒளி வீசிட்டு இருக்கு.
அத சுத்தி ஒரு பளீர் சாம்பல் நிறத்தில இருந்து துவங்கி விளிம்புல கரும் சாம்பல் நிறம் கொண்ட வானம் பரந்து இருக்கு.

நான்: என்ன ஒரு அற்புதம். நிலவொளி பாயுது, வெளியில் மட்டுமல்ல என்னுளும். என்னை அப்படியே இழுத்து மயக்குது. இந்த இனிமை சொர்க்கம்.

சூழல்: நிலா கிழக்கில எழுந்து மேலெ போய்ட்டு இருக்கு. மேற்கு திசைல இருந்து குளிர் காத்து அடிக்குது. சுத்தி இருக்கிற எல்லா இடத்துலேயும் அதோட வெளிச்சம்.

நான்: வெண்ணிலா தக்க தருணத்தில் தனது அழகை முழுமையா காட்ட தயங்குவது இல்லை. தனது முக வடுக்களை கூட முழுதாய்தான் காண்பிக்கின்றது. அப்பொழுது கூட அதன் ஒளி குறைவதில்லை. சரியாக சொன்னால் அப்பொழுதுதான் அது மிக அழகாகவும், பூரிப்பாகவும் உள்ளது.

சூழல்: நகரத்தின் ஒளியும் அங்கே, இங்கே தென்படுது. சோடியம் ஒளி விளக்குனால ஒரு செம்மஞ்சள் ஒளி தூரத்துல இருக்கு. மரங்கள் ரொம்ப கருப்பா இருக்கு.

நான்: "காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன் உனக்கே உயிரானேன், எந்நாளும் எனை நீ மறவாதே...

சூழல்: இந்த மாதிரிதான் நேத்தும் நான் இருந்தேன். மேகம் கோட்டையெல்லாம் கூட கட்டி இருந்தது. ஆனா இன்னிக்கு ரொம்பச் சின்ன ஒரு கோட்டை நிலாவ சுத்தி.

நான்: நிலவை சுற்றி அந்த வட்டமான கசிந்து இருக்கின்ற ஒளி போதி மரத்தையும் புத்தரையும் மனக்கண்ணில் கொண்டு வருகின்றது. இந்த எல்லையற்ற பெருவெளியில் தொலைந்து போகவேண்டும் என் அடையாளங்கள். நானும். காலத்தில் கரைந்து காற்றிலே மிதந்து செல்லும் ஓர் படிமமாகவாவது நான் உணர வேண்டும்.

சூழல்: அந்த வட்டம் சில நிறங்கள காட்டுது...

நான்: வர்ண ஜாலங்கள்....இத துரத்திட்டு போற செயல்.. அந்த ஆக்க சக்தி நான் வேண்டி நிற்கின்றேன். என் எல்லைகள் எனக்கு அரண்கள். உடைக்க முடியாமல், தவிர்க்கவும் முடியாமல் தத்தளிகின்றேன்

சூழல்: நிலா இன்னும் கொஞ்சம் மேலே போய்கிட்டிருக்கு. வெளிச்சம் எல்லா இடத்திலேயும் இருக்கு. இப்பவும் மேற்குல இருந்து குளிர் காத்து வீசுது. சின்னதா ஒரு கோட்டை இப்பவும் இருக்கு சில நிறங்களோட.




Tuesday, June 01, 2004

ஒரு சிறுகதை..

இந்த கதை தினமனி கதிரில் வெளியாகியுள்ளது. கதையின் கரு ஒரு ஆழமான விஷயத்தை எடுத்துரைகின்றது. நம்பிக்கை ஊட்டும் விதத்திலும் அமைந்துள்ளது. படித்து பார்த்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


அன்புடன்
பாரி

Sunday, May 30, 2004

குடி நீர் திட்டம்!!

கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தை நடுவண் அரசு செயல் படுத்த போவதாகவும், அது முதலில் தமிழ் நாட்டில் துவக்கப்படும் என்ற செய்தி விகடன் தளத்தில் வந்துள்ளது.
மற்ற விவரங்கள் அறிந்தவர் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்
பாலாஜி-பாரி

Wednesday, May 12, 2004

தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி

As I could not find a place which hosts 38 MB file, this post remains incomplete. I regret it.
(This post is corrected and republished with above info on 20May04 at 2:45 AM IST)



தமிழ் புத்தாண்டு தினத்தன்று ஹோஸூரில் ஒரு விழா நடந்தது. அவ்விழாவை தமிழ் வளர்ச்சி மன்றம் நடத்தியது.அவ்விழாவில் ஒரு பட்டிமன்றமும், திரு. புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி அவர்களின் பாட்டுக் கச்சேரியும் நடந்தது.
நண்பர் திரு. ராஜா அவர்களின் அன்பான அழைப்பினால் இந்நிகழ்ச்சியை நாங்கள் (தங்கமணி,யென்ஸ்,பாலாஜி) கண்டுகளிக்கச் சென்றோம். இந்த விழியத்தை நம் அனைவருக்கும் பதிவு செய்து வழங்கியது திரு. யென்ஸ். அவர் ஜெர்மனியை சேர்ந்தவர். இங்கு பின்முனைவராக () பணியாற்ற வந்துள்ளார். அவருக்கு இசையில் ஈடுபாடு அதிகம். அன்றைய நிகழ்ச்சியை அவர் வெகுவாக ரசித்தார். இதை இங்கு இட ஆலோசனைகள் வழங்கிய நண்பர் ரமணீதரன், சத்தியராஜ்குமார்,சுந்தர் ஆகியோருக்கு நன்றிகள். நண்பர் ஸ்ரீகாந்த் தேவையான ஜாவா ஸ்கிரிப்ட் தயார் செய்து கொடுத்தமைக்கு அவருக்கு உங்கள் சார்பில் ஒரு பெரிய "ஓ".


அன்புடன்
பாரி

Tuesday, May 11, 2004

பயணம்

முகமறியா பலர் அமைத்த பாதை.

ஒவ்வொரு அடியாக அறிந்து
முடிவு காண முயலும் முயற்சி.

புதிரென்ற பேரனுபவம் நிறைந்த
கள் மொந்தையாய்,
ஓர் நெடிய பயணம்....

இருமருங்கிலும் கருவேல மரங்கள்.
அவ்வப்போது பழம் தரும் தருக்கள்.
தோழர்களாய் நிழல் கொடுக்கும்,
வானளாவி நிற்கும்
அக புற பிரமாண்டமாய் விருட்சங்கள்.

சிட்டு குருவியாய்
பசுங் கிளிகளாய்
கான குயில்களாய்
அழகு மயில்களாய்
இருட்டு கோட்டான்களாய்
கற்ற, கற்பிக்கப்பட்ட செய்திகள்.
ஆனாலும் பாதையிலேதான் பயணம்...

கணந்தோறும் புதிய வியப்புகள் தோன்றும்.
வியந்த குழந்தையாய்
கண்கள் மலரும்.
காட்சி மிக களிப்பூட்டும்
மஞ்சள் மந்தாரையாய்,
சிகப்பு செம்பருத்தியாய்,
வெண் சங்கு மலராய்,.
அவ்வழி பயணத்தில்.

சோலைகளாய் வரும் அந்த
மன மயக்கம்...
பாதைகள் கண் மயங்க
புதர் முட்கள் பாதம் தைக்கும்.
மனம் விழித்து
கண் திறக்க மீண்டும்
அதே பாதையிலேதான் பயணம்.

வாழ்க்கை
மேலும் கீழும் கோடுகளை இட்டு
தருணங்களை ஓவியமாக்கி
காலத்துடன் கலந்து
தொடர் பிம்பங்களாய்
தோற்றுவித்த அப்பாதையிலே
கனம் இல்லாமல்
காற்றைப் போல்
நீங்களும், நானும், சில மழைத் துளிகளும்.



அன்புடன்
-பாரி

Monday, May 10, 2004

நண்பர் சித்ரன்

இன்று நண்பர் சித்ரனின் வலைப்பக்கத்தை காண நேர்ந்தது. மரத்தடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதற் பரிசை வென்றவர். கல்கியில் பல நல்ல கதைகள் உள்ளார். அவரது வரவு நம் அனைவருக்கும் உற்சாகத்தை கொடுக்கும் என நம்புகிறேன்.
அன்புடன்
பாலாஜி-பாரி

Sunday, May 09, 2004

uthavi! uthavi!!

ஒரு மூவி க்ளிப்பிங்க் இருக்கு!! அதை எப்படி இடுவது என்பதை யாரேனும் கூற இயலுமா??

இன்னொன்னு....




இந்த புலி பதிவு முடிச்சுட்டு ரூம்முக்கு போனா, நண்பன் பாபு, "மால்குடிக்கு ஒரு புலி"(ஆங்கிலம்) ங்கிற புத்தகம் வைத்திருந்தான். ஒரே புலிகள் மயமா இருக்கேன்னு நினைச்சேன். அப்போ "இந்த ஒரு படம் மட்டும் சரிப்படாது. இன்னொன்னு போடுன்னு" புலி சொல்றாப்ல இருந்துச்சா. இன்னொரு படமும் புகைப்படமும் போட்டாச்சு.

பாலாஜி-பாரி

Saturday, May 08, 2004

புலி பாருங்கோ! புலி பாருங்கோ!!


புலி பாருங்கோ!! புலி பாருங்கோ!!!
பெங்களூரு புலி பாருங்கோ!!!!
'புலி' ந்னு சொன்னா பயப்படாதீங்கோ!!
தேசியம் சம்பந்தப் பட்டதுங்கோ!!!
அதாவது இந்திய தேசிய விலங்குங்கோவ் :) !!!
(நாங்கள் வன உலா சென்ற போது, இந்த புலியை நண்பர் 'யென்ஸ்' படம் பிடித்தார்!!)

"என் ஜாய் மாடி!!"
-பாரி

Tuesday, May 04, 2004

துருவலாய் மழை பொழியும் ஓர் காலை நேரத்தில்.....

முன்னிரவில் ஓய்வின்றி பொழிந்த மழை
மந்தமான வெளிச்சத்தை
பாரிலே பரப்பிவிட்டு
தன் ஓய்வை அறிவிக்க முயல்கிறது!!
நீர்க்குச்சிகள் துருவலாய் மாறி
தான் உதிர்த்த பல வண்ண மலர்களின் இதழ்களுக்கு
இதமாக இதழ் கொடுக்கின்றது!!
மந்தகாசம் மனதை நிறைத்த காலை
சிறு சோம்பலுடன் அலுவலகம் அடைந்து
இருக்கையின் பின்னிருக்கும்
ஜன்னலை திறந்தேன்.
மழைத் துருவலில் சிலிர்த்து
கம்பிகள் ஊடே அறையில் நுழைந்து சிலிர்க்கச் செய்தது
நட்சத்திரங்கள் கொண்ட பெயர் தெரியா அச்சிகப்பு மலர்!!


அன்புடன்
பாரி

Thursday, April 29, 2004

மார்ச் வரிகள்....

அந்த மார்ச் மாத இறுதி நாட்கள், அழகான பல இயற்கை நிகழ்வுகளோடு, நிகழ்வுகளின் மணத்தை நினைவுகளாகவும் பொதித்து கொண்டிருந்தன.

பூக்கள் மட்டுமே நிறைந்த மரங்களுக்கு கீழே இருந்த தேநீர் மேசைக்கு மேல் சந்தோஷங்களாக விரவி கிடந்தன ஊதா நிற மலர்கள். மண்ணில் உதிர்த்த மரத்தின் மேல் அவை கொண்ட பிணக்கு, மேசைக்கு அருகில் உட்கார்ந்து தங்களை நோக்கிய அச்சிறுமியின் புன்னகை கண்டு பூரிப்பாக மாற்றம் கொண்டது. அந்த காட்சி எனக்கு உவகை அளித்தது.

மாலை நேரம். சூரியன் தன்னை ஒளித்துக் கொள்ள இரு மணிதியாலங்கள் இருந்தது. கோடையின் வெப்பம் சற்று தணிய ஆரம்பித்தது. சட்டென்று, விண்ணில் கொண்டல்கள் தோன்றின. எங்கிருந்தோ திசையில்லாமல் குளிர்ந்தக் காற்று வீசியது.

அன்றைய பணியின் நிறைவை நினைத்துக் கொண்டே இருபுறமும் ஓங்கி வளர்ந்த மரங்களுக்கிடையே அந்த சாலையில் நடந்து செல்கின்றேன். சூழலின் குளிர்ச்சி உள்ளத்தை நனைக்கின்றது. என்னை போலவே களிப்புற்று மஞ்சள் பூக்கள் நிறைந்த மரங்கள் அங்கு இங்கும் அசைந்து பூ மாரிப் பொழிந்தன. காதலி தன் கையால் காதலன் முகத்தில் நீரை சிதறச் செய்யும் போது அவன் சிணுங்குவதைப் போல் சிணுங்கச் செய்தன என்னை அம்மலர்கள், என் முகத்தில் படும் போது.

இப்போது எங்கோ இடி முழக்கம். கோடையின் சிறப்பு அதன் மழை. முரணாக இருந்தாலும் அழகுணர்ச்சிக்கு அது அரண். சட்..சட்....பெரிய பெரிய முத்துக்களாய் ஆரம்ப மழைத்துளிகள். கற்பிக்கப்பட்ட மனம் மழையிலிருந்து ஒதுங்க எண்ண, புதிர் காணும் மனம் நீர்க் குச்சிக்கு கீழே நிற்க அழைப்பு வைத்தது. ஏற்றேன். மண் வாசனை என் நினைவுகளை, பல கோடை மழைகளோடு பொருத்திப் பார்க்கின்றது.

நான் அம்மழையில் நடக்க, வசந்தத்தை உலகுக்கு அறிவித்த அந்த மஞ்சள் மலர்கள் தற்காலிக சிற்றோடைகளில் என்னைக் கடந்து சென்றன, புன்சிரிப்புடனே!! இத்தருணத்தில் இயற்கை தன்னை குதூகலமாக வைத்துக்கொண்டதாகப் பட்டது எனக்கு.

மின்னல் கீற்றுக்கள் மேகங்களை பிளக்க, மேகங்கள் உரத்த குரலோடு மழையினை உகுக்க, நிலைமை தீவிரம் அடைந்தது. புள்ளினத்தின் கூடுகள் அதிர மரங்கள் பேயாட்டத்துடன் ஓலம் இடுகின்றது. சூழலில் சற்றே இருள் கவிகின்றது. மரங்களிலிருந்து, சுள்ளிகள் கிளைகளின் மோதல்களில் பாதையில் வீழ்கின்றன. மேலும் பல அடிகள் நடந்தேன். இதற்குள் ஓடையில் நீர் பிரவாகம் அதிகரிக்க புரண்டு ஓடும் பூக்கள் என்னைக் காப்பாற்று எனக் கை நீட்ட, முகத்தில் வேகத்துடன் அறையும் மழை என் கண்களை மூடச் செய்தது. மூடனானேன் - செய்வதறியா.

தலையிலிருந்தும் முகத்திலிருந்தும் நீரை வடித்துவிட்டு பின்பு கண்களை திறக்கும் போது மழையின் வேகம் குறைந்ததாக தோன்றியது. மேகங்களின் அடர்த்தி ஒரு சில இடங்களில் குறைந்து அதனுள் விரவிய கதிரவனின் ஒளி சிதறி, ஒரு புதிய ஒளியைத் தந்தது அச்சூழலுக்கு. இப்போது பாதை ஓரம் ஒதுங்கிய மலர்கள், மீண்டும் என்னுடன் நட்புறவாடியது. அதைக் கண்டு நான் வெட்டகமுற்றாலும், ஆசுவாசமானேன். மழை நின்றது.

பாதையை கடக்க, பாலம் ஏறி இறங்கினால் அங்கு மலரும் காலத்திற்கு முன்பே மலர்ந்துவிட்ட குல்மோகர் பூவின் இதழ்கள் சிவப்புத் தீயாய் சிதறி கிடந்தன. இயற்கை இப்போதும் தன்னை குதூகலமாகவே வைத்துக் கொண்டுள்ளது.

மழையில் நடப்போம். மலர்கள் அப்போதும் நமக்கு ஏதாவது சொல்லும்.
நன்றிகளுடன்
-பாரி



புதுமைப் பெண்கள் - 1 - கோமதி டீச்சர்

கி.பி.1950-களில் பெண்கள் பள்ளிக்கு செல்வது என்பது ஒரு பெரிய புரட்சி. அதுவும் திருமணமான ஒரு சிறுமி பள்ளிக்கு செல்வது என்பது அதிசயம்.
அந்த அதிசயம் நடந்தது 14, தெற்கு ரத வீதியில். மணமாகி பழநிக்கு வந்த பின்னும் படிப்பதில் ஆர்வம் காட்டினாள் அந்த சிறுமி. காலத்தை மீறிய சிந்தனை கொண்ட ஒரு மாமனார் அந்த பொறியை கண்டு கொண்டார். பின்பு அச்சிறுமிக்கு, பள்ளியில் சென்று பயில்வதில் உள்ள அனுகூலங்களையும், உலகத்தை அதன் உண்மையான உருவத்தில் பார்க்கும் வாய்ப்பையும் எடுத்துக் கூறி ஓர் தகப்பனாக மாறி அச்சிறுமியை பள்ளியில் சேர்த்தார். அச்சிறுமி, தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இன்றி சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறாள். அது ஒரு மிகப் பெரிய சகாப்தத்தின் முதல் சம்பவம்.
குடும்ப வாழ்க்கையும் அதனூடே கல்வி பயிலும் வாய்ப்பும் அவரை எவ்வாறு அலைக்கழித்தது?
அந்த கல்வி பயிற்சியினூடே, ஹிந்தி கற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் வருகின்றது. அவர் ஹிந்தி ஆசிரியை ஆகின்றார். பழனியிலிருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள நெய்க்காரப்பட்டி பள்ளியில் அவருக்கு பணி. அவரது கணவர், சிற்றுண்டிகள் செய்யும் வேலை செய்து வந்தார். அக்காலத்தில் குழந்தை பிறப்பு என்பது தாய்க்கும் சேய்க்கும் ஒரு வாழ்வா? சாவா? என்ற போராட்டமாகவே இருந்துள்ளது. இந்த போராட்டத்தில் அவருடைய சில வெற்றிகளாக இருப்பது, (எங்களது [மாணவர்களது] அன்பிற்கும் உரிய) இரு புதல்வர்களும் ஒரு புதல்வியும்தான். பிரசவித்த வேளையிலேயே இறந்து போன குழந்தைகள் அந்த இளம் ஆசிரியயை மிகவும் வாட்டியது. அவர் சில சமயம் கூறும் ஒரு சம்பவம்.
அவர் பள்ளிக்கு பெரும்பாலும் நடந்து செல்ல வேண்டியிருக்கும். அந்த பாதையில்தான் சண்முகநதியும் இருக்கின்றது. அதன் கரையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் இடுகாடு அமைந்திருந்தது. அந்நதியை கடக்க உதவும் பாலத்தின் மேல் இருந்து பார்த்தால் அது நன்றாக கண்களுக்கு தெரியும். ஒரு சமயம் பிரசவம் ஆகி பின்னர் சில நாட்களில் பிறந்த குழந்தையின் உயிர் பிரிந்தது. அக்குழந்தையின் ஈமக்கிரியையிலிருந்து நான்காம் நாள், அவர் பள்ளி செல்ல வேண்டிய கட்டாயம் உருவானது. பள்ளிக்கு செல்லும் வழியில் பாலத்தை கடக்கும்போது ஏதோ ஒரு சிறு மண் மேட்டின் மீது அரைகுறையாக காய்ந்த மலர் மாலைகளை காண நேர்ந்தது. அப்போது, அங்கே புதைக்கப்பட்டு இருக்கும் அவரது குழந்தையின் நினைவு அவரை ஆட்கொண்டு, ஆறுதல் அளிக்க யாரும் இன்றி, தனியாக அங்கேயே உடைந்தார். கண்ணீர் ஆர்ப்பரிக்கும் வேளையில் துணை இல்லாத கொடுமையும், பிரிவின் சோகமும் அவரை கரைத்தது அப்போது. தன்நிலை மறந்து அவர் கரைந்த சம்பவம், ஒரு பெண் தாய்மை உணர்வை எவ்வளவு குரூரமாக எதிர் கொள்ள நேர்ந்தது என்பதை காட்டியது எனக்கு.
அவருக்கு அத்தகைய இழப்புகள் இருந்தாலும், அவரது மனம் தனது மூன்று குழந்தைகளின் நல்வாழ்விற்கும், தான் கற்றுக் கொடுக்கும் குழந்தைகளின் நல்வாழ்விற்கும் உழைக்க முனைந்தது. காலம் ஒரு ஓடை நீராக வழிந்தோடியது. இதனிடையே தனது ஆர்வத்தின் மூலமாக, ஹிந்தியில் பல நூல்களைப் பயின்றார். தக்ஷிண பாரத் கிந்தி ப்ரசார் சபாவின் பிரச்சாகராகவும் செயல்பட்டார். மாலை வேளைகளில் ஹிந்தி கற்றுக் கொடுக்க தனி வகுப்புகள் நடத்தினார். தாயைப் போல பிள்ளைகளும், ஹிந்தி கற்றனர் அன்னையிடமிருந்து. இதனிடையே அரசின் நிலைப்பாடுகளால் பள்ளியில் ஹிந்தி ஆசிரியை பணியை தொடர இயலாமல் போய்விட்டது. அச்சமயம் அவருக்கு உண்டான மன அழுத்தம், ஒரு வைராக்கியத்தையும் அவருள் உண்டாக்கியது.

1970களில் தமிழ் நாட்டில் ஆங்காங்கே ஆங்கில வழி சிறுவர் பள்ளிகன் இருந்தன. ஆனால் அத்தகைய ஒரு பள்ளி பழனியில் இல்லாததை அவர் உணர்ந்தார். அத்தகைய பள்ளியை உருவாக்கினால் என்ன? என்ற எண்ணம் வலுப்பெற்றது. பள்ளிக்கு தேவையான இடத்திற்க்காக தனது வீட்டை சற்று மாற்றி அமைத்தார். பின்பு அவர் தனது அருமைத்தம்பி திரு. நாகராஜன் அவர்களின் உதவியோடு சிறுவர்கள் பள்ளியை ஆரம்பித்தார். வெறும் பள்ளி இறுதி வரை மட்டும் பயின்று விட்டு, கட்டுப்பட்டியான சமுதாயத்தில் ஓர் ஆசிரியப் பணி ஏற்று, பின்னர் அதுவும் பறிக்கப்பட்ட நிலையில், சற்றும் துவண்டு விடாமல், முன்னேற்ற பாதையில் சிந்தித்து வீறு நடைப் போட்டார். "பால முருகன் ஆங்கிலப் பள்ளி" ஆரம்பம் ஆனது. இதுதான் பழனி நகரின் முதல் ஆங்கில வழிப் பள்ளி. முதல் வருடம் மக்களுக்கு தயக்கங்கள் இருந்தாலும், மறு வருடம் முதல்நிறைய மாணக்கர்கள் பள்ளியில் சேர்ந்தனர். இவரது உழைப்பிற்கு நல்ல பலன் இருந்தது. இவரை தமிழ்நாடு சிறுவர் பள்ளிகள் நடத்துவோர் சங்கத்தில் முக்கிய உறுப்பினர் ஆக்குகின்றனர். இவர் கூச்சமும் பெருமிதமும் ஒரு சேர அந்த உறுப்பினர் நிலையை ஏற்கிறார்.( சில வருடங்களுக்கு முன்பாக அவரது சேவையை பாராட்டி அவருக்கு சிறந்த நிர்வாகிக்கான பரிசும், கௌரவமும் அச்சங்கத்திடமிருந்து கிடைத்தது). தனது கூரிய அறிவுத்திறன் மூலமும், தணியாத ஆர்வம் காரணமாகவும், அப்பள்ளி இன்று வரை வெற்றிகரமாக நடந்து வருகின்றது.

அப்பள்ளியை பற்றி சில வரிகள்: அப்பள்ளியில் நன்கொடை கிடையாது. கீழ் நடுத்தர மக்களும் பயில வாய்ப்பு தரும் வகையில் கட்டண அமைப்பு. நல்ல அன்பான, தகுதி வாய்ந்த, தனக்கு நன்கு அறிமுகமான ஆசிரியைகள் நியமிப்பு. கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக பள்ளியை நடத்தி வந்தாலும், அவரின் இல்லம் ஓர் நடுத்தர வர்க்கத்தாரின் வீடு போல்தான் இருக்கும். அப்பள்ளியை நடத்த அவருக்கு பல சிக்கல்கள். ஆனால் அவரது நம்பிக்கையும் நேர்மையும் மட்டுமே அனைத்திலிருந்தும் அவரை காத்துள்ளது. இப்பொழுது அவரது பள்ளி ஓர் புதிய இடத்தில் அமைந்துள்ளது. அதை நிர்வகிக்க அவரின் மகனும், மருமகளும் அவருக்கு உதவுகின்றனர்.

இதை தவிர மாலை வகுப்புகளில் ஹிந்தி கற்கும் மாணவ மாணவியரின் கூட்டம். நான் அவரிடம்தான் ஹிந்தி கற்றேன். இது எனக்கு பின்னாட்களில் நல்ல பயன் தருகிறது. TIFR பயிற்சி பள்ளியின் போதும், ஆய்வுப் பணி நிமித்தமாக வட இந்தியா செல்லும் போதும், நான் கற்ற ஹிந்தி எனக்கு பல நட்புகளை பெற்றுத் தந்தது. அவரிடம் ஹிந்தி கற்ற பலர் இன்று ஹிந்தி ஆசிரியர்களாகவும், பேராசிரியர்களாகவும் உள்ளனர்.

அவரிடம் எனக்கு பிடித்த பல விஷயங்களில் சில: 1. எப்போதும் சிரித்த முகமாக இருப்பது. 2. மற்றவரிடம் பேசும் போது எதிராளி சொல்வதில் முழு கவனம் செலுத்துவது. 3. நம்பிக்கை உண்டாக்குவது. எனக்கு அவர் வாழ்வில் ஓர் முன்மாதிரி. அவருக்கு என் நன்றிகள்.

-அன்புடன்
பாலாஜி-பாரி
(நான் நீண்ட இடைவெளி விட்டதற்கு மன்னிக்கவும்: தொடர்ச்சிக்காக அனைத்தையும் தொகுத்து இட்டுள்ளேன்)

Friday, April 02, 2004

கோடை மழை

நேற்று கனத்த கோடை மழை. அத்தருணத்தில் சாலையின் இரு புறங்களில் இருக்கும் செம்மண்ணுடன் எனது இதயமும் கரைந்தது. அப்போது தோன்றிய மிகச்சிறிய தற்காலிக ஓடைகளில், வசந்த காலத்தை அறிவித்த மலர்கள் பயணித்து கொண்டிருந்தன, சில இலைகளையும் தங்களுடன் அழைத்துக் கொண்டு. இக்காட்சியை இயற்கை அவ்வப்போது படம் பிடித்து கொண்டிருந்தது வெட்டும் மின்னலின் துணை கொண்டு. மழையின் நீண்ட கால்கள் வீசிய திசை சார்பற்ற குளிர்ந்த காற்றுக்கு ஏற்றவாறு அழகிய நடனம் புரிந்தது.


அன்புடன்
பாரி

Friday, March 26, 2004

ஓர் நட்சத்திரம் பிறந்தது

ஆயிரத்து ஐநூறு ஒளி ஆண்டுகளுக்கப்பால் ஒர் நட்சத்திரம் பிறந்துள்ளது. இதை ஜே மெக்நெய்ல் என்ற ஓர் அமெச்சூர் விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார். அவர் தனது எளிமையான 3 இன்ச் தொலை நோக்கியை கொண்டு, தனது வீட்டின் கொல்லையில் இருந்து ஆகாயத்தை அலசியுள்ளார். அப்போது வேட்டைக்காரன் என்ற நட்சத்திர கூட்டத்தில் புதிய ஒளி தெரிவதை பதிவு செய்துள்ளார். வழக்கத்திற்கு மாறாக, ஓர் ஒளி தெரிவதை சரியாக அடையாளம் கண்டு இணையத்தின் மூலம் புரஃபோஷனல்ஸை தொடர்பு கொண்டு இச்செய்தியை தெரிவித்துள்ளார்.

அதன் பின் உலகின் தலைசிறந்த வானவியல் மையங்கள் அவரது கண்டுபிடிப்பை பாராட்டி உள்ளன. அந்த நட்சத்திரத்திற்கு, மெக்னேய்ல் நெபுலா என்று பெயரிட்டுள்ளனர்.

மேலும் விபரங்களுக்கு சுட்டவும்

Tuesday, March 23, 2004

பாரதி கண்ட புதுமைப் பெண்கள்: கோமதி டீச்சர் - 1

கி.பி.1940-50 களில் பெண்கள் பள்ளிக்கு செல்வது என்பது ஒரு பெரிய புரட்சி. அதுவும் திருமணமான ஒரு சிறுமி பள்ளிக்கு செல்வது என்பது அதிசயம்.
அந்த அதிசயம் நடந்தது 14, தெற்கு ரத வீதியில். மணமாகி பழநிக்கு வந்த பின்னும் படிப்பதில் ஆர்வம் காட்டினாள் அந்த சிறுமி. காலத்தை மீறிய சிந்தனை கொண்ட ஒரு மாமனார் அந்த பொறியை கண்டு கொண்டார். பின்பு அச்சிறுமிக்கு, பள்ளியில் சென்று பயில்வதில் உள்ள அனுகூலங்களையும், உலகத்தை அதன் உண்மையான உருவத்தில் பார்க்கும் வாய்ப்பையும் எடுத்துக் கூறி ஓர் தகப்பனாக மாறி அச்சிறுமியை பள்ளியில் சேர்த்தார். அச்சிறுமி, தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இன்றி சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறாள். அது ஒரு மிகப் பெரிய சகாப்தத்தின் முதல் சம்பவம்.
குடும்ப வாழ்க்கையும் அதனூடே கல்வி பயிலும் வாய்ப்பும் அவரை எவ்வாறு அலைக்கழித்தது?
(-தொடரும்)

Monday, March 08, 2004

பெண்கள் தின வாழ்த்துக்கள்!!!

இன்று பெண்கள் தினம். இந்த தினத்தை ஒட்டி என்னைக் கவர்ந்த பெண்கள் என்ற தொடர் எழுத முடிவு செய்துள்ளேன். ஆணாதிக்க சமுதாயத்திலும் திறம் பட சாதனைகள் பல செய்த நான் சந்தித்த பெண்மணிகள் பற்றி இங்கே எழுத உள்ளேன். முதலில் நமக்கு அறிமுகமாவது, எனக்கு ஹிந்தி கற்றுக் கொடுத்த கோமதி டீச்சர் அவர்கள்.

இத்தொடர் சற்று கால இடைவெளியுடன் வரும்...... பணி அழுத்தம் காரணம்.

அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்!!

அன்புடன்
-பாரி

Wednesday, March 03, 2004

தமிழ் பற்றி UNESCO அறிக்கை

திரு சுரேஷ் அவர்கள் மரத்தடியில் இட்டுள்ள அறிக்கையின் சுட்டி.
யுனஸ்கோ கூரியரின் ஆசிரியராக இருந்த திரு. மணவை முஸ்தாபா அவர்களின் பேட்டியின் ஒரு பகுதி சுட்டப்பட்டுள்ளது. இதில் தமிழ் பற்றி UN என்ன கூறி உள்ளது என்ற விபரம் உள்ளது.