Thursday, April 29, 2004

மார்ச் வரிகள்....

அந்த மார்ச் மாத இறுதி நாட்கள், அழகான பல இயற்கை நிகழ்வுகளோடு, நிகழ்வுகளின் மணத்தை நினைவுகளாகவும் பொதித்து கொண்டிருந்தன.

பூக்கள் மட்டுமே நிறைந்த மரங்களுக்கு கீழே இருந்த தேநீர் மேசைக்கு மேல் சந்தோஷங்களாக விரவி கிடந்தன ஊதா நிற மலர்கள். மண்ணில் உதிர்த்த மரத்தின் மேல் அவை கொண்ட பிணக்கு, மேசைக்கு அருகில் உட்கார்ந்து தங்களை நோக்கிய அச்சிறுமியின் புன்னகை கண்டு பூரிப்பாக மாற்றம் கொண்டது. அந்த காட்சி எனக்கு உவகை அளித்தது.

மாலை நேரம். சூரியன் தன்னை ஒளித்துக் கொள்ள இரு மணிதியாலங்கள் இருந்தது. கோடையின் வெப்பம் சற்று தணிய ஆரம்பித்தது. சட்டென்று, விண்ணில் கொண்டல்கள் தோன்றின. எங்கிருந்தோ திசையில்லாமல் குளிர்ந்தக் காற்று வீசியது.

அன்றைய பணியின் நிறைவை நினைத்துக் கொண்டே இருபுறமும் ஓங்கி வளர்ந்த மரங்களுக்கிடையே அந்த சாலையில் நடந்து செல்கின்றேன். சூழலின் குளிர்ச்சி உள்ளத்தை நனைக்கின்றது. என்னை போலவே களிப்புற்று மஞ்சள் பூக்கள் நிறைந்த மரங்கள் அங்கு இங்கும் அசைந்து பூ மாரிப் பொழிந்தன. காதலி தன் கையால் காதலன் முகத்தில் நீரை சிதறச் செய்யும் போது அவன் சிணுங்குவதைப் போல் சிணுங்கச் செய்தன என்னை அம்மலர்கள், என் முகத்தில் படும் போது.

இப்போது எங்கோ இடி முழக்கம். கோடையின் சிறப்பு அதன் மழை. முரணாக இருந்தாலும் அழகுணர்ச்சிக்கு அது அரண். சட்..சட்....பெரிய பெரிய முத்துக்களாய் ஆரம்ப மழைத்துளிகள். கற்பிக்கப்பட்ட மனம் மழையிலிருந்து ஒதுங்க எண்ண, புதிர் காணும் மனம் நீர்க் குச்சிக்கு கீழே நிற்க அழைப்பு வைத்தது. ஏற்றேன். மண் வாசனை என் நினைவுகளை, பல கோடை மழைகளோடு பொருத்திப் பார்க்கின்றது.

நான் அம்மழையில் நடக்க, வசந்தத்தை உலகுக்கு அறிவித்த அந்த மஞ்சள் மலர்கள் தற்காலிக சிற்றோடைகளில் என்னைக் கடந்து சென்றன, புன்சிரிப்புடனே!! இத்தருணத்தில் இயற்கை தன்னை குதூகலமாக வைத்துக்கொண்டதாகப் பட்டது எனக்கு.

மின்னல் கீற்றுக்கள் மேகங்களை பிளக்க, மேகங்கள் உரத்த குரலோடு மழையினை உகுக்க, நிலைமை தீவிரம் அடைந்தது. புள்ளினத்தின் கூடுகள் அதிர மரங்கள் பேயாட்டத்துடன் ஓலம் இடுகின்றது. சூழலில் சற்றே இருள் கவிகின்றது. மரங்களிலிருந்து, சுள்ளிகள் கிளைகளின் மோதல்களில் பாதையில் வீழ்கின்றன. மேலும் பல அடிகள் நடந்தேன். இதற்குள் ஓடையில் நீர் பிரவாகம் அதிகரிக்க புரண்டு ஓடும் பூக்கள் என்னைக் காப்பாற்று எனக் கை நீட்ட, முகத்தில் வேகத்துடன் அறையும் மழை என் கண்களை மூடச் செய்தது. மூடனானேன் - செய்வதறியா.

தலையிலிருந்தும் முகத்திலிருந்தும் நீரை வடித்துவிட்டு பின்பு கண்களை திறக்கும் போது மழையின் வேகம் குறைந்ததாக தோன்றியது. மேகங்களின் அடர்த்தி ஒரு சில இடங்களில் குறைந்து அதனுள் விரவிய கதிரவனின் ஒளி சிதறி, ஒரு புதிய ஒளியைத் தந்தது அச்சூழலுக்கு. இப்போது பாதை ஓரம் ஒதுங்கிய மலர்கள், மீண்டும் என்னுடன் நட்புறவாடியது. அதைக் கண்டு நான் வெட்டகமுற்றாலும், ஆசுவாசமானேன். மழை நின்றது.

பாதையை கடக்க, பாலம் ஏறி இறங்கினால் அங்கு மலரும் காலத்திற்கு முன்பே மலர்ந்துவிட்ட குல்மோகர் பூவின் இதழ்கள் சிவப்புத் தீயாய் சிதறி கிடந்தன. இயற்கை இப்போதும் தன்னை குதூகலமாகவே வைத்துக் கொண்டுள்ளது.

மழையில் நடப்போம். மலர்கள் அப்போதும் நமக்கு ஏதாவது சொல்லும்.
நன்றிகளுடன்
-பாரி



No comments: