Saturday, January 31, 2004

No Sound Horn

மைய நூலகத்தின் முன்னமைந்த சாலை
இரு மருங்கிலும் பறவைகளும் அடர்ந்த மரங்கள்
படித்த விஷயத்தை சுமந்தபடி சாலையில் நான்
கீ.ய்...கீச்..கீச்ச்....கீக்கீ..கீய்....கீச்....
ஒரே நேரத்தில் பறவைகளின் ஒலி
எண்ணத்தின் -inertia விலிருந்து என்னை மீட்டது
சற்றே நிமிர்ந்த என் கண்களில் பட்டது
No Sound Horn அறிவிப்பு பலகை

-பாரி

(பின் குறிப்பு: -inertia என்ற பதத்திற்கு தமிழ் வார்த்தை சொல்லி உதவுங்கள்)

நான், திரு மற்றும் ஓர் சிறுமி

" அங்கிள்! நீவு left Right!" அன்புக் கட்டளை ஒன்று. "அங்கிள் 'மார்ச் ஆன்' கேளி!" சிறிதும் தாமதிக்காமல் இன்னொரு உத்தரவு. அதன் பின் "...ட்விங்கிள்..ட்விங்கிள்..." என்று ஓர் ரைம். நான் அதை சொல்ல முயலும் போதே " a d f e g k s y....." என்று Random-ஆக எழுத்துக்களை மழலையிட்டாள்.

எப்படி துரித கதி ஓட்டம் செல்ல வேண்டும் என்று திரு எனக்கு டெமோ செய்து காட்டிக் கொண்டிருந்தார். நாங்கள் இருந்த இடம் ஓர் பரந்த மைதானம். அச்சமயம் எனக்கு முன் அந்த சிறுமி ஓடி வந்து நின்றாள். அவளது அலை போன்ற ஆர்வம் எனது கவனத்தை அவள் பால் ஈர்த்தது. அவளிடம் இருந்த மலர்ச்சியான சக்தி எங்களது பயிற்சியை நிறுத்த செய்து அவளது விளையாட்டில் பங்கேற்க செய்தது. ஓர் நிறைவுடன் நாங்கள் அவளது சொற்களுக்கு கட்டுபடத் தொடங்கினோம்.

அவளது மொழி non-linear ஆக இருந்தது. லா. சா. ரா-வின் எழுத்து உள்ளுக்குள் உண்டாக்கும் சுழற்சியை உண்டாக்கியது அவள் மொழி. பழகிய தளத்தின் ஒரு தரிசனம் அவரது எழுத்து. ஆனால் அச்சிறுமியோ அவளது எண்ண வடிவமைப்பிற்கு முழு குறியீடாக இருந்தாள். சாரு-வின் "Zero-degree"(முற்பகுதி) முற்றிலும் தளம் இழக்கச் செய்யும் தன்மை உடையது. ஆனால் அவளோ எனக்கு தெரியாத ஓர் தளத்தை அறிமுகம் செய்தாள்.

எனது "நான்" அவளது தளத்தை புரிந்து கொள்வது எளிது என்றே வலுவாக கூறி அழுத்தியது. அவளது "அஜ்ஜி" தொலைவில் சென்று அமர்ந்து விட அங்கு செல்வது இக்குழந்தையின் நோக்கமாக இருக்கும் என்று என் "நான்" கூற, "அஜ்ஜி-யாந்த்ர கோகன்ன பா", என்று கூறி, அஜ்ஜி-(அதாவது பாட்டி) இருந்த இடத்தை நோக்கி அழைத்தேன். வலது கையின் கட்டை விரலை தாடையின் கீழ் வைத்து என்னுடன் காய் விட்டது. அச்சிறுமி என்னை நிராகரித்தது. எப்பொழுதும் போல் எனது "நான்"-க்கு ஓர் குத்து விழுந்தது. அக்கணத்தில் என்னுள் நிறைந்து இருந்தது அச்சிறுமியின் இனிமையான நினைவு மட்டும். எதை அறிய நான் எங்கு செல்வேன்?.

-பாரி

Wednesday, January 21, 2004

சருகுகள்

யாரும் கவலை படாத, காற்றிலே மிதந்து செல்லும், உச்சி மரக்கிளையில் இருந்து உதிர்ந்த காய்ந்த சருகை போல் உணர்கிறேன்.
சுதந்திரம்....
புவியின் ஈர்ப்பு மட்டும் இல்லையேல், உடைத்தெறிந்து பறக்கும் உயிர் பறவை உடலை விட்டு.
நீரினுள் கலந்த உப்பாக பிரபஞ்ச கடலினில் கலக்க நினைக்கிறேன். கரையாத கல்லாய் புவியின் ஈர்ப்பினால் உள்ளே மூழ்கி கொண்டிருக்கின்றேன். தரை தட்டுவேனோ, அதை பிளப்பேனோ....
நிகழும் இந்த லீலைகள், நாளைய காவியத்தின், முன்னுரைகள்............

அன்புடன்
பாரி

Monday, January 19, 2004

பேர்ல என்ன இருக்கு ??

இப்படி யாராவது சொன்னா... தயவு செஞ்சு இதை படிங்க.....


பாலாஜி. இது வெறும் மூணெழுத்து வார்த்தை. இந்த வார்த்தை படற பாடு... படுத்தற பாடு.... இருக்கே..... சொல்லி மாளாது....ஆனால் சொல்லாமயும் இருக்க முடியல.......

B-ல ஆரம்பிக்குதா.... ஸ்கூல் அட்டெண்டென்ஸ்ல எப்படியும் மூணு நாலு பெயருக்குள்ள வந்து விடும். ஜன்னல் ஓரத்துல உக்காந்துட்டு சீனியர் மாணவர்கள் விளையாடும் கிரிக்கெட்டை வகுப்பறையிலிருந்து (match ன்னா கேட்கவே வேணாம்!! உடல் மட்டும் வகுப்பறையில்...) வேடிக்கை பார்க்கும் போது, ரெண்டு அல்லது மூணு பாலாஜி-ல என் பெயர (S.Balaji) கூப்பிடறதுக்கு முன்னாடியோ அல்லது அப்புறமோ "ப்ரெசண்ட் மிஸ்"ன்னு சொல்லி, "என்ன எரும? வெளில என்ன ஆடுது?" ன்னு சரோஜினி மிஸ்-கிட்ட திட்டு வாங்கி இருக்கேன்.

SRIMHSS-ல் +2 படிக்கும் போது, ரெண்டு பாலாஜி. இன்னொரு பாலாஜி Computer science. நான் Biology. எங்களுக்கு இந்த வித்தியாசம் இருந்த போதும், பயாலஜி பாலாஜி-ன்னு கூப்பிட கஷ்ட்டப்பட்டுகிட்டு எங்களுக்கு புது அடை மொழி கொடுத்தாங்க. நான் பழனியில் இருந்து வந்ததால பழனி பாலாஜி -யாகவும், அவங்க அப்பா மிட்டாய் கடை வைச்சு இருந்ததால இன்னொரு பாலாஜி, மிட்டாய் பாலாஜி -யாகவும், ஆகிவிட்டோம். ( "நண்பா! மிட்டாய் பாலாஜி! அந்த கணக்கு டுயூசன் சம்பவம் எனக்கு தெரிஞ்சு போச்சுடா. இதை படித்த பின்பும் நீ தொடர்பு கொண்டால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்!!")

APAC -ல ஃபிசிக்ஸ் படிக்கும் போதும் ரெண்டு பாலாஜி. இங்கே ஒரு சின்ன ஆறுதல். இன்னொரு பாலாஜி பேரு பாலாஜி விஸ்வநாதன். இங்கே குழப்பம் கம்மின்னு நினைச்சேன். ஆனா, ஒரு தடவை எங்கிட்ட வந்து "ஆமா!! ஏண்டா இப்படி லொள்ளு பண்ற? physics lab -la யாரும் இல்லாத போது physics பூதம் டான்ஸ் ஆடுதுன்னு சொன்னியாம்"ன்னாங்க பசங்க. அப்போதான் தெரிஞ்சுது " B. vishwanathan" மிகுந்த நகைச்சுவை உடையவர் என்று.

நல்ல வேளை... AC-ல 94php-ல ஒரே ஒரு பாலாஜிதான் :))

சரி ஐயா! IISc யில எங்க dept-ல ஒரு பாலாஜிதான்னு சந்தோஷப்படும் போது, registrar office-ல இருந்து phone வருது. என்ன விஷயம்ன்னு கேட்டா, "உங்கள gymkhaana treasurer-ஆ select பண்ணி இருக்காங்க" அப்படீங்கறாங்க. என்னாடா இது புதுக் குழப்பம்ன்னு "உங்களுக்கு யார் வேணும்?"-னு பணிவா கேட்டேன் (வேற என்ன பண்ண??). " நீங்க student் தானே?"ன்னாங்க. "ஆமாம்!!" னேன். "உங்க பேரு "S.Balaji" தானே?". இதுக்கும் "ஆமாம்" னேன். "அப்ப உங்களத்தான் செலக்ட் பண்ணிருக்காங்க"ன்னாங்க. உடனே நான் "அட நான் எலெக்ஷன்னுக்கு நாமினேட் பண்ணவே இல்லீங்க" னு சொன்னேன். "இல்லையே Instrumentation னு போட்டு இருக்கே" அப்படீன்னு சொல்றாங்க. நான் "சே!! இங்கேயும் இப்படியான்னு" நினைச்சுகிட்டு, "சார்! வேற dept-ல என்கொயர் பண்ணுங்க. அப்புறமா நான் உங்க office-க்கு வரேன்னு சொல்லி phone-ஐ வைத்தேன். பிற்பாடு Metullargy-ல ஒரு "S.Balaji", இருந்தது, அவரும் நானும் ஒரே பிளாக்கில் (PD-Block) இருந்தபடியால் நண்பர்களானது ஒரு பின் கதை.
இங்கேயும் குழப்பம் இல்லாமல் இல்லை. ஏன்னா, அவரோட ரூம் நம்பர் "137". என்னோட ரூம் நம்பர் "37". எல்லாரும் செக்யூரிட்டி கிட்ட தபால் ஏதேனும் வந்தான்னு விசாரிச்சுகிட்டா, நாங்க மட்டும் பரஸ்பரமா-வும் letter வந்ததுருக்கான்னு கேட்டுப்போம். :)

இங்கே வட மாநில பசங்களுக்கு "ஜி" ங்கறது மரியாதை விகுதியாம். அதனால என்னை "பாலா" ன்னு-தான் கூப்பிடுவாங்க.

இப்போ நெட்-ல எழுத ஆரம்பிச்ச பின்னரும், இதே கதை தொடருது. சரி ஒரு புனைப் பெயர் வைத்துக் கொள்வோம்னு "பாரி" னு வைச்சுக்கிட்டேன். பார்த்தா, blogspot-ல பரிமேள்ஸ் "பரி"ன்னு ரொம்ப நாளா எழுதறார். திண்ணையில் பாரி பக்கத்தில் " பாரி பூபாலன்" னு ஒருத்தர் எழுதறார்.

அதானால இனிமே "PAARI" (பாரி) ங்கற நாம கரணத்தை மட்டும் தரித்துக் கொள்றேன். இனி நெட்-ல பாலாஜி-க்கு கோவிந்தா!!!! :)))

அன்புடன்
பாரி

Wednesday, January 14, 2004

பொங்கல் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

நம் உயிர் வாழ்தலுக்கு அடிப்படையாக விளங்கும் உழவுத் தொழிலை மேற்கொள்ளும் அந்த உழவர் நண்பர்களுக்கும் நம் நன்றி நிறைந்த வாழ்த்துக்கள்!!

பருவ மழை தப்பாமல், அவர்களது உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கவும், அவர்கள் வாழ்வில் வளங்கள் பொங்கவும், பிரார்த்திப்போம்!!!

இப்பொங்கல் விழா சந்தர்ப்பத்தில், உழவர்களுக்கு நமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!!!!

அன்புடன்
பாலு மற்றும் பாலாஜி

Saturday, January 03, 2004

புதிர்

அந்த புதிர் மிகவும் அழகானது. நேர் கோட்டில் செல்லும் மத்தாப்பு கம்பி சட்டென்று சகல திசைகளிலும் பூ வாரி இறைப்பதை போல அழகானது. மாலை நேர உலாவில் பூந்தோட்டம் வழியே செல்லும் போது, அவ்வேளை ஆட்கொள்ளும் நறுமணம் போன்றது. சின்னக் குழந்தையை கண்கள் அகல விரியச் செய்யும் கவின்மிகு வியப்பை போன்றது.

புதிர் பிரிக்க வருபவருக்கு ஆக்க சக்தியும், அளவற்ற நம்பிக்கையும் கொடுக்க வல்லது அப்புதிர்.

அறியும் வரைதான் புதிர் அழகு என்பர். ஆனால், அப்புதிர் அறிந்த பின் மேன்மேலும் அகண்ட பல தளங்களில் பல அரிய புதிர்களை மட்டும் காட்டுவது அப்புதிரின் பண்பு. அறிய முயலும் பாதையில் களைப்பை உண்டாக்கும். எண்ணக் கருவூலம் சிதறி அடிக்கப்படும் அப்பயணத்தில். சிதறிய துண்டுகளோ மேலும் அழகானதாகவும் உள் மனதை கவரும் வகையில் பாங்குற அமையும். பயணிப்பதற்கு பல விதைகள் நாங்கள்! என்று வழித்தடம் இடும்.

தூக்கி கவிழ்த்துப் போட்டாலும் அந்தரத்தில் பல தளங்களை காட்டி மிதக்கச் செய்யும்.

அந்த மஞ்சள் மலரின் மெல்லிய இதழ் போல வலிமையை தன்னுள் கொண்டு, மிகவும் எளிமையை காட்டும். " ஆகா! எளியதே அழகு" என்ற பேருண்மையை அப்பயணத்தில் முரசறிவிக்கும். முயற்சியை பேருவகையுடன் தொடர வழி செய்யும். கால்த்தால், பரிமாணத்தால் எப்படி கடக்கப் போகிறோம் என்ற கவலையை தோற்றுவித்தாலும் எல்லையற்ற பெருவெளியில் தூலம் கரைந்து சென்று, எண்ண அதிர்வலையை பெருவெளியில் நிறைக்க அன்றே அப்பயணம் முடியும், மேலும் ஒரு புதிராக, மற்றொரு பயணத்தின் துவக்கமாக.........!!!

தான் இருக்கும் நிதர்சனத்தை காட்டிய அந்த புதிருக்கு இக்கணம் நன்றி.........!!!!!

-பாரி