Thursday, April 29, 2004

புதுமைப் பெண்கள் - 1 - கோமதி டீச்சர்

கி.பி.1950-களில் பெண்கள் பள்ளிக்கு செல்வது என்பது ஒரு பெரிய புரட்சி. அதுவும் திருமணமான ஒரு சிறுமி பள்ளிக்கு செல்வது என்பது அதிசயம்.
அந்த அதிசயம் நடந்தது 14, தெற்கு ரத வீதியில். மணமாகி பழநிக்கு வந்த பின்னும் படிப்பதில் ஆர்வம் காட்டினாள் அந்த சிறுமி. காலத்தை மீறிய சிந்தனை கொண்ட ஒரு மாமனார் அந்த பொறியை கண்டு கொண்டார். பின்பு அச்சிறுமிக்கு, பள்ளியில் சென்று பயில்வதில் உள்ள அனுகூலங்களையும், உலகத்தை அதன் உண்மையான உருவத்தில் பார்க்கும் வாய்ப்பையும் எடுத்துக் கூறி ஓர் தகப்பனாக மாறி அச்சிறுமியை பள்ளியில் சேர்த்தார். அச்சிறுமி, தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இன்றி சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறாள். அது ஒரு மிகப் பெரிய சகாப்தத்தின் முதல் சம்பவம்.
குடும்ப வாழ்க்கையும் அதனூடே கல்வி பயிலும் வாய்ப்பும் அவரை எவ்வாறு அலைக்கழித்தது?
அந்த கல்வி பயிற்சியினூடே, ஹிந்தி கற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் வருகின்றது. அவர் ஹிந்தி ஆசிரியை ஆகின்றார். பழனியிலிருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள நெய்க்காரப்பட்டி பள்ளியில் அவருக்கு பணி. அவரது கணவர், சிற்றுண்டிகள் செய்யும் வேலை செய்து வந்தார். அக்காலத்தில் குழந்தை பிறப்பு என்பது தாய்க்கும் சேய்க்கும் ஒரு வாழ்வா? சாவா? என்ற போராட்டமாகவே இருந்துள்ளது. இந்த போராட்டத்தில் அவருடைய சில வெற்றிகளாக இருப்பது, (எங்களது [மாணவர்களது] அன்பிற்கும் உரிய) இரு புதல்வர்களும் ஒரு புதல்வியும்தான். பிரசவித்த வேளையிலேயே இறந்து போன குழந்தைகள் அந்த இளம் ஆசிரியயை மிகவும் வாட்டியது. அவர் சில சமயம் கூறும் ஒரு சம்பவம்.
அவர் பள்ளிக்கு பெரும்பாலும் நடந்து செல்ல வேண்டியிருக்கும். அந்த பாதையில்தான் சண்முகநதியும் இருக்கின்றது. அதன் கரையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் இடுகாடு அமைந்திருந்தது. அந்நதியை கடக்க உதவும் பாலத்தின் மேல் இருந்து பார்த்தால் அது நன்றாக கண்களுக்கு தெரியும். ஒரு சமயம் பிரசவம் ஆகி பின்னர் சில நாட்களில் பிறந்த குழந்தையின் உயிர் பிரிந்தது. அக்குழந்தையின் ஈமக்கிரியையிலிருந்து நான்காம் நாள், அவர் பள்ளி செல்ல வேண்டிய கட்டாயம் உருவானது. பள்ளிக்கு செல்லும் வழியில் பாலத்தை கடக்கும்போது ஏதோ ஒரு சிறு மண் மேட்டின் மீது அரைகுறையாக காய்ந்த மலர் மாலைகளை காண நேர்ந்தது. அப்போது, அங்கே புதைக்கப்பட்டு இருக்கும் அவரது குழந்தையின் நினைவு அவரை ஆட்கொண்டு, ஆறுதல் அளிக்க யாரும் இன்றி, தனியாக அங்கேயே உடைந்தார். கண்ணீர் ஆர்ப்பரிக்கும் வேளையில் துணை இல்லாத கொடுமையும், பிரிவின் சோகமும் அவரை கரைத்தது அப்போது. தன்நிலை மறந்து அவர் கரைந்த சம்பவம், ஒரு பெண் தாய்மை உணர்வை எவ்வளவு குரூரமாக எதிர் கொள்ள நேர்ந்தது என்பதை காட்டியது எனக்கு.
அவருக்கு அத்தகைய இழப்புகள் இருந்தாலும், அவரது மனம் தனது மூன்று குழந்தைகளின் நல்வாழ்விற்கும், தான் கற்றுக் கொடுக்கும் குழந்தைகளின் நல்வாழ்விற்கும் உழைக்க முனைந்தது. காலம் ஒரு ஓடை நீராக வழிந்தோடியது. இதனிடையே தனது ஆர்வத்தின் மூலமாக, ஹிந்தியில் பல நூல்களைப் பயின்றார். தக்ஷிண பாரத் கிந்தி ப்ரசார் சபாவின் பிரச்சாகராகவும் செயல்பட்டார். மாலை வேளைகளில் ஹிந்தி கற்றுக் கொடுக்க தனி வகுப்புகள் நடத்தினார். தாயைப் போல பிள்ளைகளும், ஹிந்தி கற்றனர் அன்னையிடமிருந்து. இதனிடையே அரசின் நிலைப்பாடுகளால் பள்ளியில் ஹிந்தி ஆசிரியை பணியை தொடர இயலாமல் போய்விட்டது. அச்சமயம் அவருக்கு உண்டான மன அழுத்தம், ஒரு வைராக்கியத்தையும் அவருள் உண்டாக்கியது.

1970களில் தமிழ் நாட்டில் ஆங்காங்கே ஆங்கில வழி சிறுவர் பள்ளிகன் இருந்தன. ஆனால் அத்தகைய ஒரு பள்ளி பழனியில் இல்லாததை அவர் உணர்ந்தார். அத்தகைய பள்ளியை உருவாக்கினால் என்ன? என்ற எண்ணம் வலுப்பெற்றது. பள்ளிக்கு தேவையான இடத்திற்க்காக தனது வீட்டை சற்று மாற்றி அமைத்தார். பின்பு அவர் தனது அருமைத்தம்பி திரு. நாகராஜன் அவர்களின் உதவியோடு சிறுவர்கள் பள்ளியை ஆரம்பித்தார். வெறும் பள்ளி இறுதி வரை மட்டும் பயின்று விட்டு, கட்டுப்பட்டியான சமுதாயத்தில் ஓர் ஆசிரியப் பணி ஏற்று, பின்னர் அதுவும் பறிக்கப்பட்ட நிலையில், சற்றும் துவண்டு விடாமல், முன்னேற்ற பாதையில் சிந்தித்து வீறு நடைப் போட்டார். "பால முருகன் ஆங்கிலப் பள்ளி" ஆரம்பம் ஆனது. இதுதான் பழனி நகரின் முதல் ஆங்கில வழிப் பள்ளி. முதல் வருடம் மக்களுக்கு தயக்கங்கள் இருந்தாலும், மறு வருடம் முதல்நிறைய மாணக்கர்கள் பள்ளியில் சேர்ந்தனர். இவரது உழைப்பிற்கு நல்ல பலன் இருந்தது. இவரை தமிழ்நாடு சிறுவர் பள்ளிகள் நடத்துவோர் சங்கத்தில் முக்கிய உறுப்பினர் ஆக்குகின்றனர். இவர் கூச்சமும் பெருமிதமும் ஒரு சேர அந்த உறுப்பினர் நிலையை ஏற்கிறார்.( சில வருடங்களுக்கு முன்பாக அவரது சேவையை பாராட்டி அவருக்கு சிறந்த நிர்வாகிக்கான பரிசும், கௌரவமும் அச்சங்கத்திடமிருந்து கிடைத்தது). தனது கூரிய அறிவுத்திறன் மூலமும், தணியாத ஆர்வம் காரணமாகவும், அப்பள்ளி இன்று வரை வெற்றிகரமாக நடந்து வருகின்றது.

அப்பள்ளியை பற்றி சில வரிகள்: அப்பள்ளியில் நன்கொடை கிடையாது. கீழ் நடுத்தர மக்களும் பயில வாய்ப்பு தரும் வகையில் கட்டண அமைப்பு. நல்ல அன்பான, தகுதி வாய்ந்த, தனக்கு நன்கு அறிமுகமான ஆசிரியைகள் நியமிப்பு. கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக பள்ளியை நடத்தி வந்தாலும், அவரின் இல்லம் ஓர் நடுத்தர வர்க்கத்தாரின் வீடு போல்தான் இருக்கும். அப்பள்ளியை நடத்த அவருக்கு பல சிக்கல்கள். ஆனால் அவரது நம்பிக்கையும் நேர்மையும் மட்டுமே அனைத்திலிருந்தும் அவரை காத்துள்ளது. இப்பொழுது அவரது பள்ளி ஓர் புதிய இடத்தில் அமைந்துள்ளது. அதை நிர்வகிக்க அவரின் மகனும், மருமகளும் அவருக்கு உதவுகின்றனர்.

இதை தவிர மாலை வகுப்புகளில் ஹிந்தி கற்கும் மாணவ மாணவியரின் கூட்டம். நான் அவரிடம்தான் ஹிந்தி கற்றேன். இது எனக்கு பின்னாட்களில் நல்ல பயன் தருகிறது. TIFR பயிற்சி பள்ளியின் போதும், ஆய்வுப் பணி நிமித்தமாக வட இந்தியா செல்லும் போதும், நான் கற்ற ஹிந்தி எனக்கு பல நட்புகளை பெற்றுத் தந்தது. அவரிடம் ஹிந்தி கற்ற பலர் இன்று ஹிந்தி ஆசிரியர்களாகவும், பேராசிரியர்களாகவும் உள்ளனர்.

அவரிடம் எனக்கு பிடித்த பல விஷயங்களில் சில: 1. எப்போதும் சிரித்த முகமாக இருப்பது. 2. மற்றவரிடம் பேசும் போது எதிராளி சொல்வதில் முழு கவனம் செலுத்துவது. 3. நம்பிக்கை உண்டாக்குவது. எனக்கு அவர் வாழ்வில் ஓர் முன்மாதிரி. அவருக்கு என் நன்றிகள்.

-அன்புடன்
பாலாஜி-பாரி
(நான் நீண்ட இடைவெளி விட்டதற்கு மன்னிக்கவும்: தொடர்ச்சிக்காக அனைத்தையும் தொகுத்து இட்டுள்ளேன்)

No comments: