Thursday, February 19, 2004

நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்: 5 (தென்னை மரத்துக்காரர்)

கடந்த பல வாரங்களாக மற்ற விஷயங்களில் சென்ற கவனம், இன்று தான் இந்த தொடருக்கு திரும்பியது.

எங்க காம்பௌண்ட்ல பதினோரு வீடுகள் இருந்தன. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு மரம் என்ற வகையிலோ என்னவோ, பதினொரு தென்னை மரங்கள் இருந்தன. ஒரு அடர்த்தியில்லா தென்னந்தோப்பு. இதை தவிர ஒரு பெரிய அடுக்கு - செம்பருத்தி செடி (புதர்?), அழகிய மஞ்சள் பூக்கள் தரும் மந்தாரைச் செடி, குட்டியா ஒரு செம்பருத்தி செடி, கிணற்றடி அருகிலே வசந்தி அக்காவின் முயற்சியில் தோன்றிய சில வாழை மரங்கள், என்று கலகலப்பாக இருக்கும். நான் மூன்றாவது படிக்கும் போது, எனது பெரியம்மாவின் கடைசி மகன் (என்னையும் சேர்த்துக் கொண்டு), சோமு என்ற நண்பரின் வீட்டில் இருந்து, ஜீன்யா செடியை கொண்டு வந்தான். இந்த பூக்கள் பல வண்ணங்களில் பிரகாசமாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். நான் இதுவரை பல பூக்களை (பெயர் தெரியாவிட்டாலும்) கண்டு மகிழ்ந்துள்ளேன். ஆனால் ஜீன்யா பூ எனக்கு சொல்ல முடியாத அளவு பெரு மகிழ்ச்சி தரும். இப்போது பார்த்தாலும்.... (JNC-விடுதிக்கு அருகில் இதை நான் காலையில் தினமும் பார்க்கின்றேன்). இதை தவிர, சேனைக் கிழங்கு எனது தந்தையின் முயற்சியால் அவ்வப்போது இடப்படும். (சேனைக் கிழங்கு செடி பார்ப்பதற்கு அழகாக இருக்கும்: வெளிர் பச்சையில் ...)

சரி. விசயத்திற்கு வருவோம். இந்த தென்னை மரங்களில், இரண்டு "செவ்வெளநீ" தரும். இந்த இரண்டில் ஒன்று பாலா மாமியின் வீட்டினுள் வளர்ந்து கூரை வழியாக வெளி வரும். கூரை சீமை ஓடால் வேயப்பட்டிருக்கும். அந்த மரத்தில் தென்னம் மட்டைகள் காய்ந்து போனால், பாலா மாமிக்கு டென்ஷன் அதிகமாகிவிடும். "இப்படியே இருந்தாக்க, காத்தடிச்சு மட்டை விழுந்து ஓடுகள பொறுக்கணும். இந்த விஷயத்தை ராஜாமணி காதில போட்டுடணும்" என்பார். (ராஜாமணி என்பவர், எங்க house ownerin ரின் மூத்த புதல்வர்). இவரை தவிர மற்றவர்களும் இதனால் பாதிக்கப்படுவார்கள். ஆனால் எப்போதாவது அகஸ்மத்தாக விழும் ஒரு தென்னம் மட்டை, ஒரு தேங்காய் இவைகள் வாண்டுகளுக்கு ஒரு களிப்பை உண்டாக்கும். விழும் தேங்காய்களை கைப்பற்ற ஒரு பெரிய கலாட்டாவே நடக்கும். இவ்வாறு நடக்கும் கலாட்டாவில் பெற்ற சில வெற்றிகள் எனக்கு, "தேங்காய்" என்ற ஓர் சிறப்பு பட்டத்தை (!) எனது வீட்டாரிடம் பெற்று தந்தது.

பாலாமாமியின் வார்த்தைகள் சிறிது நாட்களில் வேலை செய்யும். நாரால் (என்ன நார்?) ஆன ஒரு V-பெல்-டை தோளில் எடுத்துக்கொண்டு, இடுப்பில் ஒரு அரிவாளை செருகி, திறந்த மேலுடம்புடன் அவர் வருவார். அதாங்க நம்ம தென்ன மரத்துக்காரர். எப்பயாவது விழும் தென்னை மட்டைக்கே குதியாட்டம் போடும் நாங்க, அவரக் கண்டதும் பயங்கர ஜாலி ஆயிடுவோம். ஆனா வழக்கம் போல பெரியவங்க பிரச்சனை. "வீட்டை விட்டு வெளியே வராதீங்க! அவன் போனப்புறமா வந்து விளையாடலாம்".
(தென்னை மரத்துக்காரர் - தொடரும்)

No comments: