Saturday, February 28, 2004

நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்: 5 (தென்னை மரத்....-2)

அவர் ஒரு நிதானத்துடன் ஒரு மரத்தை அண்ணாந்து பார்ப்பார். பின்பு ஒரு கையை அதன் மேல் வைத்து, அழகான லாவகத்துடன் தனது கால்களில் நாரால் ஆன பெல்ட்டை மாட்டி கொள்வார். அதன் பின் அவர் வலது கையை மரத்தை அணைத்தவாறு பிடித்துக் கொண்டு, இடது கையை மரத்தில் அழுத்தி, நாரால் ஆன பிணைப்பின் உதவியோடு கால்களால் மரத்தை கவ்விக் கொண்டு ஏறுவார். அது ஓர் பெரிய நேர்த்தியான செயல். அவர் அதை அனாயசமாக செய்வார். மர உச்சியை அடைந்தவுடன், கைகளால் காய்ந்த மட்டைகளை பிய்த்து போடுவார். வீட்டில் இருக்கும் தட்டி வழியாக அண்ணாந்து பார்க்க அவ்வளவு பரபரப்பாக இருக்கும். அதன் பின், தேங்காய வெட்டி மேலே இருந்து போடுவார். அப்ப கீழே நிற்கும் அவரது மகனோ அல்லது மனைவியோ அந்த வழி செல்பவர்களை உஷார் செய்வர். இவ்வாறு கவனித்து செய்யும் பொழுது கூட எங்களது காம்பௌண்ட் அருகில் உள்ள (ஜெயந்தி அக்கா) வீட்டில் தேங்காய் விழுந்து அவரது தாயாரின் மலையாளம் கலந்த தமிழ் வசை சொற்கள் அசரீரியாக வரும். இதனிடையே, கொஞ்சம் பச்சை மட்டைகளையும் மேலேயிருந்து தள்ளுவார். இவ்வாறு அனைத்து மரங்களையும் ஒரு ரவுண்ட் வந்த பிறகு பறித்த தேங்காய்களை மூட்டையிலிட்டு எடுத்து செல்வார்.

இந்த நிகழ்வுகளுக்கு இடையில், மேலேயிருந்து சிதறி இருக்கும் தென்னங் குரும்பைகள், தென்னம் மட்டைகள் ஆகியன வாண்டுகளின் உற்சாகத்தை கூட்டும். தென்னங்குரும்பைகளை நாங்கள் குரும்பைக்காய் என்போம். அது பல சமயங்களில் எங்களுக்கு Ball -ஆக மாறி கிரிக்கெட் ஆட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும். மேலும் குரும்பைக்காயை கொண்டு கிலுகிலுப்பை செய்யலாம். குரும்பக்காயின் தொப்பி பகுதியை நீக்கி மென்மையான முன் பகுதியை தரையில் தேய்த்து தட்டை ஆக்கி கொள்ள வேண்டும். ஈர்க்குச்சி ஒன்று எடுத்து அதை வளைத்து தட்டை பகுதியில் U வடிவத்தில் அமைத்து செருகி கொள்ள வேண்டும். மேலும் ஓர்க் குச்சியை மையத்தில் செருகிக் கொள்ள வேண்டும். இப்போது அது நாமம் மாதிரி தோன்றும். அதற்கு செங்குத்தாக இரு குச்சிகளை செருகி சுழற்றும் போது, நடுவில் இருக்கும் குச்சி முன்னும் பின்னும் அசைந்து கடக், கடக் என்று சீராய் ஒலி எழுப்பும். கிலுகிலுப்பை தயார். தென்னம் மட்டைகளின் அடிப்பகுதியை வெட்டி, சிறிது செதுக்கி Bat-ஆக மாற்றும் ஓர் கலையும் நாங்கள் கற்றோம். மட்டையின் மேல் இருவர் உட்கார மேலும் இருவர் அதை இழுத்து செல்லும் வண்டி விளையாட்டும் மிக்க களிப்பை தரும். பச்சை தென்னம் மட்டைகளிலிருந்து ஓலைகளை பறித்து அதில் குச்சிக்கு அருகில் நுனியில் இருந்து அடி வரை கீறி விட்டு கடைசியில் தொங்குமாறு செய்து, அதை பின்னி ஒரு பாம்பு போல் செய்வோம். தென்னை ஓலைகளில் இருந்து ஊது குழல் செய்வதும் எளிது. ராக்கெட் மாதிரி அந்த ஓலைகளை பறக்க விடவும் செய்யலாம். எங்களுக்குள் இருக்கும் குரங்கு விழித்து எழுந்து விட்டால், தென்னை மரத்தில் ஒரு கால் பங்கு உயரம் ஏறுவோம்.

இவ்வாறு தென்னை மரத்தின் பயன்கள் பல. (தென்னை மரத்தின் பயன்கள் என்ன? என்ற பரிட்சை கேள்விக்கு நியாயமான பதில் இதுதான் என்பது அடியேனின் அக்கால எண்ணம்).

காம்பௌண்டை பிரித்து விற்க வேண்டிய ஓர் சூழ்நிலையில், அம்மரத்துக்காரர் வந்தார். அவருடன் மேலும் சில நபர்கள் வந்தனர். அவர் ஒரு சில மரங்களை கைகாட்டி அவர்களுடன் விவாதித்து கொண்டிருந்தார். ஒரு வாரம் கழித்து நாங்கள் பார்த்தது அம்மரங்களின் வீழ்ச்சியை. நான்கு மரங்களும் ஓரிரு நாட்களில் சாய்ந்தன. அப்போது நான் ஒரு துயரமும் இன்றி அதை வேடிக்கை பார்க்க அசாத்திய தைரியம் அடைந்தவனானேன். அந்த தென்னை மரத்துக்காரரும் அவ்வாறே எண்ணியிருக்க கூடும்.
(தென்னை மரத்துக்காரர் - முற்றும்)

- பாரி

No comments: