Monday, April 13, 2009

தமிழீழமும், இந்திய மக்களவைத் தேர்தலும்

சில வாரங்களாகவே இருந்து வரும் எரிச்சல், இந்த கட்டுரையை எழுதத் தூண்டுகின்றது.
எனக்கு கடந்த சில வாரங்களாக பத்தாண்டுகளுக்கும் மேலாக கலைஞர் மீது வைத்திருந்த மதிப்பு சரிந்து வந்தது. ஆனால் எப்போது திரு.பிராபாகரனை பற்றியும் அவரை நடத்த வேண்டிய முறை பற்றியும் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியதை படித்தேனோ அப்போதிருந்து ஒரு வித அருவெறுப்பும், அய்யோ இவரையா தமிழினத்தலைவர் என்று நினைத்திருந்தேன் என்ற ஏமாற்றமும் மிஞ்சி நிற்கின்றது.

இந்த தமிழினத் துரோகி செய்த வரலாறு மன்னிக்காத குற்றங்கள் என எனக்கு படுவதை தொகுத்து மக்களிடையே பிரச்சாரம் செய்ய வேண்டியதை கடமையாக நினைக்கின்றேன்.
வீரத்தியாகி திரு. முத்துக்குமார் அவர்களின், உச்சபட்ச தியாகத்தை அடுத்து தமிழகத்தில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஒரு பேரலை உண்டானது. இந்த எழுச்சி, கட்சிகளுக்கு அப்பாலும் பரவி, பற்பல வடிவிலான போராட்டங்கள் மூலம் சிங்கள ஆதிக்கத்திற்கும், இராணுவ நடவடிக்கைக்கும் எதிர்ப்புகள் துணிச்சலாக வெளிவந்த வண்ணம் இருந்தது. இதில் "விகடன்" போன்ற பத்திரிக்கைகளும், பங்கு பெற்ற வண்ணம் இருந்தது வியப்பான உண்மையாகும். (வியாபாரத்திற்காக என்று கூறி புறந்தள்ளினாலும், அவர்களது பதிப்புகள் ஈழத்தமிழர்களின் நலனுக்கு நிச்சயம் எதிரானதாக இருக்கவில்லை).

தமிழினத் தலைவராக தன்னை நினைத்திருந்தால், இந்த எழுச்சியை தனது உணர்ச்சியின் ஒத்ததிர்வாக பார்த்திருக்க வேண்டும். இந்த தருணத்தில்தான் மாகாணங்களின் ஐக்கியமாகிய இந்திய மக்களவைத் தேர்தலும் வருகின்றது. இந்த இடத்தில், தனது குடும்ப நலனை மட்டும் முன்னிறுத்தி, ஈழப்போராட்டத்திற்கு எப்போதுமே எதிர்ப்பு நிலை எடுக்கும் காங்கிரஸ் கட்சியிடம் தேர்தல் உடன்படிக்கை செய்து கொண்டது, என்னை போன்ற சாமனியனுக்கு மிக மோசமான வெறுப்பை உண்டாக்கியது. குறிப்பாக, இந்திய இராணுவத்தின் சிங்களர்களுக்கான உதவியும், மற்ற தொழில்நுட்ப உதவியும் காங்கிரஸ் அல்லாத எந்த அரசும் செய்திருக்காது என்றே நினக்கின்றேன்.

இதற்கும் மேலாக, கலைஞரின் இராஜ தந்திரம், அதாவது நயவஞ்சகம், ஈழத்தமிழர்களுக்கு எதிராக திரண்டு இருக்கும் அணியை பிரிப்பதில் தனது குயுக்தியை காட்டியதில் இருந்து தெளிவாக தெரிந்தது.


இந்த தன்மான தலைவர் செய்த அரும் பெரும்பணி என்னவென்றால், ஈழத் தமிழர்களுக்கான தமிழ் நாட்டு தமிழர்களின் உணர்வை ஒரு தேர்தலை தீர்மானிக்கும் காரணியாவதிலிருந்து அப்புறப்படுத்தியது. இவரது தலைமையில் இருக்கும் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழீழருக்கு எந்த வித நன்மையும் இல்லை. ஜெயலலிதா அவர்களது தலைமையிலான கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்க போவதில்லை. அதிமுக விற்கு உழைக்கும் "தோழர்கள்" மறைமுகமாக பா.ஜ. க. ஆட்சி அமைக்கவே உதவ போகின்றார்கள்.இப்படி அவிழ்த்து கவிழ்த்த விட்ட நெல்லிக்காய் மூட்டையாக போய்விட்டது தமிழர்களின் உணர்வு. கலைஞரே, உங்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கின்றேன். தமிழர் எதையும் தாங்குவர், ஆனால் தேர்தலில் தக்க பதிலடி கொடுத்தே தீருவர்.


இப்போது நினைக்கின்றேன். ஜெயலலிதா எனக்கு உவப்பான தலைவரல்ல. ஆனால் அவர் முதல்வராக இருந்திருந்தால், போராட்டம் நன்கு பழுத்து வெடித்திருக்கும். கலைஞர் ஆட்சி போல நீர்த்து போயிருக்காது. பாருங்கள் இப்போது கூட, வை.கோ.,அவர்கள் இரயில் நிலையம் சென்றதால்தான், (அதில் அவருக்கு ஏற்பட்ட அவமானம் எனக்கு வருத்தமே), முத்துக்குமார் பெயரில் மாணவர்களது இரயில் பயணப் பிரச்சாரம் ஊடகங்களில் அடிபடுகின்றது.


இங்கு ஒன்று சொல்ல தோன்றுவது, "அய்யா! எந்த ஒரு தனி நபரும், தமிழ் என்ற குடையை விட உயர்வாக இருக்க இயலாது".

2 comments:

செல்வநாயகி said...

பாலாஜி,

ஈழம், தமிழகம், தலைவர்கள், தேர்தல் என்ற சிந்தனைகள் விரக்தியையும், வேதனையையுமே திரும்பத் திரும்ப அளித்து வருகின்றன.

குறிப்பு:-
உங்கள் பதிவின் எழுத்துக்கள் மிகச் சிறியனவாகப் படிக்கக் கொஞ்சம் சிரமமாக உள்ளன.

Balaji-Paari said...

@செல்வநாயகி,
உங்களது கூற்று நிஜமே. ஆனால் இதற்கு சரியான பதில் தேர்தலில்தான் தர முடியும் என நினைக்கின்றேன்.

-பதிவின் எழுத்துக்களை இப்பொழுது சற்று பெரிதாக்கியுள்ளேன். குறிப்பிற்கு நன்றிகள்.