Saturday, January 10, 2009

பனிப்புயல்

வாழ்வென்னும் நீரோட்டம் தற்போது எங்களை இட்டுச் சென்ற புதிய இடம் மனதுக்கு மிகவும் இதமானதாக இருக்கின்றது. பணி மற்றும் குடும்பச் சூழல் போதுமான நேரத்தை எடுத்துக்கொண்டாலும், உயிர்ப்புள்ளதாக இருக்கின்றன.

ஒரு பனிப்புயலின் நடுவில் எங்களுக்கு இந்த வருடம் துவங்கியது. நாங்கள் வசிப்பது கனடா நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில். இந்த இடம் நவம்பர் முதல் ஏப்ரல் வரை மிகவும் குளிருடன் இருக்கும். பெருபாலும் -1 முதல் -20 வரை தட்பம் குறையும். இந்த காலங்களில், இப்பகுதியில் ஏற்படும் காற்றுஅழுத்த தாழ்வு மண்டலம் பெரும்பாலும் ஒரு புயலாக உருவெடுக்கும். ஒரு வருடத்தில் ஐந்து அல்லது ஆறு முறை இந்நிகழ்வு தோன்றும்.

இந்த சமயத்தில், -1 முதல் -3 வரை தட்பம் இருந்தால், காற்றழுத்த தாழ்வு மண்டலம் பனி மழையாக பொழியும். காற்று மணிக்கு 70 முதல் 110 கி.மீ வரை வீசும். சுமார் 24 மணி நேரத்தில் 30 முதல் 45 செ.மீ. உயரத்திற்கு பனி விழுந்து விடும். நாம் வாகனங்களை செலுத்துவது என்பது நினைத்து கூட பார்க்க முடியாது. நமக்கு ஒரு மீட்டர் தொலைவு வரைதான் பார்க்க இயலும். இதனை இங்கு white out என்று கூறுவர். இத்தருணங்களில் முன் கூட்டியே வானிலை அறிக்கை தொலைக்காட்சி, வானொலி வழியாக மக்களுக்கான எச்சரிக்கை வந்து கொண்டே இருக்கும். இதனையும் பல வாகன விபத்துகள் ஒவ்வொரு முறையும் நடந்த வண்ணமே இருக்கும்.

நாங்கள் இருக்கும் பகுதியில், ஜன. 1 அன்று பெரிய பனிப்புயல் தாக்கியது. அன்று மட்டும் 45 முதல் 55 செ.மீ, பனி தரையில் காணப்பட்டது. இந்த பனிப்புயல் வந்தால் பெரும்பாலும் முன்னெச்சரிக்கையாக தேவையான உணவு மற்றும் எதிர்பாராத மின்வெட்டுக்கான ஆயத்தங்களும் செய்து கொள்வோம்.

ஆனால் பனிப்புயல் இங்குள்ள சிறார்களுக்கும், பனிச்சறுக்கு ஆர்வலர்களுக்கும் குதூகலத்தை கொடுப்பதில் தவறுவதில்லை. பனி மனிதன் செய்வது, வீட்டின் முன் குவிந்து இருக்கும் பனிமலையில் ஏறி சறுக்குவது போன்ற விளையாட்டுக்கள், குழந்தைகளை உற்சாகமாக்கும்.
எங்களுக்கும் பனிப்புயல் உற்சாகத்தை கொடுக்கும் ஏனென்றால் அன்று பல்கலைகழகத்திற்கு விடுமுறை!!

இது தொடர்பான புகைப்படங்களை அடுத்த பதிவில் இடுகின்றேன்.

அன்புடன்
பாலாஜி-பாரி

No comments: