Saturday, January 03, 2004

புதிர்

அந்த புதிர் மிகவும் அழகானது. நேர் கோட்டில் செல்லும் மத்தாப்பு கம்பி சட்டென்று சகல திசைகளிலும் பூ வாரி இறைப்பதை போல அழகானது. மாலை நேர உலாவில் பூந்தோட்டம் வழியே செல்லும் போது, அவ்வேளை ஆட்கொள்ளும் நறுமணம் போன்றது. சின்னக் குழந்தையை கண்கள் அகல விரியச் செய்யும் கவின்மிகு வியப்பை போன்றது.

புதிர் பிரிக்க வருபவருக்கு ஆக்க சக்தியும், அளவற்ற நம்பிக்கையும் கொடுக்க வல்லது அப்புதிர்.

அறியும் வரைதான் புதிர் அழகு என்பர். ஆனால், அப்புதிர் அறிந்த பின் மேன்மேலும் அகண்ட பல தளங்களில் பல அரிய புதிர்களை மட்டும் காட்டுவது அப்புதிரின் பண்பு. அறிய முயலும் பாதையில் களைப்பை உண்டாக்கும். எண்ணக் கருவூலம் சிதறி அடிக்கப்படும் அப்பயணத்தில். சிதறிய துண்டுகளோ மேலும் அழகானதாகவும் உள் மனதை கவரும் வகையில் பாங்குற அமையும். பயணிப்பதற்கு பல விதைகள் நாங்கள்! என்று வழித்தடம் இடும்.

தூக்கி கவிழ்த்துப் போட்டாலும் அந்தரத்தில் பல தளங்களை காட்டி மிதக்கச் செய்யும்.

அந்த மஞ்சள் மலரின் மெல்லிய இதழ் போல வலிமையை தன்னுள் கொண்டு, மிகவும் எளிமையை காட்டும். " ஆகா! எளியதே அழகு" என்ற பேருண்மையை அப்பயணத்தில் முரசறிவிக்கும். முயற்சியை பேருவகையுடன் தொடர வழி செய்யும். கால்த்தால், பரிமாணத்தால் எப்படி கடக்கப் போகிறோம் என்ற கவலையை தோற்றுவித்தாலும் எல்லையற்ற பெருவெளியில் தூலம் கரைந்து சென்று, எண்ண அதிர்வலையை பெருவெளியில் நிறைக்க அன்றே அப்பயணம் முடியும், மேலும் ஒரு புதிராக, மற்றொரு பயணத்தின் துவக்கமாக.........!!!

தான் இருக்கும் நிதர்சனத்தை காட்டிய அந்த புதிருக்கு இக்கணம் நன்றி.........!!!!!

-பாரி

No comments: