Sunday, October 10, 2004

மூளை சுமப்பவர்களின் பயணம்!!

மூளையை அதன் இடத்தில் இருந்து விலக்கி, அமிக்டாலாவை ஊதி பெரிதாக நிரப்பி மூளை இருந்த இடத்தில் அதை மறு ஈடு செய்த நபர்கள் இவர்கள். இவர்களின் பாதை அனைத்தும் அவர்களது உணர்வால் நிரப்பப் பட்டிருந்தது. அவர்கள் சந்தோஷத்தையும் கொண்டாடினார்கள். துக்கத்தையும் கொண்டாடினார்கள். இவர்களும் பல இடங்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கி உணர்வால் மட்டுமே உந்தப்பட்டு சென்று கொண்டிருந்தனர்


ஒரு சமவெளியில் மாடுகளின் மேய்ச்சல் நிலத்தின் அங்கமாக இருந்த அச்சிறுவனின் கையில் ஒரு புல்லாங்குழல். சுற்றி இருந்த அந்த இடத்தின் வெற்றிடத்தை நிறைத்தது அவனது இலக்கணங்களுக்குள் வராத மன ஓசை. நுரையீரலில் தோன்றி அமிக்டாலாவின் அற்புதத்தில் கலந்து புல்லாங்குழலின் துளை வழியே வந்த இசை மாடுகளையும் மரங்களையும் அவன்பாற் வசப்படுத்தியது. இசை நன்று. இலக்கணங்கள் கட்டுமானம். புது இசை அவனது உணர்வு. கட்டுமானங்கள் உடைபட்டன. அவன் வாழ்ந்து கொண்டிருந்தான்.

ஆடிக்கொண்டு வந்த அவளையும் அவன் இசை கவர்ந்தது. அவள் நின்றாள். அவள் மயங்கினாள். அவள் குதூகலித்தாள். அச்சிறுவனிடம் " கண்ணனின் விந்தை நான் கண்டேன். சிறுவ என் பயணத்தில் இணைந்து கொள். நோக்கம் பயணத்தின் பாதையில் நாம் காண்போம். என்னில் இருந்த உணர்வின் பிரதிபலிப்பை உன் குழலின் வழியே அந்த பசுக்களை அடையக் காண்கின்றேன். அவைகள் நன்றிக்குரியன. நாம் செல்வோம்" என்றவாறே முந்தானையில் முடிந்த மூளையின் வெளிப்புற சாயலை அவனிடம் காட்டினாள். அவனும், குதித்து எழுந்து புதரில் நரிக்காக வைத்துவிட்ட அந்த மூளையை எடுத்துக் கொண்டு, பிரபஞ்ச மொழிக்கு ஊடாக அப்பாதையில் நடக்க துவங்கினான்.

சற்று தொலைவில் இவர்களைப் போல் பலர் எந்தவித கட்டுபாடுமற்று தங்கள் நிலையில் ஆழ்ந்த களிப்பும், பேருவகையும், நிகரற்ற சோகமும் தனதாக்கி கொண்டு இவர்கள் சென்ற திசையிலேயெ சென்று கொண்டிருந்தனர். ஓவென்று அழுது கொண்டும், ஹா... ஹா.... என்று சிரித்து கழித்தும்.

-தொடரும்

-பாரி

No comments: