Friday, August 27, 2004

இதயத்தை சுமக்கும் கணங்கள்...

குருதி வடிந்து கொண்டே இருக்கும் தனது இதயத்தை முதலில் கைகளில் ஏந்திக் கொண்டு நடக்கத் துவங்குகையில் அதன் ஆர்ப்பரிப்பு ஒரு இம்சையை கொடுத்தது. ஆகையால் அதனை ஒரு பையில் இட்டு, அதன் கைப்பிடி உதவியுடன் வசதியாக தூக்கி சென்றால் என்ன? என்ற எண்ணம் மேலிட, அவ்வெண்ணம் செயல் வடிவம் பெற்றது. அந்த இதயத்தின் ஆர்ப்பாரிப்புகள் தற்காலிகமாக அடக்கப்பட்டது.

பல கண்கவரும் வண்ணங்களை காட்டி வளர்க்கப்பட்ட ஒரு சிறுமி அந்த கைப்பையில் இருக்கும் கருஞ்சிவப்பு இரத்தம் தோய்ந்த இதயத்தை காண்கின்றாள். உடனே தனக்கு கூறப்பட்ட ஆப்பிள் பழம் அவள் நினைவில் வர, " கைப்பையில் ஆப்பிள்! கைப்பையில் ஆப்பிள்" என்று உற்சாக குரல் எழுப்பினாள்.

தன் இதயம் வெளியில் பளபளப்பான கருஞ்சிவப்புடன் இருந்தாலும் அதை அறுத்துப் பார்த்தால் அதனுள்ளே எங்கும் வெண்மை படர்ந்து இருக்கும் என்ற எண்ணம் சட்டென்று தோன்றி மறைகின்றது. ஆனாலும் தனது நடையில் சற்றும் தளர்வில்லை.

ஒரு பூனையை ஒரு பையில் வைத்துக் கொண்டு சற்று தூரம் நடந்துள்ளீர்களா? அதுவும் ஒரு சுறுசுறுப்பான பூனையுடன்?. அப்பூனையை விட மென்மையான அதைவிட சுறுசுறுப்பான தனது இதயத்தை அப்பையில் சுமந்து செல்வது சற்று வேடிக்கையாகவே இருந்தது. ஆனாலும் ஆர்பாரித்த இதயம் பூனை போல் அல்லது அதைவிட சமர்த்தாக இருந்ததால் நடையை சற்று நிதானமாக்க நினைத்தாலும், நடையின் நோக்கம் நடையை தளரச் செய்யவில்லை.

அந்த கைப்பையில் இருந்த இதயம், ஒரு குழந்தை ஓவென்று அழுது பின் சமாதானமடைந்து, மறுபடியும் அழ ஆரம்பிப்பது போல மீண்டும் ஆர்ப்பரிக்க ஆரம்பித்தது. தனது கைகளால் அதனை வருடி சமாதனமடையச் செய்த முயற்சி பலனற்றுப் போனது. குருதி ஊறும் இதயத்தின் ரத்தம் மட்டுமே உள்ளங்கையில் மிச்சம். ஆனாலும் தனது நடையில் தளர்வில்லை.

சந்தியா காலங்களில் மலர்ந்த சிறிய ஆரஞ்சு நிற தண்டுகள் கொண்ட அழகிய வெண்மையான இதழ்களுடன் அமைந்த பவளமல்லி மலர்களிலிருந்து கிளம்பிய நறுமணம் நாசியை வருடி சிலிர்க்கச் செய்தது. ஆனாலும் இதயத்திற்கு இதமோ இம்மணம் என தோன்றும் பொழுதே, இதயம் தனியாக தனது கைப்பையில் இருக்கின்றது என்ற நினைவு ஒரு வறண்ட புன்னகையாக வெளிப்பட்டது.

-தொடரும்.

(இது ஒரு தொடர் முயற்சி. இதன் முதல் அத்தியாயம் இப்போது நீங்கள் படித்தது. ஒவ்வொர் அத்தியாத்தின் தலைப்பு அப்பதிவின் தலைப்பாக அமையும். கடைசியில் இதை தொகுத்து ஓர் நாமகரணம் செய்வோம். -அன்புடன் -பாரி )

No comments: