Thursday, August 12, 2004

அறிவார்ந்த அடிமைகள்

இப்போதெல்லாம் எனக்கு தோன்றுகின்ற சில விசயங்களை நான் பகிர்ந்து கொள்கின்றேன். இது எதற்கும் களிம்பல்ல.

ஒரு விசயம் நடக்கின்றது. அந்த விசயத்தை நீ பார் என்றால், அவர்கள் தங்களை அந்த விசயங்களோடு இணைத்து கொள்கின்றனர். தாங்களே அவ்விஷயம் என பாவித்து கொள்கின்றனர். இது எந்த வகை மனோபாவம் என்றால், ஆங்கிலேயனுக்கு கணக்கு எழுதி அதனால் தங்களுக்கு ஓர் பெருமையும், அடிவருடியதால் கிடைத்த எச்சில் பொட்டலங்களை அலுவுலகத்தை விட்டு வெளிவந்த பின் "பார்! என் கையில் பொட்டலம். நான் உங்களினும் மேலானவன்!!" என்று பாமர சனங்களை பயமுறுத்திய பச்சோந்தி மனோபாவம்.

இவர்களுக்கு போராட்டம் என்பது, பள்ளியில் டப்பா அடித்து மதிப்பெண் பெறுவது மட்டும்தான். தன்னைவிட பலம் வாய்ந்த தெரிந்தே தவறு செய்யும் அமைப்பை எதிர்ப்பதை இவர்களால் நினைத்து கூட பார்க்க முடியாது. தன்னை அடிமையாய் வைத்துள்ள ஓர் அமைப்பு எதை எதிர்க்கின்றதோ அதை அவர்களும் எதிர்ப்பர். ஏனென்றால் அதுதான் அவர்களது உளவியலுக்கும் இருப்புக்கும் பாதுகாப்பு என்று நினைக்கின்றனர். இவர்கள் அந்த அமைப்பினால் செய்யப்படும் சுரண்டல்களயும் துரோகத்தையும் இனி வருங்காலங்களில் வருந்தாமல் பாரம் சுமப்பர். அவ்வளவுதான் இவர்கள்.

இந்த இடத்தில்தான், நான் மேலும் சில விசயங்களை கூற விரும்புகின்றேன்.

1. இவர்களால் அழ முடியுமே தவிர அடித்தவரை நேர்கண் கொண்டு பார்க்க முடியாது.

2. அடித்தவர் ஏன் அவ்வாறு என்று சொல்லாமல், ஓர் மிட்டாய் அல்லது ஓப்பியம் கொடுத்து அடியை மறக்கச் செய்வார்.

3. இவர்களும் எப்படி எங்கள் தலைவர்கள் என்று அவர்களை பாராட்டி ஓப்பிய பயன்பாட்டை எதிர்த்துக் கொண்டே மகிழ்ச்சியாக அதை உட்கொள்வர்.

4. இவர்களும் விடுதலை பற்றி பேசுவர். அவர்கள்தான் உலகில் (நாட்டில்) உள்ளனர் என்றும் மற்றவர்கள் முன்னிருந்தவாறே இருக்க (தங்கள் அடிமையாய் இருக்க) வேண்டும் என்றும் கூறுவர்.

5. இந்த விசயங்களை போற்றி பாதுகாக்க பலரின் அருளாசிகளும் உண்டு.

இவர்கள் பேசுவதில் உள்ள ஆதிக்க மனப்பான்மை எதிராளியை மருளச் செய்யும். இவர்களில் எவரேனும் ஈராக் சம்பவத்தை எழுதிய அதே வேகத்துடன் மணிப்பூர் சம்பவத்தை பற்றி எழுதுகின்றனரா?. இவர்களுக்கு முக்கியம் சொந்த நலன்கள். இவர்கள் பிரச்சினைகளை திசை திருப்புவதிலும், ஆடம்பர பேச்சுகள் மூலமும், கோஷ்டியாய் வந்து தாக்குவதன் மூலமும் தங்கள் அமைப்புக்கு அடிவருடி தங்களை இழந்து கொண்டே தங்களின் போலித்தனத்தை சற்றும் வெட்கமின்றி தொடர்வார்கள்.

அடிப்படையான நேர்மைத்திறனும், உண்மையான மனிதப் பண்பும் பார்த்து இவர்களிடம் பேசினால் சேற்றை வாரி இறைப்பர் ஏனென்றால் அவர்கள் உழல்வது அதிலேதான்.

நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்....


அன்புடன்
பாலாஜி-பாரி

No comments: