இது மற்றொரு ஜீவன். தன் இதயத்தை ஒரு கூடையில் சுமந்து கொண்டு அதை இடுப்பில் இட்டு காக்கை, கழுகுகளிடமிருந்து காப்பாற்ற ஒரு மெல்லிய துணியால் மூடி ஒரு ஒற்றையடி பாதையின் வழியாக முக்கிய வீதியை அடைந்தது.
அஜ்ஜீவனின் நடையிலும் தீவிரம். முகத்தில் ஒரு நிராசை. என்ன இது என்று சொல்ல இயலா ஒரு குறிப்பில்லாத முகத்தோற்றம்.
அந்த ஜீவனின் நடை முன்னோக்கியே இருந்தது. பையில் இதயத்தை சுமப்பவர், அந்த ஜீவனை சந்திக்க ஆவலானார். தனது துரித நடையில் நம்பிக்கை வைத்து, அடிகளை எட்டிப் போட்டார். அந்த ஜீவனின் கவனத்தை கவர தன்னால ஆன அனைத்தையும் செய்தார். ஒரு வழியாக அவரை எட்டினார். கூடையில் இதயம் சுமப்பவரை சற்று கடந்ததும், தலையை மட்டும் திருப்பி, எங்கே என்று கண்களால் வினவினார். ஆனாலும் இருவரின் நடையிலும் சற்றும் வேக குறைச்சல் இல்லை.
கூடையில் இதயம் சுமப்பவரோ, 'பாதைகள் பலவானாலும் போகும் இடம் ஒன்று' என்று கூற, கைப்பைக்காரர் அமைதியுற்றார்.
கூடையில் இதயம் சுமப்பவர் தான் கடந்து வந்த பாதைகளை நினைக்கும் பொழுது, சிறிது துணுக்குற்றார். தனது குழந்தை பருகிய அமிர்தம் சுரந்த முலைகளில் ரத்தம் சுரக்க துவங்கும் கணம் தனது இதயத்தை பிடுங்கி கூடையிலிட்டது நினைவுக்கு வர அவருக்கு வியர்வை பெருக்கெடுத்தது, இதயம் கூடையில் இருந்தாலும்.
பதின்ம வயதில் இருக்கும் தனது வாரிசை கிளம்பிய இடத்திலே மட்டும் விட்டு விட்டு, தனது இதயத்தை பிய்த்து கையில் வைத்துக் கொண்டு இவ்வளவு தூரம் வந்த உடன் தன் பாச உணர்வுகள் மறக்கடிக்கப்பட்டது உறைத்தது. ஆனாலும் அது எந்த ஒரு வலியையும் தோற்றுவிக்கவில்லை. எதேச்சையாக கைகள் நிரடும் போது, காய்ந்த போன ரத்த துளிகள் மட்டும் மூளைக்கு செய்தியாகச் சென்றது.
அவர்கள் நடந்த போது உண்டான சரக் சரக் சப்தம் மட்டுமே அவர்களுக்கு ஒலித் துணையாக இருந்தது.
அவர்கள் சென்ற பாதை சில மலைகளுக்கு நடுவில் ஒரு பள்ளத்தாக்கை அடைந்தது. அப்பள்ளத்தாக்கு அவர்கள் வந்தது போன்ற பல பாதைகளின் சங்கமமாக இருந்தது. அப்போதுதான் கைப்பைக்காரர் அங்கே பல மனிதர்கள் பரவி இருந்ததைக் கண்டார். மரத்தின் நிழல்களில், பெரிய பாறைகளின் அடியில், சிறிய குகைகளில், இவ்வாறு பல இடங்களில். அனைவரிடத்திலும் ஒரு கைப்பையோ அல்லது கூடையோ அல்லது பாலிதீன் பைகளோ அல்லது கனச்துர, செவ்வக வடிவ டப்பாக்களோ இருந்த்தது.
மனத்தின் சார்புகளை புறக்கணிக்க அவர்கள் முடிவு செய்தார்களா? அல்லது முடிவு செய்ய வைக்கப்பட்டார்களா?.
-தொடரும்
பாரி